ஒரு கரோனா போகிறது; இன்னொரு கரோனா வருகிறது; என்றைக்கும் மருந்தும் தேவை; விஞ்ஞானிகளும் தேவை; மருத்துவமனைகளும் தேவை!
திராவிடர் கழகம் அரசியலுக்குப் போகாமல், பதவி அரசியலை நோக்காமல், மக்களை உருவாக்கக்கூடிய இயக்கமாக நடந்து கொண்டிருக்கிறது!
‘‘பெரியார் உலக மயமாகிறார்;
உலகம் பெரியார் மயமாகிறது!’’
திராவிடர் கழகம் அரசியலுக்குப் போகாமல், பதவி அரசியலை நோக்காமல், மக்களை உருவாக்கக்கூடிய இயக்கமாக நடந்து கொண்டிருக்கிறது!
‘‘பெரியார் உலக மயமாகிறார்;
உலகம் பெரியார் மயமாகிறது!’’

சிங்கப்பூர், ஜூலை 28 எப்போதும் நோயை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். கரோனா தொற்று போய்விட்டது என்று நினைத்தால், ஒரு கரோனா போகிறது; இன்னொரு கரோனா வருகிறது. என்றைக்கும் மருந்தும் தேவை; விஞ்ஞானிகளும் தேவை; மருத்துவமனைகளும் தேவை. அதற்காகத்தான் இந்த இயக்கம் அரசியல் பக்கத்தில் போகாமல், பதவி அரசியலை நோக்காமல், மக்களை உருவாக்கக்கூடிய இயக்கமாக நடந்து கொண்டிருக்கிறது. அதில் வெற்றி பெற்று, ‘‘பெரியார் உலக மயமாகிறார்; உலகம் பெரியார் மயமாகிறது’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின்
359 ஆவது நிகழ்வு!
359 ஆவது நிகழ்வு!
கடந்த 18.7.2026 அன்று சிங்கப்பூரில் ‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவினரின் 359 ஆவது நிகழ்வாக ‘‘மலேசியா சிங்கப்பூரில் பெரியார்’’ புத்தகத்தின் ஆய்வுரையினை ஜெர்மனியிலிருந்து காணொலிமூலம், முனைவர் சுபாஷினி அவர்கள் நிகழ்த்தினார். அந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் சிங்கப்பூரிலிருந்து காணொலிமூலம் பங்கேற்றார் . ஆய்வுரையின் முடிவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
குமரேசன்: வணக்கம்! ஆசிரியர் அவர்களை நீண்ட நாள்களுக்குப் பிறகு சந்திப்பதில், உணர்வுப் பூர்வமான மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் அவருக்கு நான் வாக்களித்த ஒன்றை, நிறைவேற்ற முடியாத ஒரு சின்ன வருத்தத்தையும் அவரோடு பகிர்ந்து கொள்கிறேன். சூழல்களை அப்படியே ஆசிரியர் அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.
உளமார்ந்த பாராட்டுகள்!
இப்பொழுது நான் நிகழ்வுக்கு வருகிறேன். ஆசிரியர் அவர்கள் இந்த நூலை வழங்குவதற்கான ஓர் ஏற்பாடு அவர் மனதிற்குள்ளே வைத்து அதை உருவாக்கி இருப்பார் இல்லையா? அந்த அத்தியாயங்களை அடுக்கிக்கொண்டு, அதை வரிசைப்படுத்தி தொகுத்தி ருப்பது, அதைச் சரியாக உள்வாங்கிக்கொண்டு நமக்கு கொடுத்தார். அத்தியாயங்களை தொகுப்பதில் இருக்கிற அந்த நுட்பத்தையும் கூட புரிந்து கொண்டு, நமக்கும் புரிவது போல முன்வைத்தார் நம்முடைய முனைவர் அவர்கள். அதற்காக உளமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்து கொள்கிறோம்.
அந்தப் புத்தகத்தின் வாயிலாக அவர் சுட்டிக்காட்டிய பல குறிப்புகளை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறேன். அன்றைய நிலையிலேயே அங்கே உரையைக் கேட்பதற்கு அத்தனை ஆயிரம் பேர் கூடினார்கள் என்று ஒவ்வொரு இடத்திலும் வருகிறது, அதில் மிக முக்கியமான ஒரு செய்தி இருக்கிறது. இன்றைக்கு அப்படியெல்லாம் அந்தந்த அமைப்புகளுக்கு ஆயிரக்கணக்கில் மக்களைக் கூட்ட முடிகிறது; அரங்குகளுக்குள்ளே முடிகிறது. ஆனால், பொது வெளியிலே அத்தனை ஆயிரம் பேர் வந்து கேட்க வருகிறார்கள் என்கிற பண்பாடெல்லாம், இன்று குறைந்துவிட்டது. அந்த ஒரு கால மாற்றமும் ஏற்பட்டதாகக்கூட நான் பார்க்கிறேன். பெரிய அளவுக்கு அப்படி இல்லை. அது ஒரு பெரிய அசைப்பை ஏற்படுத்த வேண்டுமே என்ற கவலை எனக்கு இருக்கிறது. எனவே, அன்றைக்குப் பெரியார் அவர்களுடைய உரையை கேட்பதற்கு சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் அத்தனை ஆயிரம் பேர் கூடினார்கள் என்பதோடு நாம் விட்டுவிடக்கூடாது; மீண்டும் இந்த மண்ணிலேயும் நிலைநாட்டியாக வேண்டும் என்கின்ற ஓர் இணைப்பு – ஒரு தூண்டுதல் அவருக்கு இருப்பதாக நான் எடுத்துக் கொள்கிறேன்.
‘‘ஜாதிப் பாகுபாட்டைக் கைவிட்டுத் தொலைங்கப்பா!’’ என்றார் தந்தை பெரியார்!
அடுத்து ஜாதி சார்ந்த, ஜாதி அமைப்புகள் சார்ந்த மக்களிடையே பேசும்போது கூட பெரியார் அவர்கள், ‘‘அந்த ஜாதிப் பாகுபாட்டைக் கைவிட்டுத் தொலைங்கப்பா’’ என்று பேசியது மிக முக்கியமானதாகும். அவர்களிடத்திலே சென்று, அவர்களுடைய எண்ணத்திற்கு மாறாக, அவர்கள் எதைப் பெருமை என்று கருதினார்களோ, அது எல்லாம் உண்மையான பெருமை இல்லை என்று, அவர்களிடமே எடுத்துச் சொல்லியிருக்கிறார். நாம் தனியாக மேடை போட்டு, அவர்கள் காதிலே கேட்பது போல் பேசுவது என்பது வேறு. அவர்கள் முன்னாலேயே நின்று, அவர்களிடமே பேசுவது என்பது வேறு. அது, பெரியாருக்கே இருந்த அந்த ஆளுமை எல்லாமுமாகச் சேர்ந்து அதைச் செய்ய வைத்தது; அவரும் அதைப் பொறுப்போடு செய்தார்.
கூடுதலாக உள்வாங்கிக் கொள்கிறேன்!
அதேமாதிரி உழைப்பாளி மக்களிடம் சென்று, அவர் பேசியது; வெறும் நகரத்திலே, படித்தோர் மத்தியில் மட்டுமல்லாமல், அந்த உழைக்கும் மக்கள் இருந்த பகுதிகளுக்குச் சென்று, அவர்களோடு உரையாடினார் என்பது கூட, நான் கூடுதலாக எதை உள்வாங்கிக் கொள்கிறேன் என்றால், நிச்சயமாக அவர் அங்கே உரையாற்றித் திரும்பிய பிறகு, அவருடைய உரையைக் கேட்ட உழைப்பாளிகள், தொழிலாளிகள் கணிசமான பகுதியினருக்கு, அவருடைய சுயமரியாதை உணர்வு என்பது மேலோங்கியிருக்கும். அல்லது அதுவரைக்கும் இல்லாதிருந்த அந்த உணர்வு வெடித்துக் கொண்டு வந்திருக்கும். அப்புறம் அது தொடர்ந்து இருக்கும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.
எப்படி சுயமரியாதைத்
திருமணங்கள் அங்கே நடந்தன?
திருமணங்கள் அங்கே நடந்தன?
ஏனென்றால், அந்தச் சுயமரியாதை உணர்வு என்பது, கூலி உயர்வால் கிடைத்துவிடாது. அதற்கான போராட்டங்கள் நடக்கும், கூலி உயர்வுக்கான ஒப்பந்தங்கள் திரும்பத் திரும்பக் கைெயழுத்தாகும்; பிறகு அதை ஒழுங்காக நிறைவேற்றுவதற்கான போராட்டங்கள் தொடரும், அது ஒரு பக்கம். ஆனால், இந்தச் சுயமரியாதை உணர்வு என்பது சமூக நீதியோடு சம்பந்தப்பட்ட, சமூக எழுச்சியோடு சம்பந்தப்பட்ட ஒன்று. அவரைச் சந்தித்த அந்த உழைப்பாளி மக்கள் அந்த உணர்வைப் பெற்றார்கள், பெற்றிருப்பார்கள் என்கின்ற என்னுடைய மதிப்பீட்டில் இருந்து அவ்வாறு புரிந்து கொள்கின்றேன். அதிலேயும் ஒரு முக்கியமான செய்தி. எப்படி சுயமரியாதைத் திருமணங்கள் அங்கே நடந்தன? அதில் பெரியார் உரையாற்றினார் என்ற தகவல்களை நான் இன்றைக்கு இணைத்துப் பார்க்கிறேன்.
ஒரு போராட்டம் தேவைப்படுவதாகக் கருதுகிறேன்!
இன்றைக்கு இந்தியாவில், உயர்நிலை நீதிமன்றங்கள் தலையிட்டு, இந்துத் திருமணங்கள் என்றால், இந்தச் சடங்குகள் படி நடந்தால்தான், அது ஹிந்து திருமணமாகப் பதிவு செய்ய முடியும் என்று எதிர்காலத்தில் இந்தச் சுயமரியாதை திருமணங்களுக்கு ஆப்பு வைக்கக்கூடிய வேலையைச் செய்து கொண்டிருக்கிறார். அந்தக் கால கட்டத்தில், அங்கே சுயமரியாதை திருமணங்களில் பெரியார் கலந்து கொண்டு உரையாற்றினார் என்ப தற்கான நீட்சி, இன்றைக்கு தமிழ்நாட்டில் அவ்வளவு எளிதில் அதை (சுயமரியாதைத் திருமணங்களைத் தடுப்பதை) அவர்களால் செய்துவிட முடியாது என்பது வேறு. ஆனால், அதற்கான எல்லா முயற்சிகளையும் செய்வார்கள் என்ற அந்த எச்சரிக்கையோடும், இங்கே நாடு தழுவிய அளவிலே சுயமரியாதை திரு மணங்களுக்கான அதிகாரப்பூர்வமான அங்கீகாரம், பதிவு என்பதற்கான ஒரு போராட்டம் கூட தேவைப்படுவதாகக் கருதுகிறேன். அந்தச் சிந்தனையும் முனைவர் சுபாஷினி அவர்களுடைய அந்த உரை முன்மொழிவிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.
இன்றைய சிங்கப்பூரில், இன்றைய மலேசியாவில், பெரியாரியத்தின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது?
ஆசிரியர் அவர்கள் பேசுகிறபொழுது அதற்கான சில விடைகள் கிடைத்தன என்றாலும் கூட, அதை ஒரு முழு கேள்வியாக வைக்க விரும்புகின்றேன். ஆசிரியர் அவர்களும் சொல்ல வேண்டும். சிங்கப்பூருக்கும், மலேசியாவிற்கும் திரும்பத் திரும்பச் சென்று, அங்கிருந்து பல்வேறு ஆய்வுகளைக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருக்கிற முனைவர் அவர்களும் சொல்ல வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அது என்னவென்றால், சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் பெரியார் சென்றார்; அங்கே எப்படிப்பட்ட ஏற்பாடு செய்தார், என்ன மாதிரியான உரைகளை ஆற்றினார் என்பது ஒரு பக்கம். இன்றைய சிங்கப்பூரில், இன்றைய மலேசியாவில், பெரியாரியத்தின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன். ஆசிரியர் அவருடைய மொழியிலும் கேட்க விரும்புகின்றேன்; முனைவரின் மொழியிலும் கேட்கி விரும்புகிறேன். நன்றி!
சிங்கப்பூரில், ஜாதிக்கோ, ஜாதி சங்கங்கள் உருவாவதற்கோ இடமே இல்லை!
தமிழர் தலைவர்: சுருக்கமாகச் சொல்லுகிறேன். சிங்கப்பூரைப் பொருத்தவரையிலே முழுக்க முழுக்க அங்கே ஜாதிக்கு இடமே இல்லை; ஜாதி சங்கங்கள் உருவாவதற்கோ, மற்றவற்றிற்கோ இடமேயில்லை. அங்கே உள்ள அமைப்புகளும், அரசும் தெளிவாக இருக்கிறார்கள். அந்தத் தலைமுறையினரும் தெளிவாக இருக்கிறார்கள்.
ஆனால், அதே நேரத்தில் மலேசியாவிலேயும் நல்ல ஏற்பாடுகள் நடந்தாலும் கூட, இங்கே இருக்கிற வர்களுக்கு ஜாதி உணர்ச்சி இல்லை. அந்தப் பிள்ளை களும் அந்த ஜாதி உணர்ச்சிக்கு ஆளாகாமல் இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில இருந்து, ஜாதிச் சங்கத் தலைவர்களாக இருக்கக்கூடியவர்கள், ஜாதி உணர்வைக் கிளப்பி, அங்கே புதிதாகத் தங்க ளுக்கு ஒரு இடத்தை தொகுதி மாதிரி உருவாக்கி கொள்ளலாம் என்பதற்கு, தமிழ்நாட்டிலிருந்து அடிக்கடி போய் ஜாதியை விதைத்துவிட்டு வரலாம் என்று நினைக்கிறார்கள். அதைத்தான் நான் கொசுவத்தி வியாபாரிகள் என்று சொன்னேன். எனவேதான், மலேசியாவைப் பொருத்தவரையில் மீண்டும் வெற்றி பெற முடியாது அவர்களால்! மலேசியாவில் மட்டுமல்ல, எங்கெங்கெல்லாம் புலம்பெயர்ந்து தமிழர்கள் படிக்கப் போய் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் மீண்டும் ஜாதியை உருவாக்கக்கூடிய ஒரு பேரபாயம் புதிதாகச் சில அமைப்புகள் மூலமாக உருவாகிக் கொண்டிருக்கின்றன. கனடாவில் ஜாதிக்கு எதிரான போராட்டம், ஆஸ்திரேலியாவில் அந்தப் போராட்டம், அதேபோல அமெரிக்காவிலும் வந்திருக்கிறது. ‘‘அமெரிக்காவிலும் ஜாதியா?’’ என்ற ஒரு புத்தகமே எழுதி இருக்கிறோம். ஆகவே, எப்போதும் நோயை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். கரோனா தொற்று போய்விட்டது என்று நினைத்தால், ஒரு கரோனா போகிறது; இன்னொரு கரோனா வருகிறது. ஒரு ‘பேர்ட் ப்ளூ’ வருகிறது.
‘‘பெரியார் உலக மயமாகிறார்;
உலகம் பெரியார் மயமாகிறது!’’
உலகம் பெரியார் மயமாகிறது!’’
ஆகவேதான், என்றைக்கும் மருந்தும் தேவை; விஞ்ஞானிகளும் தேவை; மருத்துவமனைகளும் தேவை. எப்போதும், “Eternal vigilance is the price of liberty” என்று சொன்ன மாதிரி, கவனத்தோடு இருக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த இயக்கம் அரசியல் பக்கத்தில் போகாமல், பதவி அரசியலை நோக்காமல், மக்களை உருவாக்கக்கூடிய இயக்கமாக நடந்து கொண்டிருக்கிறது. அதில் வெற்றி பெற்று, ‘‘பெரியார் உலக மயமாகிறார்; உலகம் பெரியார் மயமாகிறது’’ அதுதான் சுருக்கமான விடை.
நீண்ட காலத்திற்குப் பிறகு குமரேசனைப் பார்த்த நேரத்தில், ‘தீக்கதிர்’ குமரேசன் தோழர் இன்னமும் அந்த உணர்வு மங்காமல் இருக்கிறார் என்பதை நினைக்கும்போது புதிய உற்சாகத்தை பெறுகிறேன். நன்றி, வணக்கம்!
பெரியார் சொன்ன கருத்துகளோடு வளர்ந்தவர்கள்தான் நிறைய பேர்!
முனைவர் சுபாஷினி: மலேசியாவில நான் பிறந்து வளர்ந்த சமயத்தில் எல்லாம், பள்ளிக்கூட காலத்திலும் சரி, நான் ‘ஹையர் ஸ்டேடிஸ்’ வரைக்கும் – அந்தக் காலகட்டத்தில், என்னுடைய அப்பாவு டைய, அப்பாவுடைய அப்பா மலேயாவுக்குப் போன வர். அங்கே வணிகம் செய்வதற்காக! பெரியார் சுங்கைப்பட்டாணிக்குச் சென்றார் என்று சொன்னேனே, அந்தப் பகுதிகளுக்கெல்லாம் வணிகம் செய்யச் சென்றார்கள்.
பெரியார் சொன்ன மாதிரிதான், என்னுடைய அப்பா 1930 ஆம் ஆண்டில் பிறந்தவர். அப்பொழுது அவர் குடியுரிமை எடுத்துக்கொண்டவர். தமிழ்நாட்டில் இருந்து வந்த என் அம்மாவுக்கும் குடியுரிமை உரிமை எடுத்துவிட்டார். ஏனென்றால், பெரியார் சொல்லி விட்டுப் போகிறார். உறுதியாக நீங்கள் இங்கேயே இருங்கள். இந்த நாட்டிலேயே வளத்தை நீங்கள் சேர்த்துக்கொண்டு வாருங்கள். அந்த மாதிரியான கருத்துகளோடு வளர்ந்தவர்கள்தான் நிறைய பேர்.
1929 இல் வந்தப்போது, பெரியார் சொன்ன கருத்துகள் வேறு; 1954 இல் வரும்போது அவர் சொல்லிய கருத்துகள் வேறு!
ஜெர்மனியை எடுத்துக்கொண்டால், காரல்மார்க்ஸ் பிறந்த ஊர் ஜெர்மனி. காரல்மார்க்ஸ் வாழ்ந்த கால கட்டத்தில், அவரை எதிர்த்த நாடு ஜெர்மனி. ஆனால், இன்றைக்கு நாம் பார்த்தோமேயானால், காரல்மார்க்சின் அத்தனை எண்ணங்களையும் உள்வாங்கி கொண்ட ஒரு நாடாக ஜெர்மனி இருப்பதைப் பார்க்கிறோம். பொதுவுடைமை நாடு என்று ஜெர்மனி சொல்லிக் கொள்ளாது! ஆனால், காரல்மார்க்சினுடைய அத்தனை தத்துவத்தையும் இயல்பாக மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிற ஒரு நாடு ஜெர்மனிதான் என்று சொல்ல வேண்டும். அவர் வாழ்கின்ற நாடு, அவர் இன்றைக்கும் வாழ்கின்றார் என்றுதான் நாம் சொல்கிறோம். அந்த மாதிரிதான் மலேசியாவை இன்றைக்கும் நாம் பார்த்தால், நேற்று பேசிக் கொண்டிருந்த ஒரு நண்பர், ‘‘சுபா, பெரியார் இப்போது நமக்குத் தேவையா?’’ என்று கேட்டார். நான் சொன்னேன், ‘‘இந்தக் காலகட்டத்தில் தேவை, கட்டாயமாகத் தேவை. ஏனென்றால், ஒவ்வொரு காலகட்டத்துக்கும் வருகிற சில மயக்கங்கள் இருக்கிறது மக்களிடம். அந்த மயக்கங்களைப் போக்குவதற்கு, அந்த மாதிரியான ஒரு பகுப்பாய்வு செய்வதற்கு அவருடைய கருத்துகள் தேவை. ஏனென்றால், அவர் ஒவ்வொரு காலகட்டத்திலும், முதலில், 1929 இல் வந்தப்போது, அவர் சொன்ன கருத்துகள் வேறு. 1954 இல் வரும்போது அவர் சொல்லிய கருத்துகள் வேறு.
ஜாதி என்றால், எங்களுக்குத் தெரியவே தெரியாது!
ஏனென்றால், மக்களுக்கு என்ன தேவையோ, அதைத்தான் சொல்கிறார். ஆக, நாங்கள் வாழ்ந்த போது அந்த ஜாதியை நாங்கள் பார்க்கவில்லை. ஆசிரியர் வீரமணி அய்யா அவர்கள் முதலில் சொன்னார் அல்லவா, தமிழ்நாட்டிலிருந்து வந்த சில பேர், குறிப்பாக நான் சொல்கிறேன், அதாவது 1980 களில், மாலேக்காவில் ஒரு பிரச்சினை வந்தது. மலேசியன் இந்தியன் காங்கிரசில்; அப்போது இரண்டு சமூகங்களுக்கு இடையே பிரச்சினை ஒன்று வந்தது. அதில் தான் மிக எளிதாக இயல்பாக ஜாதி என்பது முதலில் வர ஆரம்பித்தது. சின்ன சின்ன விஷயங்களில். அப்பொழுது கூட எங்களுக்குத் தெரியாது ஜாதி என்றால், என்னவென்று! உண்மையாகவே சொல்றேன் ஜாதி என்றால், எங்களுக்குத் தெரியவே தெரியாது.
நாங்கள் எல்லாம் மலாய்க்காரர்களோடு, சீனர்க ளோடு நாங்கள் எல்லோருமாக ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இப்பொழுது எங்களுக்கு எதுக்காக ஜாதி? எதுக்குமே தேவையே இல்லையே! அதனால் எங்களுக்கு அது தெரியவில்லை. எங்கள் வீட்டிலேயே அந்த மாதிரி பழக்கங்கள் இல்லை. ஜெர்மனிக்கெல்லாம் வந்த பிறகு அதுக்கு ஒரு தேவையும் இல்லை என்னுடைய வாழ்க்கையில்! ஆனால், சில ஜாதி அரசியல் சங்கங்கள் அங்கே வந்து வன்னியர் குலத்தை எல்லாம் உருவாக்கின பிறகு, வன்னியர்குல சங்கங்கள் தான் மிக முக்கியமாக அங்கே வந்து விதை போட்டன என்று நாம் சொல்லலாம்.
தமிழ்நாட்டில் இருக்கிற அரசியல் கருத்துகள் மலாயாவுக்கோ, வெளிநாடுகளுக்கோ
வராமல் இருந்தால் நல்லது!
வராமல் இருந்தால் நல்லது!
அதிலிருந்து, ஒவ்வொரு காலகட்டத்திலும் பல சங்கங்கள் வந்துவிட்டன. தேவர்கள் முக்குலத்தோர் சங்கம் என்ற ஒன்று வந்துவிட்டது. வேளாளர் சங்கம் என்று ஒன்று வந்துவிட்டது. அவர்களுக்கு இருக்கே, நமக்கு ஒன்று வைத்து கொள்வோமே என்று, கொங்குவேளாளர் சங்கம் என்ற ஒன்று வந்து விட்டது. இப்படி ஒரு சில வருகிறது. ஆனால், அதில் இருக்கிறவர்களைக் கூப்பிட்டு, ‘‘நீ உண்மையிலே உன்னோட ஜாதிக்காக, எதற்காக நீ செய்கிறீர்கள்’ என்று கேட்டால், அவர்களுக்குத் தெரியாது. அது ஒரு ஃபேஷன் என்பதுபோன்று அவர்கள் வைத்திருக்கிறார்களே, அதனால் நாங்கள் வைத்திருக்கிறோம் என்பார்கள். உமா ஒரு சங்கம் வைத்திருந்தார்கள் என்றால், குமரேசன் அய்யா ஒரு சங்கத்தை வைத்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால், எல்லாரும் ஒரே மாதிரிதான் இருக்காங்க. அவர்களிடம் மூன்று கார்கள் இருக்கும்; அவர்களிடம் வீடு இருக்கும்; அவர்களிடம் உத்தியோகம் இருக்கும்; அவங்களுக்கும் அதே சாப்பாடு இருக்கும். என்னவென்று தெரியாது, அவர்கள் வைத்திருக்கிறார்கள்; நானும் வைத்துக் கொள்கிறேன். இதுதான் வித்தியாசம்.
இப்பொழுது தமிழ்நாட்டுடைய பார்வையோடு, மலேசியாவினுடைய அந்த ஜாதி நோக்கத்தைப் பார்க்க முடியாது. முடிந்தவரைக்கும் தமிழ்நாட்டில் இருக்கிற அரசியல் கருத்துகள் மலாயாவுக்கோ, வெளிநாடுகளுக்கோ வராமல் இருந்தால் நல்லது.
(தொடரும்)
