நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக இந்தியா முழுவதும் மாணவர்கள் கொந்தளித்திருந்த நிலையில், அந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை நிபந்தனையாக வைத்துப் போராட்டம் நடத்தியதில், அவரை மட்டும் பெயருக்கு பலிகடாவாக்கி, ‘நீட்’டைக் காப்பாற்றிக் கொண்டது ஒன்றிய அரசு.
பெரும் போராட்டமாகி, நீட் தேர்வையே ஒழித்திருக்க வேண்டிய ஒரு போராட்டம் மடைமாற்றப்பட்டு, எந்தவிதப் பயனுமற்ற ஒன்றையே வெற்றியாகக் கருதி, அவர்களால் முடிக்கப்பட்டிருக்கிறது. நீட் ஒழிப்பு என்ற முழக்கத்துடன் தீவிரமாக இருக்கும் தமிழ்நாட்டின் போராட்ட உணர்வை அவர்களால் மழுங்கடிக்க முடியாது என்றாலும், இந்திய அளவில் எழுந்திருக்க வேண்டிய எதிர்ப்பைத் தர்மேந்திர பிரதான் என்ற ஒற்றை நபரை நோக்கித் திருப்பியதால் விளைந்த பயன் என்ன?
அவருக்குப் பதிலாக பிரகலாத் ஜோஷி என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர், இப்போது ஒன்றிய கல்வி அமைச்சர் ஆக்கப்பட்டிருக்கிறார். தர்மேந்திர பிரதான் எதையெல்லாம் செய்தாரோ, அவற்றையெல்லாம் இன்னும் வேகமாக இவர் செய்யப் போகிறார் என்பதைத் தவிர, வேறு எந்த மாற்றமும் இல்லை. உண்மையில் முன்பிருந்ததை விட மோசமான நிலைமைக்குக் கல்வித் துறை செல்லும் வாய்ப்பே இருக்கிறது. பிரகலாத் ஜோஷியின் பின்னணி பற்றி வந்திருக்கும் செய்திகள் அப்படி!
குஜராத் கலவரத்தின் போது நடந்த கொடூரமான பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை ஆதரித்துப் பேசியதும், தற்போது மக்களவைத் தேர்தல் சீட் வாங்கித் தருவதாகக் கூறி குடும்பத்தினர் லஞ்சப் புகாரில் கைதாகியிருப்பதும் ஒன்றிய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
2002-ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலையின் போது, 5 மாதக் கர்ப்பிணியாக இருந்த 19 வயது பில்கிஸ் பானுவை 11 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது. மேலும், அவரது 3 வயதுப் பெண் குழந்தையைக் கொன்றதோடு, குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரையும் படுகொலை செய்தனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளையும், 14 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு குஜராத் மாநில அரசு கடந்த 2022-ஆம் ஆண்டு விடுதலை செய்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விடுதலை குறித்து அப்போது நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அன்றைய ஒன்றிய அமைச்சராக இருந்த பிரஹலாத் ஜோஷி என்.டி.டி.வி. ஊடகத்திற்கு அளித்த பேட்டி பெரும் சர்ச்சையானது. அதில் அவர், “சட்டப்பூர்வமான நடைமுறைகளின் படியே அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதில் தவறு எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்று பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். பாலியல் குற்றவாளிகளின் விடுதலையை ஓர் ஒன்றிய அமைச்சரே நியாயப்படுத்தியது மனித உரிமைச் செயல்பாட்டாளர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் அவர்களின் விடுதலையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாகக் கூறி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் மனைவியிடம் ரூ. 2 கோடிக்கும் மேல் லஞ்சம் பெற்றதாகப் புகார் எழுந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் அமைச்சர் பிரஹலாத் ஜோஷியின் சகோதரர் மற்றும் மருமகன் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பில்கிஸ் பானு வழக்கில் கொடூரமான குற்றவாளிகளின் விடுதலையை வெளிப்படையாக நியாயப்படுத்தியவர்; தற்போது சொந்தக் குடும்பமே கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்று கைதான பின்புலத்தைக் கொண்டவர் – இப்படிப்பட்ட பின்னணியைக் கொண்ட ஒருவர் தற்போது இந்தியாவின் புதிய கல்வி அமைச்சராம்.
மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜவடேகர், ரமேஷ் போக்ரியால் அதன் பிறகு தர்மேந்திரப் பிரதான் என அனைவருமே கல்வி அமைச்சராக இருந்து கல்வி அமைப்பை சீர்குலைத்து காவிமயமாக்கினர். அதனை அப்படியே தொடர மீண்டும் ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர் அமைச்சராகி உள்ளார் அவ்வளவே!
கல்வி என்பது மனித சமூகத்தைச் செம்மைப்படுத்துவது; தனி மனித வாழ்விலும், சமூக நிலையிலும் செப்பனிடக் கூடியது ‘மதச் சார்பற்ற தன்மை’ என்ற மனப்போக்கைப் பதியம்போட்டு வளர்க்கக் கடியது – விஞ்ஞான மனப்பான்மையை ஊக்குவிக்கக் கூடியது.
ஆனால் ஆர்.எஸ்.எஸின் அரசியல் பிள்ளையான பா.ஜ.க. எப்போது ஆட்சிக்கு வந்ததோ, அக்கணமே கல்வியை ‘இந்துத்துவா’ என்னும் நாசகார நஞ்சை கல்வித் திட்டத்தில் வித்திட ஆரம்பித்து விட்டது.
வட மாநிலங்களில் பிறப்பில் பேதம் பேசும் ‘கீதை’யைப் பாடத் தி்டத்தில் திணித்து விட்டனர்.
கல்வி அமைச்சர் யார் என்பது முக்கியமல்ல; அவர்கள் கையி்ல் எடுத்துள்ள கருத்தியலும், நோக்கமும் என்ன என்பதே முக்கியம்!
அதுவும் புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்றிய கல்வி அமைச் சரின் பின்னணியோ அதிர்ச்சி அளிக்கக் கூடியதே!
