சென்னை, ஜூலை 27– நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 100க்கும் மேற்பட்ட மாணவர்களை காவல் துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
அப்போது மாணவர் கள் தடுப்புகளை உடைத்து உள்ளே நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முன் நேற்று (26.7.2026) முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இருந்தாலும் திட்டமிட்டப் படி எங்கள் போராட்டம் நடைபெறும் என்று மாணவர் அமைப்புகள் அறிவித்தன. இதன் காரண மாக, ஆளுநர் மாளிகை முன் வழக்கத்திற்கு மாறாக கூடுதல் காவல் துறையினர் நேற்று (26.7.2026) குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
பின்னர் திட்டமிட்டப் படி இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் சைதாப் பேட்டை பனகல் மாளிகை அருகே ஒன்று கூடினர்.
அனைவரும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி முழக்கம் எழுப்பியப்படி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அனைவரை யும் பாதி வழியில் தடுத்து நிறுத்தினர்.
ஆனால் மாணவர்கள் பலர் காவல் துறையினரின் தடையை மீறி ஆளுநர் மாளிகை அருகே அமைக்கப்பட்ட தடுப்புகள் அருகே குவிந்தனர்.
அதேநேரம் காவல் துறையினர் மாணவர்களை தடுக்க முயன்றும், அவர்களை மீறி இரும்புத் தடுப்புகளின் மீது ஏறி ஆளுநர் மாளிகை நோக்கி ஓடினர்.
ஆனால் காவல் துறையினர் மாணவர்களை பாதி வழியிலேயே சுற்றி வளைத்து கைது செய்தனர். மாணவர்கள் சாலையில் படுத்தப்படி நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
பின்னர் ஒரு வழியாக முற்றுகை போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்களை காவல் துறையினர் குண்டுக்கட்டாக இழுத்து சென்று பேருந்தில் ஏற்றினர்.
இதனால் சிறிது நேரம் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது.
