திறக்கப்பட்ட 12 நாள்களிலேயே சீர்குலைந்த ரூ.800 கோடி விரைவுச்சாலை யோகி ஆதித்யநாத் அரசுக்கு தொடரும் அரசியல் நெருக்கடி!

2 Min Read

லக்னோ, ஜூலை 27– உத்தரப் பிரதேசத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரூ.800 கோடி செலவில் அமைக்கப்பட்ட லக்னோ-கான்பூர் தேசிய விரைவுச்சாலை, திறக்கப்பட்ட வெறும் 12 நாள்களிலேயே ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு கடுமையாக சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மழை பெய்யாமலேயே
உடைந்த சாலை

கடந்த 14ஆம் தேதி அதிகாரப் பூர்வமாகத் திறக்கப்பட்ட இந்த விரைவுச் சாலையில், மழை ஏதும் பெய்யாத இயல்பான சூழலிலேயே வாகனப் போக்குவரத்தினால் மேல்பகுதி பெயர்ந்து பெரும் பள்ளங்கள் உருவாகியுள்ளன. “இன்னும் உத்தரப் பிரதேசத்தில் மழைக்காலம் தீவிரமடையாத நிலையிலேயே சாலை இந்த அளவிற்குச் சேதமடைந்துள்ளதால், மழை பெய்தால் ரூ.800 கோடி திட்டப்பணிகள் முழுமையாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுமோ?” என வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கிறனர்.

வெளிச்சத்திற்கு
வந்த உண்மை

இந்த விவகாரத்தில் மற்றொரு முக்கிய திருப்பமாக, வழக்கமாக மாநில அரசுக்கும் யோகி ஆதித்யநாத் அரசின் திட்டங்களுக்கும் ஆதரவாகச் செய்தி வெளியிடும் பிரபல முன்னணி தொலைக்காட்சி ஊடகமே, இந்தச் சீர்கேட்டைப் பற்றிய செய்தியை ஒளிபரப்ப வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. அரசு ஆதரவு ஊடகமே இந்த உள்கட்டமைப்புச் சீர்கேட்டை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது யோகி ஆதித்யநாத் அரசுக்கு பெரும் அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

தரமற்ற கட்டுமானப் பணிகள் குறித்து எதிர்க்கட்சிகளும், சமூக வலைதளப் பயனர்களும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

மகாராட்டிராவிலும் தொடரும் உள்கட்டமைப்பு சர்ச்சைகள்

இதேபோல, மகாராட்டிராவில் ரூ.12,000 கோடி செலவில் அமைக்கப்பட்ட மும்பை-புனே விரைவுச் சாலை மற்றும் நீண்ட குகைப்பாதை திட்டம், கடந்த மே மாதம் திறக்கப்பட்ட சில நாள்களிலேயே முதல் மழையிலேயே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு தற்போது நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இத்திட்டம் குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்களை ‘நாட்டின் வளர்ச்சியைச் சீரழிக்கும் தேசத்துரோகிகள்’ என்றும், இது தொடர்பான செய்திகளை வெளியிட்ட ஊடகங்களை கடுமையான வார்த்தைகளாலும் மகாராட்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் விமர்சித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

தொடர்ச்சியாகப் பல மாநிலங்களில் கோடி கணக்கில் செலவிடப்படும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறுகிய காலத்தில் சேதமடைவது, பொதுமக்களின் வரிப்பணத்தின் பாதுகாப்பு குறித்தும், ஒப்பந்தப் பணிகளின் தரம் குறித்தும் பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *