சென்னை, ஜூலை 26–- தேசிய தேர்வு முகமை (NTA) நடத்திய நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் நடைபெற்றதால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி, டில்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. ஒன்றிய இடைநிலை கல்வி வாரியத்தின் (CBSE) 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டில் ஏற்பட்ட தவறுகளும் மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இத்தவறுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்பினர் டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து, இப்போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்தது.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் இந்தத் தொடர் போராட்டத்தின் விளைவாக, ஒன்றிய அரசு கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பதவி விலகியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இளைய தலைமுறையின் தீவிரப் போராட்டத்திற்கு அடிபணிந்து ஒன்றிய அரசு கல்வி அமைச்சரைப் பதவி விலகச் செய்துள்ளது.
இது அறவழியில் போராடிய இளம் போராளிகளுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் வெற்றியாகும்,” எனக் குறிப்பிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்குத் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசு பல்கலைக்கழகத்தில்
குரூப் ‘ஏ, பி, சி ’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ.) பின்வரும் ஆசிரியர் அல்லாத குரூப் ‘ஏ’, ‘பி’, ‘சி’ பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து வரும் 27 ஆம் தேதிக்குள் இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:
பணி நிறுவனம்: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யூ.)
மொத்த காலியிடங்கள்: 267
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, அய்டிஅய், டிப்ளமோ, ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம், நூலக அறிவியல், பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ., பி.டெக்., முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முழுமையான தகுதி விவரங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு: 27.7.2026 தேதிப்படி அதிகபட்சமாக 40, 45-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: குரூப் ‘ஏ’ பணிகளுக்கு , எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு ரூ.1000, இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ.1,500; எஸ்சி, குரூப் ‘பி’ பணிகளுக்கு எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு ரூ.1000, இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ.1,500; குரூப் ‘சி’பணிகளுக்கு எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு ரூ.600, இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ.1,500, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://www.jnu.ac.in என்ற இணையதளம் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.7.2026
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது இடமா?
மாநில உரிமை மற்றும் மொழி மீதான அத்துமீறல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
சென்னை, ஜூலை 26- திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ஆவது இடம் அளிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33ஆவது பட்டமளிப்பு விழா வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில், ஆளுநர் அலுவலக சுற்றறிக்கையின்படி முதலில் ‘வந்தே மாதரம்’, இரண்டாவதாக ‘தேசிய கீதம்’, மூன்றாவதாக ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்படும் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மாநில உரிமைகள் மற்றும் தமிழ் மொழியின் மீது நடத்தப்படும் அத்துமீறலும், அநீதியும் ஆகும்.
எனவே, இந்த விழாவில் வழக்கம் போல தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்படுவதை தமிழ்நாடு அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
