மதுரை: ல.மு.அகிலாராஜன் – ர.முஜிபா ஃபர்ஜானா மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

12 Min Read

முதலமைச்சர் அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணங்களை மட்டும் செல்லுபடியாக்கவில்லை; தமிழர்கள் இழந்த மானத்தை மீட்டுக் கொடுத்தார்!
மணமக்கள் மதங்களால் மாறுபட்டாலும்–
மனங்களால் ஒன்றுபட்டிருக்கின்ற திருமணம்!

மதுரை, ஜூலை 25  முதலமைச்சர் அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணங்களை மட்டும் செல்லு படியாக்கவில்லை; தமிழர்கள் இழந்த மானத்தை மீட்டுக் கொடுத்தார். மதங்களால் மாறுபட்டாலும்–  மனங்களால் ஒன்றுபட்டிருக்கின்ற திருமணம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents
முதலமைச்சர் அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணங்களை மட்டும் செல்லுபடியாக்கவில்லை; தமிழர்கள் இழந்த மானத்தை மீட்டுக் கொடுத்தார்! மணமக்கள் மதங்களால் மாறுபட்டாலும்– மனங்களால் ஒன்றுபட்டிருக்கின்ற திருமணம்!காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது சுயமரியாதைத் திருமண முறைக்கு ஒப்புக்கொள்ளவில்லை!சட்டப்படி செல்லும் என்று ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார் அண்ணா!திருமணங்களை மட்டும் செல்லுபடியாக்கவில்லை; தமிழர்கள் இழந்த மானத்தை மீட்டுக் கொடுத்தார்!தந்தை பெரியார் தலைமையில் என்னுடைய திருமணம், மிக எளிமையாக!மதங்களால் மாறுபட்டாலும்–  மனங்களால் ஒன்றுபட்டிருக்கின்ற திருமணம்!எல்லையற்ற மகிழ்ச்சியைப் பெறுகிறோம்!பேராசிரியர் ராமச்சந்திரன் – ஜமீருன்னிசா மணவிழா!கோவை: திராவிடர் கழக மாநாடு!நீங்கள் மணமக்களை வாழ்த்தவேண்டும்!உத்தரப்பிரதேசமாக இருந்திருந்தால் 10 கிராமங்கள் எரிந்திருக்கும்!எதிர்த்தவர்களை எல்லாம்,  தன்னுடைய அறிவார்ந்த வாதத்தினாலே திருத்தினார் பெரியார்!முதலில் ‘டிஸ்டிங்ஷன்’ பிறகு ‘சென்டம்!’தன்முனைப்பில்லாத வாழ்க்கையை வாழுங்கள்!இல்லறம் – தொண்டறம் என்று வாழ வேண்டும்!ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்!கொள்கையைப் பின்பற்றுபவர்கள் வீழ்ந்து விடவில்லை, தாழ்ந்து விடவில்லை, எழுந்து உயர்ந்து நிற்கிறோம்!

மணமக்கள்
ல.மு.அகிலாராஜன் – ர.முஜிபா ஃபர்ஜானா

கடந்த 7.6.2026 அன்று மதுரையில் மணமக்கள் ல.மு.அகிலாராஜன் – ர.முஜிபா ஃபர்ஜானா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை தலைமை தாங்கி நடத்தி வைத்த  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது சுயமரியாதைத் திருமண முறைக்கு ஒப்புக்கொள்ளவில்லை!

நல்வாய்ப்பாக திராவிட இயக்க ஆட்சி வந்த உடனே,  சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட அங்கீ காரம் கிடைத்தது. அதற்கு முன்பு இரண்டு முறை காங்கிரஸ் ஆட்சி இருந்த போதெல்லாம், சுயமரியாதைத் திருமணத்தை நடத்த வேண்டும் என்று மிகப்பெரிய அளவிற்கு முயற்சி எடுக்கப்பட்ட நேரத்தில், அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

சட்டப்படி செல்லும் என்று ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார் அண்ணா!

பிறகு, அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்த உடனே தான், தந்தை பெரியாரை நேரிலே சென்று பார்த்துவிட்டு வந்து, ஆட்சியே ‘பெரியாருக்கு காணிக்கை’ என்று சொன்னது மட்டுமல்ல, அண்ணா அவர்கள் சுயமரி யாதைத் திருமணம், சட்டப்படி செல்லும் என்று ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார். அது ஏதோ திருமணம் செல்லும்; செல்லாது என்கிற பிரச்சினை இல்லை. நிறைய பேருக்குத் தெரியாது. சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர்கள், எல்லாம் சட்ட பூர்வமாகக் குழந்தைகளைப் பெறவில்லை என்று ஒரு சங்கடத்தை உண்டாக்கினார்கள். அதுதான் வேதனையானது.  வளர்ந்த பிள்ளைகள், பெரியார் தலைமை தாங்குகிறார்.  இந்த மண்டபம் மாதிரி ஆயிரக்கணக்கான பேர் முன்னிலையில் திருமணம் நடக்கிறது, ஒப்புதலோடு நடக்கிறது, பெற்றோர்கள் விரும்பி நடக்கிறது. அப்படிப்பட்ட திருமணத்தின்மூலம் பிறந்த குழந்தைகள், அசிங்கமாக சட்டத்தின் முன்னால் கோடு போட்டுக் காட்டப்படுகிறார்கள்.  சட்டத்திற்குப் புறம்பாகப் பிறந்த குழந்தை என்றால்,  இரத்தம் கொதிக்காதா?

திருமணங்களை மட்டும் செல்லுபடியாக்கவில்லை; தமிழர்கள் இழந்த மானத்தை மீட்டுக் கொடுத்தார்!

‘மானமும் அறிவும் தான் மனிதருக்கு அழகு’ இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள். மான உணர்ச்சி இல்லையா? என்று கேட்டார். அப்படிப்பட்டதற்கு அண்ணா ஆட்சிக்கு வந்த உடனே, நடந்த அத்துணை சுயமரியாதைத் திருமணங்களும் செல்லும் என்று சொன்னதன் மூலமாக, திருமணங்களை மட்டும் அவர் செல்லுபடியாக்கவில்லை; தமிழர்கள் இழந்த மானத்தை மீட்டுக் கொடுத்தார்கள் என்பதுதான் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டிய ஒரு செய்தி. பாதிக்கப்பட்டவர்கள்தான் இதனை நன்றி உணர்ச்சியோடு நினைத்துப் பார்க்க வேண்டும். என்னுடைய திருமணத்தையே எடுத்துக்கொள்ளுங்கள்,  அந்தச் சட்டம் இல்லை என்றால், என்னாகும்?

என்னுடைய திருமணத்தைத் தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் நடத்தினார்கள். திரு மணத்திற்கு வந்தவர்கள் இன்றும் இருக்கிறார்கள். 1958 ஆம் ஆண்டு திருச்சியில் எளிமையாக நடத்தினார் அய்யா அவர்கள்.

இன்றைக்குப் பெரிய பெரிய மண்டபங்களில் சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெறுகின்றன. ஏனென்றால், இந்தக் கொள்கையைக் கடைப்பிடித்த வர்கள் மிகச் சிறப்பாக வாழ்கிறோம் என்பதை மற்ற வர்களுக்குக் காட்டுவதற்காகத்தான்.

தந்தை பெரியார் தலைமையில் என்னுடைய திருமணம், மிக எளிமையாக!

எங்கள் திருமணம், திருச்சி பெரியார் மாளிகையில், மேடை கூட கிடையாது.  ஆசிரியர்கள் இரண்டு பெஞ்சைத்  தூக்கிப் போட்டு, அதையே மேடையாக ஆக்கி,  மாளிகை வாசலிலேயே நடந்தது.

அனைவரது வாழ்த்துகளோடு நடந்த அந்தத் திருமணமாக இருந்தாலும், அதில் எனக்கு என்ன பெருமை!   எனக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள் என்றால், அந்தப் பிள்ளைகள் சட்டப்படி  பிறந்த பிள்ளைகள் இல்லை என்று சொன்னால், எனக்கும், என்னுடைய வாழ்விணையருக்கும், பெற்றோர்களுக்கும் எப்படிப்பட்ட உணர்வு இருக்கும்? அதுவும் பெரியார் தலைமையில்; எனக்குச் சொல்லிக் கொடுத்த கல்லூரி பேராசிரியர்கள் எல்லாம் வந்திருந்தார்கள் என்னுடைய திருமணத்திற்கு.

மதங்களால் மாறுபட்டாலும்–  மனங்களால் ஒன்றுபட்டிருக்கின்ற திருமணம்!

ஆகவேதான், சுயமரியாதைத் திருமணம் என்று அதற்குப் பெயர். சுயமரியாதை இழக்காத அளவுக்கு அந்தத் திருமணத்தை உருவாக்கினார். ஆனால், அது வளர்ந்திருப்பதை இன்றைக்குப் பார்க்கிறோம். மதங்களால் நாம் மாறுபட்டிருக்கலாம், அது அவர வர்களுடைய உரிமை. ஆனால், மனங்களால் ஒன்று பட்டிருக்கின்ற திருமணம் என்ற பெருமை, நம்முடைய அருமைச் செல்வர்கள் அகிலாராஜன், முஜிபா ஃபர்ஜானா ஆகியோரது திருமணத்திற்கு உரியது. இதில் மிகவும் பாராட்டப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், அவர்கள் இரண்டு பேரும் விரும்பி, ஒருவரை ஒருவர் புரிந்து, மகிழ்ச்சியாக இன்றைக்கு வாழ்க்கையைத் தொடங்கவிருக்கிறார்கள், தொடங்குகிறார்கள். அவர்களைப் பாராட்டுவதை விட, முருகானந்தம் – லதா அம்மையார்  ஆகியோரைப் பாராட்டுவதை விட, அதிகம் பாராட்ட வேண்டியது யாரை என்று சொன்னால், மணமகள் முஜிபா ஃபர்ஜானா அவர்களின் பெற்றோர் இங்கே இருக்கிறார்கள் அல்லவா,  அவர்களை ஆயிரம் மடங்கு பாராட்ட வேண்டும். இவர்களை ஆயிரம் மடங்குப் பாராட்டினாலும், இவர்களைவிட மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள் யார் தெரியுமா? பத்தாயிரம் மடங்கு பாராட்டப்பட வேண்டும் என்றால், இந்தக் குடும்பம், உறவுகள், சமூகம் அவைதான்.

இங்கே எல்லோரும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். இம்மணவிழாவிற்கு யாரும் எதிர்ப்பு கிடையாது. அதைத்தான் அழகாக எழுதியிருக்கிறார் கவிதை வரிகளில். இத்திருமணம் பெற்றோர்களுடைய ஒப்புத லோடு நடக்கின்றது. இது மாதிரி பல திருமணங்கள் நடந்திருக்கிறது; ஒரு சாரார் ஒப்புதல் இருக்கும். இன்னொரு சாரார் ஒப்புதல் இருக்காது. ஆனாலும், பிள்ளைகளுடைய விருப்பத்திற்காக அப்படியே நடந்து கொள்ளட்டும் என்று அரைகுறை மனதோடு இருப்பார்கள். அந்த நிலையே இல்லை இந்தத் திருமணத்திற்கு என்பதுதான் தனிச் சிறப்பாகும்.

எல்லையற்ற மகிழ்ச்சியைப் பெறுகிறோம்!

மிகப்பெரிய அளவிற்கு பெரிய சொந்தபந்தங்கள் எல்லோரும்  மகிழ்ச்சியாக இங்கே வந்திருக்கிறார்கள்.   நம்முடைய குடும்பம், இது நம்முடைய குடும்பம் என்று எல்லோரும் சொல்லக்கூடிய அளவுக்கு இருக்கிறது. அதனால்தான் நம்முடைய குடும்பம் என்பதற்கும் ஒரு விரிவான பொருள் உண்டு. அது மதத்தைப் பொருத்தது அல்ல; ஜாதியைப் பொருத்தது அல்ல.  தோழர் சுப.முருகானந்தமானாலும், வரவேற்புரை ஆற்றிய மீனாட்சிசுந்தரனார் அவர்கள் ஆனாலும் பல ஆண்டுகளாக அவர்களை நான் அறிவேன்.  நேற்று ஒரு படத்தைக் காட்டினர்; அவர் இளமையையும் பார்த்தோம்; என் இளமையையும் பார்த்தோம். நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமாகி இருக்கக்கூடியவர்கள். ஆனால், என்ன இருந்தாலும், இப்படிப்பட்ட ஓர் உறவை ஏற்கிறபோது, எல்லையற்ற மகிழ்ச்சியைப் பெறுகிறோம்.

ஒரு சம்பவம்,  இந்தக் கொள்கை ஏற்றவர்கள் வீட்டில் எல்லாம் சுமூகமாகத்தான் முடிந்திருக்கிறது. எனக்குத் தெரிந்து ஒரு பெரிய பட்டியலே சொல்லுவேன். நேரம் அதிகமாகி விடக் கூடாது என்பதற்காகச் சொல்லவில்லை. நான் தலைமையேற்று நடத்தி வைக்கிற இதுபோன்ற திருமணம், இது முதல் திருமணம் அல்ல. யார்? இஸ்லாமியர்கள், மதத்தால் இஸ்லாமியர்களாகவும், மற்றவர் திராவிட சமுதாயத்தைச் சார்ந்தவர்களாக இருக்கும் மணவிழா இப்போது இது முதல் முறை அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்னாலே, நடத்தியிருக்கிறோம். சென்னை தாம்பரத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்  வீட்டுத் திருமணம், மணமகன் பெயர் நாத்திகன். மணமகள் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர். நான்தான் அந்த மணவிழாவினை நடத்தினேன். பெற்றோர்கள் ஒப்புதலுடன்.

எங்களுடைய ‘விடுதலை’ அச்சக மேலாளர்  சரவணன்; அவருடைய தம்பி பூபாலன், பொறியாளர். மணமகள் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர். இரண்டு பேரும் இப்போது சிங்கப்பூரில் இருக்கிறார்கள்.  அவர்களுடைய திருமணத்தையும் பெற்றோரின் ஒப்புதலோடு நடத்தி வைத்தோம். இன்றைக்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

பேராசிரியர் ராமச்சந்திரன் – ஜமீருன்னிசா மணவிழா!

அதே மாதிரி எண்ணற்ற திருமணங்களை வரிசைப்படுத்தி சொல்வதற்கு ஏராளம் இருக்கின்றன. இன்னொன்றைச் சொல்லவேண்டும், பெரியார்  பாலிடெக்னிக் கல்லூரி; அந்தக் கல்லூரியில் பேராசிரி யராக இருந்து, பெரியார் மணியம்மை பல்கலை கழகத்திற்குத்  துணைவேந்தராக வந்தார் பேராசிரியர் ராமச்சந்திரன். அங்கே பணியாற்றிய  ஆசிரியை இப்போது அவருக்குப் பெயர் பர்வீன்.  அதற்கு முன் அவருக்குப் பெயர் ஜமீருன்னிசா. அவர்கள் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் விரும்பினார்கள். பெற்றோரிடம் போய்ச் சொன்னவுடனே, திருமணத்திற்கு ஒப்புக் கொண்டனர். அந்தத் திருமணம் என்னுடைய தலைமையிலே  நடந்து முடிந்தது.

கோவை: திராவிடர் கழக மாநாடு!

கோவையிலே எங்களுடைய திராவிடர் கழக மாநாடு. தோழர்கள் சில பேருக்கு நினைவில் இருக்கும்.  மண்டல் கமிஷன்  போராட்டம்  நடந்து கொண்டிருக்கிறது. கோவை மாநாட்டுக்கு வடக்கே இருந்து சந்திரஜித் யாதவ் வந்தார். பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு நெருக்கமான நண்பர். நாடாளுமன்ற உறுப்பினராக பலமுறை இருந்தவர். ஒன்றிய அமைச்சராக இருந்தவர். அதே மாதிரி, சங்பிரிய கவுதம் என்பவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியினுடைய பொதுச்செயலாளர், உத்தரப்பிரதேசத்துக்காரர். அவரையும்  கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநாட்டிற்காக அழைத்திருந்தோம். அந்த மாநாட்டிற்கு வந்து ஊர்வலத்தையெல்லாம் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். நான், ‘‘அடுத்த நாள் பாலிடெக்னிக் கல்லூரிக்கு வாங்க, ஒரு முக்கிய விசேஷம், சிறப்பு இருக்கிறது. நீங்கள் அதை நடத்தவேண்டும்’’ என்று சொன்னேன். அதேபோல், அவர்களும் வந்தார்கள்.

நீங்கள் மணமக்களை வாழ்த்தவேண்டும்!

சந்திரஜித் யாதவும், சங்பிரிய கவுதம் ஆகிய இரண்டு பேரும்  வந்தவுடனே,  நான் அவர்களிடம், ‘‘இரண்டு பேருக்கும் திருமணம் ஒரு வாரத்துக்கு முன்புதான் நடைபெற்றது. உங்கள் இருவருடைய தலைமை, முன்னிலையில் அவர்களுக்கு எங்கள் கல்லூரியில் ஒரு பாராட்டு விழா நடத்துகிறோம். நிறைய மக்கள் வந்திருக்கிறார்கள். நீங்கள் அந்த விழாவில் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தவேண்டும்’’ என்று சொன்னேன்.

அப்படி நான் சொன்னவுடனே நண்பர்களே, என்ன நடந்தது என்றால்,  அவர்கள் இரண்டு பேரும்  சொன்ன கருத்தைச் சுருக்கமாகச் சொல்கிறேன், எங்களால் எங்கள் கண்களையே  நம்ப முடியவில்லை, தமிழ்நாட்டில். பெரியார் என்ன செய்தார் என்பதை இப்போதுதான் உணர்ந்து கொள்கிறோம்.

திராவிடர் கழகம்

உத்தரப்பிரதேசமாக இருந்திருந்தால்
10 கிராமங்கள் எரிந்திருக்கும்!

ஏனென்றால், ‘‘இந்த மாதிரி ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கும், அதே மாதிரி (அவங்க சொன்ன வார்த்தை) ஒரு இந்து ஆளுக்கும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவருக்கும், இவ்வளவு ‘ஸ்மூத்தா’, இவ்வளவு அழகாக எல்லாரும் உட்கார்ந்துப் பாராட்டி, மணமக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்குத் திருமணம் நடக்குதே, இந்த மாதிரி ஒரு திருமணம் (30 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்கள்) உத்தரப்பிரதேசமான எங்கள் மாநிலத்தில்  நடந்திருந்தால், 10 கிராமங்கள் எரிந்திருக்கும்.  ஆனால், இங்கே பார்த்தீர்களேயானால்,  மகிழ்ச்சியாலே எல்லோரும் திளைத்துக் கொண்டிருக்கிறீர்கள். பெரியார் என்ன செய்தார் என்பதை இப்போதுதான் நாங்கள் புரிந்து கொண்டோம். பெரியாருடைய சிறப்பு எப்படிப்பட்டது என்பதையும், இந்த இயக்கம் எப்படிப்பட்டது என்பதையும் புரிந்து கொள்கிறோம்’’ என்று சொன்னார்கள்.

எதிர்த்தவர்களை எல்லாம்,  தன்னுடைய அறிவார்ந்த வாதத்தினாலே திருத்தினார் பெரியார்!

காரணம், தந்தை பெரியார், மக்கள், மண்ணை பக்குவப்படுத்தினார்கள். மக்களைப் பக்குவப்படுத்தி, எதிர்நீச்சல் அடித்தார்; எதிர்த்தவர்களை எல்லாம்,  தன்னுடைய அறிவார்ந்த வாதத்தினாலே திருத்தினார். எந்தவிதமான ஆயுதங்களையும் எடுக்காமல், வன்முறை இல்லாமல். அதன் விளைவுதான் இந்த சிறப்பு, இந்த மணமக்கள். அதனுடைய விளைவு, மணமக்கள் நன்றாகப் படித்திருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டவர்கள்.

முதலில் ‘டிஸ்டிங்ஷன்’ பிறகு ‘சென்டம்!’

அதே மாதிரி இன்னொரு  தகவல், சுப.முருகானந்தம் அவர்களுடைய மகள் திருமணமும், ஜாதி மறுப்புத் திருமணமாகும். முருகானந்தம் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து முதலில் ‘டிஸ்டிங்ஷன்’ வாங்கினார். இப்போது ‘சென்டம்’ வாங்கியிருக்கிறார். அதுதான் மதத்தையும் தாண்டிய ஒரு திருமணம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு.

‘‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை’’ இங்கே, ‘‘தம்மின் தம்மக்கள் கொள்கை உடைமை’’ என்பதுதான் மிக முக்கியம். அவர்கள் பெற்றோர்களைத் தாண்டி இருக்கக்கூடிய அளவில் அத்தனைப் பாராட்டுகளும் பொருந்தும். இதில் எங்களுக்குப் பெருமை இதுதான். மற்றபடி பெரிய அளவுக்கு மணமக்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும்; விரிவுரை சொல்ல வேண்டும் என்பது இல்லை.  எல்லோரும் கருப்புச்சட்டை அணிந்து, எல்லோரும் தெளிவாக இருக்கிறார்கள். ஆகவே, அவர்களுக்கு அறிவுரை எல்லாம் தேவையில்லை. ஒன்றே ஒன்றுதான்  வழக்கமாகச் சொல்லுவோம். அது என்னவென்றால், இரண்டு பேரும் நண்பர்களாகதான் வாழப் போகிறார்கள். நீங்கள் அன்போடு வாழுங்கள்; சிறப்போடு வாழுங்கள். நான் எல்லா மணவிழாக்களிலும் சொல்வதைத்தான் இங்கும் சொல்லுகிறேன். நீங்கள் சிறப்பாக இருப்பீர்கள். இருந்தாலும், இளைஞர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகதான் இதைச் சொல்கிறோம்.

தன்முனைப்பில்லாத வாழ்க்கையை வாழுங்கள்!

‘‘நீங்கள் வாழ்வில் எவ்வளவு உயர்ந்தாலும், உங்களுடைய பெற்றோர்களிடம் அன்பு காட்டுவதை மறவாதீர்கள், நன்றி காட்டுங்கள். அதன் மூலமாக அவர்கள் மேலும் மகிழ்ச்சி அடைவார்கள். பெருமை அடைவார்கள்.  பகுத்தறிவாளராகிய நீங்கள் தன்முனைப்பில்லாத வாழ்க்கையை வாழுங்கள்.’’ அதில் தன்முனைப்பு என்றால் ‘ஈகோ’ அவ்வளவுதான். வாழ்க்கையில் பல தோல்விகள் ஏற்படுவதற்குக் காரணம் என்னவென்றால், விட்டுக் கொடுக்காத ஒரு தன்மை. அந்த தன்முனைப்பினால்தான்,  ‘‘நான் சொல்கிறபடிதான் நடக்கவேண்டும்; இல்லை, இல்லை, நான் சொல்கின்ற படிதான் நடக்கவேண்டும்’’ என்றால், அதுதான் விட்டுக் கொடுக்காத மனப்பான்மை. அந்த விட்டுக் கொடுக்காத மனப்பான்மையை பற்றி தந்தை பெரியார் சொன்னார்.  ‘‘சுயமரியாதைத் திருமணம் ஏன்?’’ என்று சிறிய புத்தகத்தை வெளியிட்டோம்.  அந்தப்  புத்தகத்தில், அய்யா அவர்கள்,  மிக தெளிவான ஒரு வாழ்க்கையினுடைய அறிவுரையைப் பற்றிச் சொல்கிறார்.

இல்லறம் – தொண்டறம் என்று வாழ வேண்டும்!

மணமக்கள் இருவரும் சிநேகிதர்களாக நடந்து கொள்ளவேண்டும். ‘‘நான், ஆண் பிள்ளை’’ என்று சொல்லி, அதிகாரம் பேசக்கூடாது. இருவரும் சிநேகிதர்கள் என்று இருக்க வேண்டும். அதிகாரம் என்பதை வெறுக்க வேண்டும். அன்பாக, எவ்வளவு வேலை வேண்டுமானாலும், வாங்கிக் கொள்ளலாம். மிரட்டக்கூடாது. அம்மாதிரியான பண்புகள் தான், உடலில் அன்பை அதிகமாக உண்டாக்குகிறது என்பதுதான் பெரு உண்மை. ஆண்கள், பெண்களை மெதுவாகத் திருத்த வேண்டும். திருத்த வேண்டிய அவசியம் என்பது முரட்டுத்தனமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மணமக்கள் தங்களுக்காகவே வாழ்கிறோம் என்று இல்லாமல், பிறருக்காக, மற்றவர்களுக்காக வாழ்கிறோம் என்று, இல்லறம் – தொண்டறம் என்று வாழ வேண்டும்’’ என்று சொன்னார்.

ஆகவே, அதை மனதிலே நீங்கள் நிறுத்திக்கொள்ளுங்கள். பெற்றோர்களுக்குப் பாராட்டு மீண்டும்.

இறுதியாக ஒன்று, வாழ்க்கை என்பது விசித்திரமானது. அந்த வாழ்க்கையிலே சில விசித்திர விதிகள் மாறும். இயல்பான விதிகள் வேறு. ஆனால், வாழ்க்கை என்று வரும்போது, அந்த விதிகளும், முறைகளும் மாறும். அதற்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டும். தேர்தலாக இருந்தாலும், தேர்வாக இருந்தாலும், அது விளையாட்டு,  போட்டி என்று வந்துவிட்டால், யார்  முதலில்  வருகிறார்களோ, அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்.  ஓட்டப் பந்தயமாக இருக்கட்டும் அல்லது வேறு பந்தயங்களாக இருந்தாலும், முதலில் வந்தவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள். அதேபோல தேர்தல், உங்களுக்குத் தெரியும். தேர்தலில், ஒரு ஓட்டு அதிகமாக வாங்கினாலும், அவர்தான் வெற்றி பெற்றவர்.

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து
வாழ வேண்டும்!

ஆனால், வாழ்க்கை என்பது அதற்கு நேர் எதிரானது. மணமக்களே! அன்பார்ந்த மணமக்களே! எங்கள் அன்பு செல்வங்களே, நீங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். அண்ணா சொன்னார், ‘‘விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக்  கொடுப்பதில்லை’’ என்று. இதுதான் வாழ்க்கை என்று இருக்கக்கூடாது. அதை மாற்ற வேண்டும் என்று அந்த  ‘ஈகோ’வைச் சொன்னார். அதை எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால்,  உங்கள் இரண்டு பேருக்குமிடையே போட்டி வந்தால், யார் தோற்கிறீர்களோ,  அவர்களுக்குதான் முதல் பரிசு. வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு கிடையாது. வெற்றி பெற்றவர்கள், தோற்றவர்களாகக் கருதப்படுவார்கள். ஒருவருக்கொருவர் விட்டு கொடுப்பதன் மூலமாக, தோற்பதற்கு நீங்கள் முந்திக் கொள்ளவேண்டும், இதுதான் சிறப்பு. இப்படி இருந்தால், உங்கள் வாழ்க்கை, உங்களுக்காக மட்டுமல்ல, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டான வாழ்க்கையாக இருக்கும் என்பதை என்றைக்கும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். சிறப்பாக வாழுங்கள்! சிக்கனமாக வாழுங்கள்.

இவ்வளவு பெரிய ஆடம்பரமான மண்டபமா? இவ்வளவு  சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். உங்கள் பிள்ளைகள் காலத்தில், இவ்வளவு பெரிய மண்டபத்தைத் தேடாதீர்கள். எவ்வளவு எளிமையாக செய்ய முடியுமோ, அப்படிச் செய்யுங்கள்.

கொள்கையைப் பின்பற்றுபவர்கள் வீழ்ந்து விடவில்லை, தாழ்ந்து விடவில்லை, எழுந்து உயர்ந்து நிற்கிறோம்!

ஆனால்  ஏன் இவ்வளவு ஆடம்பரமாக இந்த மணவிழாவை செய்கிறார்கள் என்றால், இந்தக் கொள்கையின் வெற்றியைக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான்.   அது ஆடம்பரத்திற்காக அல்ல. இந்தக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள் வீழ்ந்து விடவில்லை, தாழ்ந்து விடவில்லை, எழுந்து உயர்ந்து நிற்கிறோம். மகிழ்ச்சியோடு நிற்கிறோம். எங்கள் கொள்கையின்  வெற்றியைப் பிரகடனப்படுத்துகிறோம் என்பதற்கு இன்றைக்கு அது தேவைப்படலாம். நாளைக்கு இவ்வளவு செலவு செய்யக்கூடாது. இந்த செலவையெல்லாம் சேர்த்து, அவர்களுடைய வங்கிக் கணக்கிலேயே போட்டு,  அவர்களுடைய பிள்ளைகள், மற்றவர்களுக்கு, எல்லோருக்கும் அது பயன்படக்கூடியதாகவே இருக்க வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லி, மணமக்கள் இருவரும் இப்போது வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியைக் கூறி, மணவிழாவினை நடத்திக் கொள்வார்கள்.

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.a

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *