திருவாங்கூர் சமஸ்தானம் (34) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’ மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர்,

8 Min Read

வைக்கம் சத்தியாகிரகப் போராளிகளுக்கு உணவு செய்து கொடுக்கும் நோக்கத்தோடு பஞ்சாபிலிருந்து, அகாலிகள் வந்து உணவு கொடுக்கும் தொண்டறத்தைச் செய்து கொண் டிருந்தனர். அதற்கு காந்தியார் எதிர்வினையாகப் பேசினார். “வைக்கம் போராட்டம் என்பது இந்து மதத்தில் உள்ள ஜாதி இந்துக்களுக்கும் (பார்ப்பனர்களுக்கும்) தீண்டத்தகாதவர்களுக்கும் நடக்கும் பிரச்சினை. இதில் கிறிஸ்துவரோ, முகம்மதியரோ, அகாலிகளோ தலையிடக் கூடாது” என்றார் காந்தியார்.

கட்டுரை, ஞாயிறு மலர்

ஏற்கெனவே கேரள காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ஜோசப்பிற்கும் இதையே வலியுறுத்தி கடிதம் எழுதியவர் காந்தியார். இதை மறுத்த கிறிஸ்துவர் ஒருவர் காந்தியாருக்குக் கடிதம் ஒன்று எழுதினார். ‘கிலாபத்’ இயக்கம் முகம்மதியர்கள் பிரச்சினை. அதை காந்தியார் முன்னின்று நாடு முழுவதும் நடத்தவில்லையா? அதில் இந்துக்கள் கலந்துகொண்டு நாடு முழுவதும் போராடவில்லையா? அதைப்போல் பஞ்சாப் அகாலிகள் போராட்டம் இந்தியா முழுதும் நடக்கவில்லையா? ஆனால், தீண்டாமை மனிதர்களை இழிவுபடுத்தும் பொது உரிமையை, மனித உரிமையை மீறும் செயலாக வைக்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நாட்டை ஏதோ ஒரு விதத்தில் நேசிப்பவர்கள் ஏதோ ஒரு விதத்தில் அந்தப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது?” என்ற அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். (சான்று: ”வைக்கம் சத்தியாகிரக நினைவலைகள்”, பக்கம் 83)

கட்டுரை, ஞாயிறு மலர்

நீதிமன்றம் தந்தை பெரியாருக்கு இரண்டாவது முறையாக தண்டனை விதித்தது. அந்தத் தண்டனைக்கு முன்பே முதல் முறை விதிக்கப்பட்ட தண்டனைக்குக் கட்டுப்பட்டு அருவிக்குத்து சிறைக்குச் சென்றார். விடுதலை ஆனதும் மீண்டும் தடையாணையும், ‘பிரஷ்டு’ உத்தரவையும் விதித்தது. ஆனால், தந்தை பெரியார் அவற்றையும் மீறுவதாக அறிவித்தார். சத்தியாகிரக ஆசிரம வாசலில் நடந்த போராட்டத்தில் ஆரவாரமான கரகோஷத்திற்கிடையே பலமான வரவேற்பு தந்தை பெரியாருக்குக் கொடுக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் தந்தை பெரியார், “எனக்குக் கொடுக்கப்பட்டத் தடையாணை மூலம் எனக்கு எதிராக அரசாங்கத்தினர் இருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியம் உருவாக்கி விட்டார்கள். நான், என் நடவடிக்கைகளால் கலகத்தையும், கலவரத்தையும் உண்டாக்கி விடுவேனாம். காதால் கேட்பவற்றை வைத்து அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்திருக்கிறது. அரசாங்க அதிகாரிகள் நாள்தோறும் கூட்டத்திற்கு வந்து கண்காணித்தாலும், அரசாங்கத்திற்குப் பொய்யான குற்றச்சாட்டுகளை நம்மீது முன் வைக்கிறார்கள். எனக்கு அரசாங்கம் அனுப்பிய தடையாணைக்கு, நான் கட்டுப்பட மாட்டேன் என்று பதில் அனுப்பிவிட்டேன். அரசாங்கம்தான் கலகத்திற்கும், கலவரம் உண்டாக்கவும் காரணமே ஒழிய, சத்தியாகிரகிகள் அல்ல” என ஆவேசத்தோடு தந்தை பெரியார் அந்தக் கூட்டத்தினரிடையே பேசினார். இந்த அவரின் பேச்சு வைக்கம் சத்தியாகிரகிகளிடையே பெருத்த உணர்ச்சிக் கொந்தளிப்பை ஊட்டியது. (சான்று: “வைக்கம் போராட்டம்” – பழ.அதியமான்.)

கட்டுரை, ஞாயிறு மலர்

23.5.1924 அன்று ‘வைக்கத்தில்’ கனத்த மழை. சத்தியாகிரகத்தில் அன்று பங்கேற்றவர்கள் நாகம்மையார், கண்ணம்மையார், திருமதி நாயுடு, திருமதி சாணார், திருமதி தாணுமாலயப் பெருமாள் ஆகியோர் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது சத்தியாகிகரக ஆசிரமத்திலிருந்து, தடை செய்யப்பட்ட கோயில் தெருக்கள் தடுப்பருகே வந்தனர். காவல் துறையினர் போட்டிருந்த தடுப்பைத் தாண்ட முயன்றபோது, அங்கிருந்த காவல் அதிகாரி அவர்களைத் தடுத்தார். சர்லா என்ற பெயர் கொண்ட இன்ஸ்பெக்டர் என்ற பதவி வகிப்பவர், “நீங்கள் என்ன ஜாதி?” என்று நாகம்மை யாரைப் பார்த்து கேட்டார். அதற்கு நாகம்மையார், “எங்களில் யார் என்ன ஜாதி என்று கேட்டு, தாழ்த்தப்பட்டவர்கள் யார் என்று கண்டுபிடித்துத் தடுக்கப் பார்க்கிறீர்களா?” என்ற பதில் கேள்வி போட்டார்.

“பார்ப்பனர்கள் வசிக்கும் இந்தத் தெருக்களில் மீனவர் கள் கூட மீன் கூடைகளைத் தூக்கிக் கொண்டு போவதற்கு அனுமதிக்கும்போது, மற்ற மனிதர்கள் நடமாட ஏன் அனுமதி மறுக்க வேண்டும்?” என்று பெரியாரின் தங்கை கண்ணம்மாள் கேட்டார்.

கட்டுரை, ஞாயிறு மலர்

தடையின் அருகில் கொட்டும் மழையில் தந்தை பெரியார் குடும்பத்துப் பெண்கள் தலைமையில், அந்தப் பெண்கள் கூட்டம் பல மணி நேரம் நின்றவாறு சத்தியாகிரகம் செய்தனர். (சான்று: “வைக்கம் போராட்டம் – பழ.அதியமான்)

(தந்தை பெரியார் 14.5.1933 அன்று “குடிஅரசு” இதழ் தலையங்கத்தில் நாகம்மையார் காலமானதைக் குறித்து ஒரு இலக்கியத்தனமான அறிக்கை விடுகிறார். “அதென்னவென்றால், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொது நலச் சேவையில் ஈடுபட்ட பிறகு, பொதுநலக் காரியங்களுக்கும், சிறப்பாக சுயமரியாதை இயக்கத்திற்கும் பயன்படுத்தி வந்தேன் என்பதுதான். நாகம்மாள் நான் காங்கிரசிலிருந்தபோது மறியல் விசயங்களிலும், வைக்கம் சத்தியாகிரகம் விசயத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்” என்று குறிப்பிட்டுள்ளது நினைவு கூறத்தக்கது. 11.5.1933 அன்று நாகம்மையார் நினைவு நாள்!)

கட்டுரை, ஞாயிறு மலர்

காந்தியாரின் ஒத்துழைப்பு வைக்கம் போராட்டத்திற்கு இல்லாமை என்பது பல நேரங்களில் வெளிப்பட்டது. 3.7.1924 அன்று தன் “யங் இந்தியா” ஏட்டில் காந்தியார் எழுதியது;  “இந்த வைக்கம் சத்தியாகிரகத்தை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் ஒரு தீர்மானம் நிறைவேற்றக் கூடாதா? என்று கேரளப் பிரதிநிதிகள் என்னைக் கேட்டார்கள். அந்த யோசனை எனக்குப் பிடிக்கவில்லை என்று நான் அவர்களிடம் கூறினேன். ஆங்காங்குள்ள பிரச்சினைகள் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் எல்லா இயக்கங்களும் தங்கள் சொந்த பலத்தையே நம்பியிருக்க வேண்டும். அசாதாரண சந்தர்ப்பங்களில் மட்டுமே அகில இந்திய காங்கிரஸ் குழு அதன் தார்மீக ஆதரவை வழங்க வேண்டும்” என்று எழுதினார். வைக்கம் போராட்டம் துவங்கிய நாள் முதலே காந்தியாரின் அணுகுமுறை இப்படித்தான் இருந்தது.

(சான்று: “வைக்கம் போராட்டம்”, கு.வெ.கி.ஆசான்)

“தந்தை பெரியார் தடையாணையை இரண்டாம் முறையாக மீறி இருப்பதை அடுத்து, நான்கு மாத கடுங்காவல் தண்டனை வைக்கம் மாஜிஸ்ட்ரேட் அளித்து, அவரை மத்திய சிறைக்கு அனுப்பியிருக்கிறார். இந்தத் தண்டனை கடுங்காவல் தண்டனை என்பதால் சிறப்புச் சலுகைகள் எதுவும் அவருக்குத் தரப்பட வேண்டும் என்று கருதவில்லை” என்று கோட்டயம் மாஜிஸ்ட்ரேட், திருவாங்கூர் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதினார். இந்தக் குறிப்பு சிறையதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்ட தந்தை பெரியாருக்கு எந்த வசதியும் கொடுக்கப்படவில்லை. பெருங்குற்றம் செய்த குற்றவாளி போலவே நடத்தப்பட்டார். உணவு, மற்ற நடவடிக்கைகளும் அதேபோல் அவருக்கு நடந்தது. சிறை உடைதான் அணிய வேண்டி இருந்தது. கால்களில் இரும்பு விலங்கு போடப்பட்டது. மற்ற சத்தியாகிரகிகள் இருந்த இடத்திலிருந்து, வெகு தொலைவில் இருந்த அறையில் அவர் அடைக்கப்பட்டார். அவர் இருந்த அறை தனிமைச் சிறைக் கைதிகளுக்கானது. மற்ற போராட்டக்காரர்களிடமிருந்து வெகு தொலைவில் அவர் இருந்ததால் யாரோடும் பேசக் கூட முடியாத நிலையில் அவர் வைக்கப்பட்டிருந்தார்.

கைதிகளுக்குக் கொடுக்கப்படும் எண் அவர் உடையில் மார்புப் பகுதியில் தைக்கப்பட்டிருந்தது. இவ்வளவு சங்கடங்கள் இருந்தாலும் தந்தை பெரியார் அதைப் பற்றி கவலைப்படவேயில்லை. அனைத்துத் தொல்லைகளையும் மகிழ்ச்சியோடே ஏற்றுக் கொண்டார். சிறைக்கான சட்ட திட்டங்களை எள்ளவும் மீறவில்லை. இயல்பாகவே காணப்பட்டார்.

அவர் சிறைவாசத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர் நண்பர் சி.ராஜகோபாலாச்சாரி “திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமசாமி நாயக்கர் கைதி உடையோடு, காலில் விலங்கிடப்பட்டு, மற்ற சத்தியாகிரகிகளோடு தொடர்பு கொள்ளா வண்ணம் வெகு தொலைவில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.

நாயக்கரோ இந்தச் சங்கடங்களைப் பொருட்படுத்தாது மிகுந்த உற்சாகத்தோடு இருப்பார் என்று சொல்ல வேண்டியதில்லை. அவருடன் நன்றாகப் பழகி இருக்கிறேன். பலகாலம் சேர்ந்து வாழ்ந்திருக்கிறேன். அவரை எனக்கு நன்கு தெரியும். அவர் ஒரு தளர்வுறா ஆன்மா. செல்வச் செழிப்பின் மகிழ்ச்சிகளையும், பல பதவிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு கடினமான இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். நம்மைப் போலன்றி உண்மையிலே தம்மைத் தூய்மைப்படுத்தும் பணியை வரவேற்பவர். அதனால் நாம் பெரிதும் வருந்த வேண்டியதில்லை” என்று அறிக்கை விட்டார்.

தந்தை பெரியாரின் சிறை வாழ்க்கையைப் பற்றி மேலும் ராஜகோபாலாச்சாரியார், “நாயக்கர் விசயத்தில் ஏதோ காரணங்களுக்காக திருவாங்கூர் அரசு தவறு செய்து விட்டதாகவே தோன்றுகிறது. நாயக்கரின் தகுதி பற்றி அறியாமை அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அவரைக் கடுங்காவல் தண்டணையில் வைத்திருப்பதும், இரும்பு விலங்கிடப்பட்டிருப்பதையும், அவருக்கு சிறை உடை அணிவித்திருப்பதும், மற்ற சத்தியாகிரகக் கைதிகள் பெற்றுள்ள வசதிகள் அவருக்கு மறுப்பதும் முழுமையாக நியாயப்படுத்த முடியாதவை. சிறையில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தைரியமிக்கத் தலைவருக்கு என் பாராட்டுகள்” என்றும் தன் “அன்பார்ந்த எதிரி”யைப் பற்றி மேலும் எழுதியுள்ளார்.

29.8.1924 அன்று வெளிவந்த ‘நவசக்தி’ நாளிதழில், “செல்வத்தில் சிறந்த சீமான், செழிய நிலையில் வாழ்க்கை நடத்தியவர், தேசத்தின் பொருட்டு எல்லாவற்றையும் துறந்து, எளிய வாழ்க்கை மேற்கொண்டு தேச சேவை ஆற்றி வருகிறார். இன்று சிறையில், சிறை உடையில், கரத்தில் விலங்கோடு தனிமைச் சிறையில் உள்ளார். சத்தியாகிரக தர்மம் உணர்ந்தவராகையால் எந்தக் கஷ்டத்தையும் சகித்துக் கொள்ளும் சக்தி வாய்ந்தராக இருக்கிறார். திருவாங்கூர் அரசோ, அவர் சமஉரிமை வேண்டிப் போராட தடையாணை விதித்ததை மீறியதை பெருங்குற்றமாகக் கருதுகிறதோ? மனச் சான்றுபடி நடக்கும் சிறந்த ஒருவரை துன்புறுத் துவதானதை அரசு செய்ய லாமா? திருவாங்கூர் அரசு நற்பெயரை இழக்கலாமா?” என்று எழுதியது. (சான்று: “வைக்கம் போராட்டம்”
– பழ.அதியமான்)

வைக்கம் போராட்டத்தின் தீவிரத் தன்மையை உணர்ந்த பார்ப்பனர்கள் அதை நீர்த்துப் போக வைக்க மற்றொரு தந்திரத்தைக் கையாண்டனர்.இந்துக்களில் கோயில் தெருக்களில் நடக்கக் உரிமையற்ற ஜாதிகளில் சில மேல்ஜாதிக்காரர்களை ஆரிய சமாஜத்தில் சேர வைத்தனர். நாயர்கள் மற்றும் மேல் ஜாதியினர் ஆரிய சமாஜிகள் என்ற பெயரில் தெருக்களில் நுழைய அனுமதி கொடுத்தனர். ஆனாலும், ஈழவர், சாணார், புலையர் போன்றவர்கள் ஆரிய சமாஜிகளாக மாறினாலும் அனுமதி இல்லை என்றே நடத்தினர். கேரள ஆரிய சமாஜத் தலைவர் இதைப் பற்றி மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டிடம் பேசினார். ஆனால், மாஜிஸ்ட்ரேட் அவர் கோரிக்கையை ஏற்கவில்லை. கீழ் ஜாதியினர் கிறிஸ்துவராகவோ, முஸ்லீம்களாகவோ மதம் மாறியிருந்தாலும் மதம் மாறிய நாளிலிருந்துதான் அவர்கள் அந்தத் தெருக்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆரிய சமாஜத் தலைவரிடம் உறுதிபட மாஜிஸ்ட்ரேட் கூறிவிட்டார்.

திருவனந்தபுரம் சிறையில் இருக்கும் தந்தை பெரியார் போன்ற சத்தியாகிரகிகளுக்கு ஆபத்து விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, பத்மநாப சாமிக் கோயில் வெளிப்பிரகாரத்தில் நம்பூதிரிப் பார்ப்பனர்கள் ஒரு யாகத்திற்கு எற்பாடு செய்தனர். “சத்ரு சங்கார யாகம்” என்று அதற்குப் பெயர். ‘சத்ரு’ என்றால் எதிரி. ‘சங்காரம்’ என்றால் அழிப்பது என்று பொருள். திட்டமிட்டபடி இந்த யாகத்தை நம்பூதிரிகள் நடத்தினர். ஆனால், சிறையில் இருக்கும் ‘சத்ரு’க்களுக்கு ஏதும் ஆகவில்லை.

இந்த நிலையில் ஒரு இரவு திடீரென்று கோட்டை மணி பலமாக ஒலித்தது. தந்தை பெரியார் காவலர்களிடம் அதன் காரணத்தைக் கேட்டார். காவலர் மன்னர் ‘திருநாடு’ அடைந்து விட்டார் (காலமாகிவிட்டார்). அதனால்தான் மணி ஒலிப்பதாக பெரியாரிடம் தெரிவித்தார். உடனே சிறையிலிருந்தவர்கள் நம்மை அழிக்க யாகம் நடத்தினார்கள். ஆனால், அவர்களே காலமாகி விட்டார்கள் என்று கூற, பெரியாரோ, யாகத்தால் நாம் அழிந்து விடுவோம் என்பது எப்படி மூடநம்பிக்கையோ, அதேபோல்தான் யாகத்தால்தான் மன்னர் இறந்தார் என்பதும் மூடநம்பிக்கை என்று பதில் கூறினார். சிறிது நாட்கள் உடல்நலக் குறைவாக இருந்த திருவாங்கூர் அரசர் ராமவர்மா, தன் 67ஆவது வயதில் 7.9.1924 அன்று மறைவுற்றார். (சான்று: “பெரியார்” திரைப்படம்.)

மன்னரின் மறைவையொட்டி வைக்கம் சத்தியா கிரகிகள் விடுதலை செய்யப்பட்டனர். தந்தை பெரியார், கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப் உள்பட 18 சத்தியாகிரகிகள் திருவனந்தபுரம் சிறையிலிருந்தும், டி.கே.மாதவன் கோட்டயம் சிறையிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டனர். இதன் விளைவாக தந்தை பெரியாரின் சிறைவாசம் இரண்டு மாதம் குறைந்தது. சிறைவாசம் குறைந்தாலும் ஏறத்தாழ 4 மாதங்கள் பெரியார் சிறையிலிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. சிறையிலிருந்து வெளியே வந்த தலைவர்கள் கூட்டாக ஒரு அறிக்கை விட்டனர். அந்த அறிக்கை? (சான்று: “வைக்கம் போராட்டம்” – பழ.அதியமான்)

(தொடருவேன்…)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *