அய்தராபாத், ஜூலை 24 தெலங்கானா மாநிலம், அய்தராபாத்தில் ஒட்டிப் பிறந்த சகோதரிகளுக்கு ஸ்டேட் வங்கி தேர்வு எழுத தனித்தனியாக தேர்வறை ஒதுக்கப் பட்டிருப்பதற்கு மாற்று நடவடிக்கை எடுத்து, ஒரே அறையில் தேர்வு எழுத அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சகோதரிகள்
தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தில் கடந்த 2003 அக்டோபர் 16-இல் வீணா மற்றும் வாணி ஆகிய சகோதரிகள் ஒட்டிப் பிறந்தனர். இவர்களைப் பராமரிக்க இயலாமல் பெற்றோர் கைவிட்ட நிலையில், நீலோபர் மருத்துவமனையிலும், பின்னர் அமிர்பேடு அரசு குழந்தைகள் இல்லத்திலும் வளர்க்கப்பட்டனர்.
இவர்களுக்குத் தலைப்பகுதியில் முக்கிய ரத்த நாளங்கள் ஒட்டியுள்ளதால் அறுவை சிகிச்சை செய்வது உயிருக்கு ஆபத்தானது என்பதால், இதுவரை அவர்கள் தனித்தனியாகப் பிரிக்கப்படாமல் ஒன்றாகவே இருந்து வருகின்றனர். இருப்பினும், பள்ளிப்படிப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்ததுடன், பி.காம் (பிஸ்னஸ் அனாலிடிக்ஸ்) பட்டப்படிப்பையும் சிறப்புடன் முடித்து, தற்போது சார்ட்டட் அக்கவுண்டன்ட் (CA) ஆவதற்காக படித்து வருகின்றனர்.
தேர்வு அறை சவாலும் கோரிக்கையும்
தலைகள் ஒட்டிப் பிறந்துள்ளதால், தேர்வு சமயத்தில் இவர்கள் ஒரே நேரத்தில் குனிந்து கேள்வித்தாளைப் பார்க்கவோ விடையை எழுதவோ முடியாது. ஒருவருக்கு ஒருவர் தங்கள் உடல்நிலையைச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டுதான் எழுதிவருகிறார்கள். இதுவரை அரசு வழங்கிய கூடுதல் நேர சலுகைகளைக் கூட மறுத்து, சாதாரண மாணவிகளாகவே இவர்கள் தேர்வு எழுதி வந்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் ஸ்டேட் வங்கித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. ஆனால், இவர்களுக்கு ‘‘தனித்தனி தேர்வறைகள் மற்றும் தனித்தனி இருக்கைகள்’’ ஒதுக்கப்பட்டுள்ளதால் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இவர்கள் இருவரும் ஒரே அறையில் அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவின் கீழ் அவர்களின் இல்லத்திற்கு அருகிலேயே தேர்வு மய்யத்தை மாற்றித் தருமாறும் அவர்களது முன்னாள் விரிவுரையாளர்களும் ஆதரவாளர்களும் வங்கித் தேர்வு நடத்தும் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
