மதப் போதையை மாய்ப்போம் – மனித நேயம் காக்க!

4 Min Read

‘‘மதங்களால், மனித குலம் பிளவுக்கும், பிரிவிற்கும் ஆளாகி, போர்களை அன்றும், இன்றும் நடத்துவதும், அதனால் அப்பாவி மக்களும், அந்த நாட்டிற்கும், மதத்திற்கும் சம்பந்தமில்லாத ஏழை, எளிய உழைக்கும் மக்களும், வர்க்கமும் கடும் விலை கொடுக்கவேண்டிய பேரபாயமாக போர் அபாயமும் இருக்கிறது.

முந்தைய சிலுவைப் போர் (Crusades) என்ற அய்ரோப்பிய மதப் போர் முதல், இப்போது நடக்கும் ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கப் போர் உள்பட அதன் மூல காரணமாக, மதவெறி, மதப்போதை என்பதில் தொடங்கித்தானே அதிகாரப் போராக மாறியுள்ளது!” என்று மிகச் சரியாக ‘ஒழிக்கப்பட வேண்டியது மதப்போதை’ என்று தனது அறிக்கை மூலம் எடுத்துக் காட்டியுள்ளார் தமிழர் தலைவர் ஆசிரியர்.

மதங்கள், ‘மக்களை நல்வழிப்படுத்தவும், அன்பு, கருணை, சமாதானம், சமத்துவம் ஆகியவற்றை மக்களுக்குப் போதிக்கவும் இறைவனின் அருள் பெற்ற மாமனிதர்களால் உருவாக்கப்பட்டவை’ என்ற  ‘உருட்டு’ காலங் காலமாகச் சொல்லப்பட்டு வருவதே ஆகும். ஆனால், எந்தக் காலத்திலாவது இப்படி நடந்திருக்கிறதா? மனிதநேயம் கொண்டோர் எந்த மதத்தில் இருந்தாலும் அவர்களுக்குத் தான் மேற்சொன்னவை சாத்தியமே தவிர, மதங்களால் பிணைக்கப்பட்டோருக்கு அல்ல.

‘மதம் என்பது மனிதனின் கூட்டு வாழ்க்கைக்கும், அதற்கேற்ற ஒழுக்கத்திற்கும் ஏற்ற விதிகளைக் கொண்டதேயாகும்’ என்பது  மதம் குறித்த ஓர் ஏற்கத்தக்க விளக்கம் தான். சட்டங்களும், விதிகளும், நாடுகளும் பெருமளவில் நிலைப் பெற்றுவிடா ஒரு சமூகத்தில், அன்றாட வாழ்வியலை நடத்துவதற்குத் தோற்றுவிக்கப்பட்ட விதிகள், அவற்றைச் செயல்படுத்துவதற்கான நடைமுறைகள், சடங்குகளின்  தொகுப்புதான் மதங்கள். அதனால் தான், பகுதிக்குப் பகுதி மதங்கள் தோன்றின. அந்தந்த மக்களின் வாழ்நிலைக்கு, சூழ்நிலைக்கு, தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப நம்பிக்கைகளும், சடங்குகளும், வழிபாடுகளும், தண்டனைகளும், விழாக்களும் ஏற்பட்டன.

மற்றபடி, உலகத்தைப் படைத்தது கடவுள் என்றும், கடவுளால் உருவாக்கப்பட்டதுதான் மதம் என்றும் ஒருவர் நம்புவாரேயானால், “ஏன் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு விதமாக, மதங்களும், சடங்குகளும் தோற்றுவிக்கப்பட்டன?” என்ற வெகு சாதாரணமான, ஆனால், ஆழமான சிந்தனைச் சாரமுள்ள இந்த ஒற்றைக் கேள்வியே அவர்களின் நம்பிக்கையைத் தகர்த்துவிடும்!

ஆக, மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்ட, அந்தந்தக் காலத்திற்கு, அந்தந்த பகுதிக்குத் தேவையானதாக அன்றைய அறிவுக்கு அவர்கள் கருதிய விதிகள் அடங்கிய மதங்களே அடையாளங்களாகிப் போன பின்னர், அந்த விதிகள் காலத்துக்கும் மாற – மாற்றக் கூடாதவையாக இறுகிப் போன பின்னர், மதங்கள் அதிகாரப் பீடங்களாக உருவான பின்னர், அந்த மதங்களைப் பின்பற்றுவோர் மற்றவர்களையும் அந்த விதிகளுக்குள், தங்கள் மதங்களுக்குள் கொண்டு வர விரும்பியதும், அதற்குப் பணியாமல் தாங்கள் வகுத்துக் கொண்ட விதிகளுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்குள் பிணக்குகள் தோன்றி, அவை சண்டைகளாகத் தொடங்கின, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆன பின்னும் இன்னும் வெவ்வேறு வடிவில் தொடர்கின்றன.

“மதம் என்றவுடன் ஒருவித வெறி ஏற்பட்டு விடுகிறதாய் இருக்கிறதே ஒழிய, மதம் மக்களுக்குச் செய்துவரும் நன்மை என்ன? அதனால் மக்கள் அடையும் பயன் என்ன? என்பதை மத வெறியர்கள் சிந்திப்பதேயில்லை. ‘கள்ளி’னால் உண்டாகும் வெறியைவிட இம்மாதிரி மதங்களால் ஏற்படும் வெறி அதிகமான கேட்டைத் தருகிறது. கள்ளு, குடித்தவனை மட்டும் கெடுக்கிறது. மதம் மனத்தில் நினைத்தவனையே கெடுக்கிறது” என்கிறார் பெரியார்.

மதங்களுக்குள்ளேயே, பிரிவுகளின் அடிப்படையில் நடந்த ஈரான் – ஈராக் போருக்கு, 16-ஆம் நூற்றாண்டில் அய்ரோப்பாவில் நடந்த மதப் போர்களுக்கு அந்தந்த மதங்கள் தானே காரணம்? சைவ – வைணவச் சண்டைகளுக்கு, வைணவத்துக்குள்ளேயே தென்கலை – வடகலைச் சண்டைகளுக்கு என்ன காரணம்?

இன்றும் அதுதானே நடக்கிறது. உலகம் முழுவதையும் பாதித்திருக்கும் இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான் போருக்கு வேறு என்ன அடிப்படை? அல்லது இதற்கு முன் வளைகுடா நாடுகளில் நடந்த போர்களுக்கு என்ன அடிப்படை?  இந்தியா – பாகிஸ்தான் சண்டைக்கு மூல காரணம் என்ன? இன்றும், சூடானில், சோமாலியாவில், ஏமனில், மாலியில், ஆப்கானிஸ் தானில், பாலஸ்தீனத்தில், மியான்மா ரோஹிங்கியாவில் நடக்கும் கலவரங்கள், படுகொலைகள், போர்களுக்குக் காரணம் என்ன?

ஏன், இந்தியாவுக்குள்ளே என்ன நிலைமை? இன்னொரு வரின் வழிபாட்டுத் தலத்தை இடித்து, அதன் மீது தங்கள் கோயிலைக் கட்டுவதற்காகத் தானே கடந்த 40 ஆண்டுகளாகக் கலவரத்திலேயே அரசியல் நடந்திருக்கிறது! வன்முறைகளும், குண்டுவெடிப்புகளும், படுகொலைகளும் அதன் தொடர்ச்சிதானே! சொந்த நாட்டிலேயே அகதியாக வாழ வேண்டிய அவசியத்தை நாட்டின் பல லட்சக்கணக்கான மக்கள் சந்திக்க வேண்டியது இதனால் நேர்ந்தது தானே! சாப்பிடும் தட்டை எட்டிப் பார்த்து, குழம்புக்குள் கை விட்டு, எந்தக் கறி என்று மோப்பம் பிடிக்கச் செய்தது மதம் தானே! ஆட்டுக்கறி அல்ல – மாட்டுக்கறி தான் என்று  அடம்பிடித்து, அக்லக் என்று ஒருவரை அடித்தே கொன்றது மதவெறி தானே! ‘பசு எங்கள் புனிதம்’ என்ற பெயரில் நாடெங்கும் எளிய தொழிலாளர்களை, ஏழைகளைத் தாக்கியது மதம் தானே!  குஜராத்தின் கோத்ரா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்காகப் பழி வாங்க வேண்டும் என்று கிளப்பிவிடப்பட்ட கலவரத்தில், “ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு” என்று பேசியவர்களால் தூண்டிவிடப்பட்டு நடந்தது தான் அந்தக் கலவரம்  என்று, அக்கலவரத்தின் அடை யாளமாகவே மாறிப் போன ஒளிப்படத்துக்குச் சொந்தக்காரரான அசோக் மோச்சி சொன்னாரே!

இவையெல்லாம் மதம் என்னும் போதை, மனித மூளையை வெறி கொள்ளச் செய்ததன் விளைவு தானே! அது மக்களின் துயர்களை மறக்க வைக்கும் அபின் மட்டும் அல்ல. மக்களை உண்மையிலிருந்து விலக்கி வைத்து, வெறி கொள்ளச் செய்யும் போதை. ‘மனத்தில் நினைத்தவனையே கெடுக்கிறது’ என்றாரே பெரியார், அது முற்றிலும் சரியே என்பதை உலக நடப்புகள் காட்டுகின்றன. தனித்தனி நபர்களை அல்ல ; கூட்டம் கூட்டமாக வெறியூட்டும் மதப் போதையை ஒழிக்க, மக்களை நாடுவோம்! மதவெறியை, மதப் போதையை மாய்ப்போம் – மனிதநேயம் காக்க!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *