வயதாவதை தடுத்து நிறுத்த முடியுமா? மருத்துவ உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்திய ஜெர்மனி ஆய்வு

வயதாகும்போது செல்லின் ஆற்றல் மய்யமான மைட்டோகாண்ட்ரியாக்கள் பலவீனமடைவதற்கு ‘பாஸ்பேடிடைல்கோலின்’ என்ற கொழுப்புச் சத்து குறைவதே முதன்மைக் காரணம் என ஜெர்மனியின் லைப்னிஸ் ஆய்வகம் கண்டறிந்துள்ளது.

நமது உடலின் ஆற்றல் மய்யங்கள் என அழைக்கப்படும் மைட்டோகாண்ட்ரியாக்கள் வயதாக வயதாக தங்களின் திறனை இழக்கின்றன என்பது பல தசாப்தங்களாக அறிவியலாளர்களுக்கு தெரியும். ஆனால், அது ஏன் நடக்கிறது? என்பதற்கான துல்லியமான விடை இதுவரை மர்மமாகவே இருந்தது.

தற்போது, ஜெர்மனியில் உள்ள லைப்னிஸ் முதியோர் நல நிறுவனத்தின் மருத்துவர் மரியா எர்மோலேவா தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில், இதற்குப் பின்னால் இருக்கும் ஒரு முக்கிய காரணி கண்டறியப்பட்டுள்ளது. நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு, செல் வயதாவதைக் கட்டுப்படுத்த முடியும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

நமது செல்லுக்குள் இருக்கும் மைட்டோ காண்ட்ரியாக்கள் வெறும் ஆற்றலை மட்டும் உற்பத்தி செய்வதில்லை. அவை ஒன்றோடொன்று இணைந்து மிகப் பெரிய ‘பவர் கிரிட்’ போன்ற வலையமைப்பை உருவாக்குகின்றன. இந்த நெகிழ்வுத்தன்மைக்கு ‘மைட்டோகாண்ட்ரியல் ஃபியூஷன்’ என்று பெயர். இந்த வலையமைப்பு சீராக இயங்க பாஸ்பேடிடைல்கோலின் எனும் சவ்வு கொழுப்பு மிக அவசியம். வயதாகும்போது இந்த பாஸ்பேடிடைல்கோலின் அளவு இயற்கையாகவே குறைகிறது. இதனால் செல்கள் தங்கள் இணைப்பை இழந்து சிறு துண்டுகளாக மாறுகின்றன.

இது நாட்டின் மின்கட்டமைப்பு செயலிழப்பதற்கு சமம். மின் உற்பத்தி நடந்தாலும், அதைத் தேவையான இடங்களுக்கு நெகிழ்வாக பகிர்ந்தளிக்க முடியாது. இந்நிலைதான் நீரிழிவு போன்ற முதியோர் சார்ந்த நோய்களுக்கு வழிவகுக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் இளம் புழுக்களில் பாஸ்பேடிடைல்கோலின் உற்பத்தியை முடக்கியபோது, அவற்றின் செல்கள் உடனடியாக வயதான புழுக்களின் செல்களைப் போல மாறின.

உணவின் மூலம் இந்த கொழுப்பை மீண்டும் வழங்கிய போது, வெறும் 2 நாட்களில் அந்த செல்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுப் பழைய நிலைக்குத் திரும்பின. இந்த வேகமான மாற்றம் ஆராய்ச்சியாளர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆராய்ச்சியாளர்கள் தங்களது சோதனையை மனித தரவுகளுடனும் ஒப்பீடு செய்தனர். ஆண்களுக்கு வயது அதிகரிக்கும்போது குருதியில் பாஸ்பேடிடைல்கோலின் அளவு படிப்படியாக குறைகிறது. பெண்களுக்கு ‘மெனோபாஸ்’ எனப்படும் மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும் காலத்தில் இந்த லெவல் மிகக் கடுமையாகச் சரிவது கண்டறியப்பட்டது. பெண்களுக்கு அந்தச் சமயத்தில் ஏற்படும் அதிக சோர்வுக்கும் மைட்டோகாண்ட்ரியா திறன் குறைவதற்கும் இதுவே முக்கியக் காரணம்.

மனித குருதியில் பாஸ்பேடிடைல்கோலின் அதிகமாக இருப்பவர்களுக்கு மைட்டோகாண்ட்ரியல் ஸ்ட்ரெஸ் குறைவாக இருப்பதோடு, அவர்களது நடக்கும் வேகம் மற்றும் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மிக முக்கியமான விசயம் என்னவென்றால், நடுவயதிலோ, முதிய வயதிலோ உணவில் கோலின் – பாஸ்பேடிடைல்கோலின் உருவாக உதவும் ஊட்டச்சத்து சேர்க்கப்படும்போது, அது செல்களை மீண்டும் புத்துணர்ச்சியடைய வைக்கிறது.

வயது முதிர்ந்த புழுக்களுக்கு கோலின் ஊட்டச்சத்து வழங்கப்பட்டபோது, அவற்றின் மைட்டோகாண்ட்ரியா வடிவமும் சுவாசமும் மேம்பட்டன. மனித செல்களில் உள்ள டைப்-2 நீரிழிவு நோய்க்காக பயன்படுத்தப் படும் ‘மெட்ஃபார்மின்’ மருந்தால் ஏற்படும் மைட்டோ காண்ட்ரியல் அழுத்தத்திலிருந்து மனித செல்களைக் ‘கோலின்’ பாதுகாத்தது. நமது குடல் நுண்ணுயிரிகள் மனித உடலில் இந்தச் சத்துக்களை எவ்வாறு கிரகிக்கின்றன என்பது குறித்து மேலும் பல ஆய்வுகள் தேவைப்பட்டாலும், வயதாவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்ற கருத்தை இந்த ஆய்வு மாற்றியமைத்துள்ளது. சரியான ஊட்டச்சத்து, இலக்கு வைக்கப்பட்ட சிகிச்சைகள் மூலம் நமது செல்லின் ஆற்றல் இயந்திரங்களை வயதான காலத்திலும் இளமையோடு இயங்க வைக்க முடியும் என்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.

– எஸ்.மீனாட்சி சுந்தரம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *