இந்நாள் – அந்நாள்

பெ.வரதராஜுலு (நாயுடு) நினைவு நாள் இன்று (23.7.1957)

பெ.வரதராஜுலு (நாயுடு) சேலம் மாவட்டம் ராசிபுரத்தில் (4.6.1887) பிறந்தார். சொந்த ஊரில் ஆரம்பக் கல்வி பயின்றார். உயர்நிலைக் கல்வி கற்கும்போது, நாடெங்கும் பரவிய வந்தேமாதரம் இயக்கம் இவரைக் கவர்ந்தது. மாணவர்களை ஒன்று திரட்டி ‘முற்போக்காளர் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினார்.

அந்நியத் துணி புறக்கணிப்பு போன்ற போராட்டங்களில் பங்கேற்றதால், தொடர்ந்து கல்வி கற்க இயலவில்லை. சித்தவைத்தியம், ஆயுர்வேதம் கற்றுத்தேர்ந்தார். மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு, புகழ் பெற்றார். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார். தேசிய அரசியலில் 19 வயதிலேயே ஈடுபட்டார்.

1916 முதல் தீவிர அரசியலில் பங்கேற்றார். மதுரை ஹார்வி மில் தொழிலாளர் வேலைநிறுத்தத்தை ஊக்குவித்துப் பேசியதற்காக ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்றார்.

1917 இல் தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கத்தை தொடங்கினார். பெரியகுளம் தாலுகா காங்கிரஸ் மாநாட்டில் தடையை மீறிப் பேசியதற்காக 6 மாத கடுங்காவல் தண்டனை பெற்றார். காந்தியடிகள் 1920 இல் தமிழ்நாடு வந்தபோது இவரது வீட்டில் தங்கினார்.

காந்தியடிகள் 1922-ல் சிறையில் அடைக்கப்பட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். வருமானவரி கட்டாமல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தியவர், காந்தியடிகள் விடுதலையான பிறகுதான் செலுத்துவேன் என்று திட்டவட்டமாக அறிவித்தார். இதை அரசாங்கத்துக்கு தெரிவித்து இவர் எழுதிய கடிதம் காந்தியடிகளின் ‘யங் இந்தியா’ வில் வெளிவந்தது.

தமிழ்நாடு முழுவதும் சென்று காங்கிரஸ், தேசியம், விடுதலை குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்தார். தென்னாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்த்த பெருமை இவருக்கும் உண்டு. 1925 இல் தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பணியாற்றினார்.

இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர். திருவிக-வுக்கு அடுத்து, தேசியத் தமிழ் இதழியல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர் எனப் போற்றப்பட்டார்.  ‘பிரபஞ்சமித்திரன்’ என்ற வார இதழ் மூலம் இதழியலில் அடியெடுத்து வைத்தார். நட்டத்தில் ஓடிய அந்த இதழை வாங்கி 2 ஆண்டுகள் நடத்தினார். அதில் பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கப் போக்கையும், தொழிலாளர் நலனுக்கு எதிரான போக்கையும் கடுமையாக சாடி எழுதினார். இதன் காரணமாக இவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அந்த இதழ் நின்றது. பின்னர் 1925 இல் ‘தமிழ்நாடு’ என்ற இதழைத் தொடங்கினார். அதில் இவர் எழுதிய கட்டுரைகள் தேசத் துரோகமானவை என்று குற்றம்சாட்டப்பட்டு 9 மாத கடுங்காவல் தண்டனை பெற்றார்.  1931 இல் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் சென்னை பதிப்பைத் தொடங்கினார்.

1951- இல் சென்னை மாநில சட்ட மேலவை உறுப்பினராக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அரசியல், சமூகம், தொழிற்சங்கம், இதழியல் என பல்வேறு களங்களிலும் முத்திரை பதித்த பெ.வரதராஜுலு நாயுடு தம் 70 ஆவது வயதில் (1957) மறைந்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *