ஜாதி என்னும் பெரும்போதை!

பொதுச் சமூகத்தின் கணக்கில் முக்கியப் பிரச்சினையாகத் தெரியாத, இந்தக் கால மொழியில் சொல்லப் போனால் ‘டிரெண்டில்’ இல்லாத, ஆனால், ஆழமான பிரச்சினைகளைச் சரியாக அடையாளம் கண்டு, அதனைத் தீர்ப்பதற்கான முன் முயற்சிகளை எடுப்பது திராவிடர் கழகத்தின் பணி – பாணி! தந்தை பெரியாரே தன்னைப் பற்றி அறிமுகமாக எழுத வேண்டும் என்னும்போது “இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்” என்று எழுதியிருக்கிறாரே… அப்படி யாரும் செய்ய முன்வராத ஒரு தொண்டை, யாருக்கும் தோன்றாத ஒரு பிரச்சினையை எடுத்துச் செய்வதுதான் திராவிடர் கழகம். இதனால், அதற்கு விளம்பரம் கிடைக்காது; இது எப்படி சமூகத்தை மாற்றும் என்பதும் பலருக்குப் புரியாது. ஆனால், நாட்டில் புரையோடிப் போயிருக்கும் அத்தகைய சிக்கல்களை அடையாள கண்டு திராவிடர் கழகம் செய்திருக்கும் பணி தான், நூறாண்டு காலத்தில் தமிழ்ச் சமூகம் அடைந்திருக்கும் மாற்றத்திற்குக் காரணம்.

அவற்றில் சில நீண்ட கால உழைப்பைக் கோரும் பிரச்சினைகள்; சில புதிது புதிதாக முளைக்கும் பிரச்சினைகள்; சில உருமாற்றம் கொள்ளும் பிரச்சினைகள் – இவை எல்லாவற்றையும் கழகம் எதிர்கொண்டே வந்திருக்கிறது; வருகிறது. அப்படிப்பட்ட சில முக்கியமான போதைகளை அடையாளம் காட்டி, அவற்றை ஒழிப்பதை வேலைத் திட்டமாக அறிவித்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை (17.07.2026) சம காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

போதை என்ற பொதுவான சொல், மது, மருந்து, புகை போதைகளுடன் பெரிதும் தொடர்புபடுத்தப்படுகிறது. அவை மிக முக்கியமான வகைப் போதைகளே என்றாலும், அவை மட்டுமே போதைகளல்ல! “போதைப்பழக்கம் என்பது மூளை நரம்புகள், மரபியல், சுற்றுச்சூழல் மற்றும் ஒரு தனிநபரின் வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான சிக்கலான தொடர்புகளை உள்ளடக்கிய, சிகிச்சையளிக்கக்கூடிய ஒரு நாள்பட்ட மருத்துவ நோயாகும். போதைக்கு அடிமையானவர்கள், தீய விளைவுகள் ஏற்பட்டபோதிலும், கட்டாயப் பழக்கங்களாக மாறும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள் அல்லது நடத்தைகளில் ஈடுபடுகிறார்கள்” என்று வரைவிலக்கணம் தருகிறது அமெரிக்க போதை நீக்க சிகிச்சைக்கான சங்கம். அப்படிக் கணக்கிட்டால், இந்தியாவில் இருக்கும் நாள்பட்ட நோய்கள் ஜாதியும், மதமும்!

எந்தவொரு பழக்கமும், மெல்ல மெல்ல உருவாகி, பயிற்றுவிக்கப்பட்டு, தன்னையும் அறியாமல் அதைத் தேடி அலையச் செய்து, தனக்கும், தன்னைச் சுற்றியிருப்போருக்கும், தான் சார்ந்த சமூகத்துக்கும் கேடு பயக்கும் என்றாலும், அதிலிருந்து விலக முடியாத வண்ணம் மாறினால், அதனை போதை என்று வரையறுக்கலாம். இந்தியாவின் ஜாதி அப்படியானது தான்! அறிவுக்குப் பொருந்தாத பாகுபாடு, ஒருவரை ஒருவர் அடக்கி ஆளத் தூண்டும் மனநிலை, ஒருவரைத் தாழ்த்துவதன் மூலம் அடையும் மனக் கிளர்ச்சி, போலிப் பெருமைகளாலும், கும்பல் கூட்டத்தாலும் தன்னிலை இழக்க வைக்கும் தன்மை இவையனைத்தும் ஜாதி தரும் போதைகள். அந்த ஜாதியால் தானும், தன் சமூகமும் காலம்காலமாக அடக்கி வைக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்ச்சி சிறிதும் இன்றி மரத்துப் போகிறது. தனக்கும் கீழ் சிலர் இருந்தால் போதும் என்ற மனநிலையைத் தக்க வைக்கவே, இந்தியாவின் படிக்கட்டு ஜாதி முறை உருவாக்கப்பட்டிருக்கிறது. யாருக்கும் யாரும் சமம் இல்லை; ஒருவருக்குக் கீழ் ஒருவர்; தனக்கு மேலே யார் இருக்கிறார் என்பதைக் கவலைப்படாமல் தனக்குக் கீழ் இருப்பவரை நசுக்கிச் சுகம் அடையும் போக்கு என்று ஒரு தீவிரமான மனநோயை ஒட்டுமொத்த சமூகத்திலும் விதைத்திருப்பது தான் ஜாதியின் சாதனை.

பார்ப்பனரின் தாசி மக்கள் என்று எழுதப்பட்டிருக்கும் மனுஸ்மிருதியின் அடிப்படையில், தன்னைச் ‘சூத்திரன்’ என்று ஏற்றுக் கொள்ளத் தூண்டும் மனநிலையை வேறு எதனுடன் ஒப்பிட முடியும்? தான் தூக்கி வளர்த்த பிள்ளைகளை, அவர்தம் விருப்பத்தின் படி திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று தடுத்து, கொலை செய்யும் பாதகத்திற்கும் தூண்டுவது அந்த வெறிதானே! அறிவியலின் படி எந்த ஆதாரமும் இல்லாத பிரிவினையைக் காலம் முழுக்கப் பிடித்து வைத்துக் கொள்வதில் போலிப் பெருமை காணும் பித்துநிலைதானே! ஊரையே கொளுத்தவும், உற்றாரை ஒதுக்கிவைக்கவும், சக மனிதனைத் தீண்டுவதையும் குற்றமாகப் பார்க்கவும் அதுதானே வகை செய்கிறது. உழைப்பை மட்டும் உறிஞ்சிவிட்டு, குடிக்கும் நீரையும் கொடுக்காத – கொடுமைகளை அதன் பெயரால் தானே நியாயப்படுத்த முடிந்தது. பிறவியிலேயே பாவப் பிறவி என்று மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் துயரத்தைக் கொஞ்சமும் மனிதநேயமின்றித் தருவதற்கு அதுதானே துணிந்தது! செத்தபின்னும் சுடுகாட்டு வழியில் அதுதானே முன்னே போய் நின்று கலகமூட்டியது!

கல்வியை மறுத்ததும், கற்க விரும்பியவனின் கட்டைவிரலைக் கேட்டதும், தலையை அறுத்ததும், நாக்கை அறுக்கச் சொன்னதும், காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொன்னதும் அந்த ஜாதியும் வர்ணாசிரமமும் தானே! அந்த அடிமைத்தனத்தை எதிர்க்க முடியாத அச்சத்தைத் தந்ததும் அதே தானே!

அந்தப் போதைதான் இன்று, ஜாதிக்கொரு ‘மேட்ரிமோனியல்’ வைத்து அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது. உலகளாவிய அளவில்  தொற்றுநோயைப் போல ஏற்றுமதி செய்யப்படுகிறது. உழைக்கப் போன இடத்தில், உளுத்துப் போன ஜாதியையும் தூக்கிக் கொண்டுபோய் வேற்றுமை பார்க்கும் வியாதியைத் தந்திருக்கிறது. “அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற புலம்பெயர் ‘ஜாதி முகவர்கள்’ முயற்சியில், எப்படி கஞ்சா, அபின் விற்று லாபம் அடைந்து உலக மாஃபியா கும்பல் வலிமையாக உள்ளதோ, அதேபோல, ஜாதி, மதவெறி பரப்பும் கும்பலும் உலக நாடுகளில், நம் நாட்டிலிருந்து அங்குக் குடியேறி, அந்நாட்டு ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றி, ஜாதி வெறியை மிக லாவகமாகப் பரப்பும் நிலை பரவலாகி வருகிறது! ஆணவக் கொலை முதல் அரசியல் கொலை வரை அதன் விளைவு என்பதை எவரே மறுக்க முடியும்?” என்னும் திராவிடர் கழகத் தலைவரின் கேள்விக்கு என்ன பதில்?

அந்தப் போதையை ஒழித்துக் கட்டுவதற்குக் களம் காண… திராவிடர் கழகத்தை விட்டால் வேறு நாதியுண்டா? போதை ஒழிப்புக்கான செயல்திட்டத்தில் முதலிடத்தை ஜாதிக்குத் தந்தது சாலப் பொருத்தமல்லவா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *