திருச்சி, ஜூலை 23 திருச்சி சிறீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபத்தில் நாள்தோறும் பொதுமக்கள் தங்களது முன்னோர்க ளுக்கு ‘திதி தர்ப்பணம்’ செய்து ‘புனித’ நீராடி விட்டுச் செல்வது வழக்கம் மேலும் ஆடி, புரட்டாசி, தை உள்ளிட்ட மாதங்களில் வரக்கூடிய ‘அமாவாசை’ நாள்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து தங்களது முன்னோர்களுக்கு ‘வழிபாடு’ செய்வது வழக்கமாக உள்ளது.
அதனை செய்து கொடுக்கக்கூடிய புரோகிதர்கள் சுமார் 200–க்கும் மேற்பட்டோர் இங்கு உள்ள மண்ட பம் படித்துறை மற்றும் அம்மா மண்ட பத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல தலைமுறைகளாக அமர்ந்து வரக்கூடிய மக்களுக்குத் ‘திதி’ உள்ளிட்ட முன்னோர் ‘வழிபாடு’களைச் செய்து கொடுப்பது வழக்கமாக இருந்து வந்த நிலையில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிறீரங்கம் கோயில் நிர்வாகமானது திடீரென அம்மா மண்டபம் மற்றும் படித்துறை சுற்றியுள்ள பகுதிகளில் கோயிலுக்கு உண்டான இடம் உள்ளது எனக் கூறி, அளவைகள் நடும் பணி நடைபெற உள்ளது எனக் கூறி, அளவைக் கற்களை கொண்டு வந்து மண்டபத்தில் வைத்துள்ளனர்.
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கோயில் நிர்வாகம் எடுத்த திடீர் நட வடிக்கையைக் கண்டித்து, தங்களை நம்பி சுமார் 500 குடும்பங்கள் உள்ளது எனவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் எனக் கூறி திடீரென புரோகிதர்கள் அம்மா மண்டபத்தில் இருந்து சிறீரங்கம் செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மறியலில் ஈடுபட்ட புரோகிதர்களிடம் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
