பொதுமக்களின் எதிர்ப்புகள் பேருரு கொள்ளும் எச்சரிக்கை! இடைத்தேர்தலிலும் மக்களின் எதிர்ப்பு அலைகளை சந்திக்க நேரிடும்!!

72 நாள்களில் ஆளுங்கட்சியின் சாதனைகள் என்ன?
ஆளும் கட்சிப் பிரமுகர்களே அத்து மீறல், ஊழல், பாலியல் குற்றங்களுக்கு ஆளாகும் நிலை!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

ஆளும் த.வெ.க.வின் கடந்த 72 நாள்கள் ஆட்சி பாராட்டத்தக்கதாக இல்லை. ஆளும் கட்சிப் பிரமுகர்களின் அத்துமீறல்கள், தரம் தாழ்ந்த பேச்சுகள் – மக்கள் மத்தியில் வெறுப்பைத்தான் விதைத்து வருகின்றன. இடைத்தேர்தலில் அதனை ஆளும் கட்சி சந்திக்க நேரிடும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

த.வெ.க. தலைமையில் ஒரு கூட்டணி அரசு அமைந்து 72 நாட்கள் ஆகின்றன. இத்தனை நாட்களில் இந்த அரசின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை – ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. என்ன வாக்குறுதியை அளித்து 108 இடங்களைப் பிடித்ததோ, அவற்றை நிறைவேற்றுவதற்கான எந்த முன்னெடுப்பையும் அரசு எடுத்ததாகத் தெரியவில்லை.

மாறாக, ஆட்சியைத் தக்க வைப்பதற்காகக் குதிரை பேரமும்,  கட்சிகளை உடைத்தல், கட்சிகளைக் கலைத்தல், பிற கட்சி எம்.எல்.ஏ.க்களைப் பதவி விலகச் செய்து தங்கள் கட்சியில் இணைத்துக்கொள்ளல், இவை தவிர, எதிர்க்கட்சிகளின் மீதான அடக்குமுறையும், கருத்துரிமைப் பறிப்புமே அன்றாட நடப்புகளாகிவிட்டன.

த.வெ.க. அரசின் பழிவாங்கும் அரசியல்!

தங்கள் ஆட்சியில் பலம் இல்லை என்னும் தன்னம்பிக்கையின்மை, மக்களால் வலிமையான எதிர்க்கட்சியாக உருவாக்கப்பட்டுள்ள தி.மு.க. மீதும், அதன் பொறுப்பாளர்கள்மீதும் அடக்குமுறையினை ஏவுவதன் மூலம் தன்னை பலம் மிக்கதாகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது.

  1. தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மேனாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனைக் கைது செய்து மிரட்டல்.
  2. யாரோ ஒருவர் பணம் வாங்கினார் என்று மேனாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும், சட்டமன்ற உறுப்பி னருமான எஸ்.எஸ்.சிவசங்கரிடம் காவல்துறை விசாரணை.
  3. த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்குப் பேரம் பேசினார்கள் என்று சிலரைக் கைது செய்துவிட்டு, எந்த விதமான சரியான ஆதாரங்களும் இல்லாமல், மேனாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், அவரது தம்பி மீதும் வழக்குகள், தேடுதல் என்று பரபரப்பு.
  4. வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளுக்குப் பிறகு, எப்போது தன்னால் விசாரணைக்கு வர முடியும் என்று விவரமாகத் தகவல் அனுப்பிய பிறகும், மேனாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கு ‘லுக் அவுட் நோட்டீஸ்’ அனுப்புதல்.
  5. பொதுக்கூட்டத்தில் விமர்சித்தார் என்பதற்காக, விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மீது கைது நடவடிக்கை.
  6. சமூக ஊடகங்களில் இந்த ஆட்சியை விமர்சித்து எழுதிய மாற்றுத் திறனாளி உள்பட பலர் மீது வழக்குகள், கைதுகள்.
  7. ‘ஜென் சீ’ திமுக என்ற பெயரில் கூட்டங்களை நடத்திய இளைஞர்கள் மீது தாக்குதல், கைது மிரட்டல்கள், காவல்துறை கண்காணிப்புகள், வீடுகளில் தேடல்கள் என்று பட்டியல் நீள்கிறது.
  8. ஊடகவியலாளர் விஜயன் மீது விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பு, செல்போன் பறிப்பு.

இப்படி பழிவாங்கும் அரசியல் தான் இந்த இரண்டு மாதங்களில் நடந்திருக்கிறதே தவிர, பாராட்டத்தக்க, மக்களுக்கான எந்த திட்டங்களும் நடத்தப்படவில்லை.

இதை நாம் மட்டும் சொல்லவில்லை. பொதுநிலையில் இருந்து பார்ப்போர் அனைவரின் கருத்துமாகும் என்பதோடு, மேற்காட்டிய பழிவாங்கும் வழக்குகளில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் ஆணைகளும் ஆட்சியின் செயல்பாடுகள் ஏற்கவில்லை என்பதையே காட்டுகின்றன என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது.

பழனி கோவில் நிலப் பிரச்சினையில் நடந்தவற்றையும் நீதிமன்றம் ஏற்கவில்லை – அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் சொல்லி யுள்ளதே!

இன்னொரு புறம், சமூக ஊடகங்களின் வாயிலாக எதிர்க்கட்சிகள் மீது அவதூறு, வசைமாரி, ஆபாச அர்ச்சனைகள். இதற்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைச்சர்களில் சிலரே விடுக்கும் மிரட்டல்கள்.

முதலமைச்சரின்
முகம்
சுளிக்க வைக்கும் பேச்சுகள்!

இவற்றுக்கு உச்சமாக சட்டமன்றத்திலும், கரூர் கூட்டத்திலும் முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் முகம் சுளிக்க வைக்கும் பேச்சும், பாவனைகளும் இருக்கின்றன. ஒரு மேனாள் முதலமைச்சரை, இந்நாள் முதலமைச்சர் ஒருவர் இவ்வளவு மோசமாகப் பேசுவாரா என்று சொல்லும் அளவுக்குத் தமிழ்நாட்டில் இல்லாத வகையிலான, யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத நடவடிக்கைகள்.

முறையான சரியான அரசுக்கென்று உள்ள மாண்புகள், நடைமுறைகள், ப்ரோட்டோகால்கள் பின்பற்றப்படுவதில்லை. ஆக்கப்பூர்வமாக நடக்க வேண்டிய ஆட்சி, அக்கப்போர்களை மட்டுமே நாளும் உருவாக்கி, செய்தியாக்கி, அதை சமூக ஊடகங்களின் வழி பரப்பிக் கொண்டிருக்கிறது.

அரசு அலுவலங்களில் அத்து மீறி நுழையும் ஆளும் கட்சியினர்!

அமைச்சர்கள் முதல் கட்சியின் சாதாரணப் பொறுப்பாளர்கள் அல்லது பொறுப்பாளர்கள் என்று சொல்லிக் கொள்வோர் வரை, ஆய்வுக்குச் செல்கிறோம் என்ற பெயரால், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளுக்குச் சென்று மாணவர்களுக்கு, மருத்துவர்களுக்கு, மக்களுக்குத் தொல்லை கொடுப்பதும், அதைக் காணொலியாக்கி வெளியிடுவதும் வெகுமக்களுக்குச் சலிப்பைத் தான் தந்திருக்கிறது. பள்ளிகளில் புகுந்து அரசியல் பிரச்சாரம் செய்வதும், பள்ளிப் பிள்ளைகளை அரசியல் பணிகளில் ஈடுபடுத்துவதும், குழந்தைகள் மத்தியில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் வகையில் அமைச்சர்கள் நடந்துகொள்வதும் சகிக்க முடியாதவையாகும்.

ஆளும் கட்சிப் பிரமுகர்களின் ஊழல்கள், பாலியல் குற்றங்கள்!

ஆளுங்கட்சியினரின் இத்தகைய அத்துமீறல்களையும், தங்கள் சொந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உள்பட பல முக்கியப் பொறுப்பாளர்கள் மீதும் ஊழல், பாலியல் பிரச்சினை, மிரட்டல், போதை பயன்படுத்தியதாக வெளிவந்த காணொலி என்று ஏராளமான பிரச்சினைகள் இருந்தபோதும், இவற்றையெல்லாம் சரி செய்யவோ, அவர்கள் மீது சரியான சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கவோ, கண்டிக்கவோ, சொன்னாலும் கேட்காமல் மீறிச் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கவோ எந்த ஒரு முயற்சியும் செய்யாத கட்சியாக, ஆட்சியாக நடந்துகொண்டிருப்பது மாபெரும் அவலமாகும். இந்தப் போக்குகள் கடும் கண்டனத்திற்குரியவையாகும்.

பழனி கோவில் நிலப் பிரச்சினையில் நடந்தவற்றையும் நீதிமன்றம் ஏற்கவில்லை – அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் சொல்லி யுள்ளதே!

இவற்றுக்கு மேலாக, மறைமுகமான மின் கட்டண உயர்வு, கொள்கை எதிரி என்று சொல்லிக் கொண்டே ஒன்றிய அரசின் விபி ஜி ராம்ஜி போன்ற திட்டங்களை ஏற்பதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

எதிர்வரும் இடைத்தேர்தல்களின் முடிவுகள்?

இதன் எதிர்விளைவுகள் பேருருக் கொள்ளும் என்பதை ஆட்சியாளர்கள் எண்ணிப்பார்க்கத் தவறக் கூடாது. இந்தப் போக்கு மாறாவிட்டால், முறையான ஆட்சியாக இது நடக்காவிட்டால், இது அனைத்துக் கட்சிகளையும் ஒன்று சேர்த்து இந்த ஆட்சிக்கு எதிராக நிறுத்தும்! இன்றைக்கு உடன் இருக்கும் கூட்டணிக் கட்சியினரும் கூட, இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டு மனம் நொந்து முழுமையாக ஆட்சியை ஆதரிக்க முடியாமலும், எதிர்க்க முடியாமலும் தவித்து வருவதைக் காண முடிகிறது. இத்தகைய நிலையில், அக் கட்சிகளும் வெகுநாள் நீடிக்க முடியாது. தவிர்க்க முடியாத சூழலில் தொடங்கிய ஆதரவு நிலைமை அப்படியே இருக்கும் என்று அரசு எதிர்பார்க்கவும் முடியாது.

எதிர்வரும் இடைத் தேர்தல்களிலேயே மக்களின் எதிர்ப்பு அலை தீவிரமாக வெளிப்படுவதை எவராலும் தடுக்க முடியாது!

இதை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொண்டு தங்கள் போக்கை மாற்றிக் கொண்டு, ஆக்கப் பூர்வமாகத் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றும் செயல்களில் ஈடுபட வேண்டும்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்  

22.7.2026          

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *