பழந்தமிழர் பண்பாட்டை ஏற்காத
பா.ச.க.வும் மோடியும்
பா.ச.க.வும் மோடியும்
மே.து.ரா.
தமிழ்நாட்டின் தொன்மைப் பண்பாட்டினை ஏற்காமல் மறுக்கும் ஸநாதனிகளின் போக்குத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
2014-2015, 2015-2016ஆம் ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக ஒன்றியத் தொல்லியல் துறையைச் சார்ந்த அமர்நாத் ராமகிருட்டிணன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு கட்ட அகழ்வின் முடிவு களை வெளியிடுவதில் ஒன்றிய அரசு தயக்கம் காட்டி வருகிறது; தடையாகவும் நிற்கிறது.
கீழடி அகழ்வுகள் நடந்துகொண்டிருந்தபோது, அதில் கிடைத்த தரவுகள் தமிழர்களின் பண்பாட்டைக் கி.மு. எட்டாம் நூற்றாண்டு வரை கொண்டுசெல்கின்றன என்னும் உண்மையை ஒன்றிய அரசின் பா.ச.க.வால் ஏற்க இயலவில்லை. இதனால் 2017இல் கீழடி அகழ்வினைச் செம்மையாக மேற்கொண்டிருந்த அமர்நாத் அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும், அகழ்வுகளின் பொறுப்பாளர் என்ற முறையில் 982 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கை யினை அவர் 2023 சனவரியில் ஒன்றியத் தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தார்.
தரவுகள் காட்டும்
காலப் பகுப்புகள்
காலப் பகுப்புகள்
முதல் காலகட்டம் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. அய்ந்தாம் நூற்றாண்டு வரை, இரண்டாவது காலகட்டம் கி.மு. அய்ந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதலாம் நூற்றாண்டு வரை, மூன்றாவது காலகட்டம் கி.மு. முதலாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை என்ற அளவில் காலப் பகுப்பினைத் தன்னுடைய ஆய்வில் தெளிந்து, பல்வேறு சான்றுகளையும் எடுத்துக்காட்டியிருந்தார்.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக அந்த அறிக்கை யினை வெளியிடாமல், காலவரை யறையினை மாற்றித் தரவேண்டும் என்ற அழுத்தம் அகழ்வாளர் அமர்நாத்துக்கு நீடித்துவந்தது.
102 குழிகளில் 7500க்கும் மேற்பட்ட பொருள்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இவற்றில் 88 கரிமக் கூறுகளும் இருந்தன. இவற்றைக் கொண்டு அறிவியல் அடிப்படையில் காலத்தைக் கணக்கிடுவதில் ஒன்றிய அரசு விருப்பம் காட்டவில்லை. காலம் தாழ்த்தி எட்டுக் கரிமப் பொருள்களின் ஆய்வுக்கு மட்டுமே ஒன்றிய அரசு ஒப்புதல் தந்தது. தமிழ்நாடு அரசு 10, வேறு வகையில் 5 என 23 கரிமப் பொருள்கள் மட்டுமே ஆய்வுக்கூடத்தை எட்டின.
இவற்றின் வழியே கிடைத்த முடிவுகளைக் கொண்டுதான் கால வரையறைகள் அகழ்வாய்வு முறைமைகளின் அடிப்படையில் இறுதி செய்யப்பட்டன. ஆனால், இந்த அறிக்கை வெளியானால் இதுவரை கட்டமைத்திருக்கின்ற ஸநாதனக் கற்பனைகளைக் கரைந்துவிடும் என்னும் அச்சம் பா.ச.க.வின் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்டுவிட்டது. அவர்களது எதிர்பார்ப்புக்கு ஏற்றதாகக் காலக் கணக்குகள் இருக்கவில்லை.
ஸநாதனத்தின் எதிர்பார்ப்பு
கால வரையறை கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குள் இருக்கவேண்டுமென அவர்கள் எதிர்பார்த்தனர். கட்டமைப்புகள் கி.மு. ஆறாம் நூற்றாண்டளவில் தோன்றிவிட்டதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவர்கள் இருக்கவில்லை. அகழ்வுகளில் வழிபாட்டுப் பொருள் எதுவும் கிடைக்காததும் அவர்களுக்கு அதிர்வினைத் தந்துவிட்டது. அசோக பிராமிக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழ் எழுத்துகள் தோன்றிவிட்டன என்பதை அவர்களால் ஒப்புக்கொள்ள இயலவில்லை.
இதுவரை ஸநாதனிகள் கட்டமைத்து வந்த வரலாற்றுக்கு முரணாகக் கீழடி அகழ்வறிக்கை இருப்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
இட மாறுதல் உள்ளிட்ட பல நெருக்குதல்களைக் கண்டும் அஞ்சாத, அசையாத அமர்நாத், தான் வழங்கிய அகழ்வறிக்கை முழுமையான சான்றுகளுடன் அறிவியல் அடிப்படையில் அமைந்துள்ளதால் அதில் ஓரெழுத்தைக்கூடத் திருத்தவியலாது என்று தெளிவுபடுத்திவிட்டார்.
இதனால், வேறொரு குழுவினைக் கீழடிக்கு அனுப்பி, ஸநாதனிகள் விரும்பும் வகையில், மாறுபட்டதொரு கற்பனை அறிக்கையினை உருவாக்க ஒன்றியத் தொல்லியல் துறை தற்போது முனைப்புக் காட்டிவருகிறது.
கீழடிக்கு அப்பால் அகழ்வுகள்
தமிழ்நாடு அரசின் முயற்சியில், ஆதிச்சநல்லூர் (தூத்துக்குடி மாவட்டம்), கொடுமணல் (ஈரோடு), பொருந்தல் (திண்டுக்கல்), கீழடி (சிவகங்கை), மாங்காடு (சேலம்), கீழநமண்டி (திருவண்ணாமலை), மயிலாடும்பாறை (கிருட்டிணகிரி), சிவகளை (தூத்துக்குடி) போன்ற பல இடங்களில் கடந்த இருபத்தைந்தாண்டுகளுக்கு மேலாக அடுத்தடுத்து நடைபெற்ற – நடைபெற்றுவரும் அகழ்வுகள் தமிழரின் பண்பாட்டுத் தொன்மையை மேலும் தெளிவுபடுத்தி வருகின்றன.
தமிழ்நாட்டில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட இரும்புக் காலத்தைச் சேர்ந்த ஈமம் தொடர்பான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில், 1362 முதுமக்கள் தாழிகள், 996 பரல் உயர் பதுக்கைகள், 225 கல் வட்டங்கள், 634 வாழ்விடத்துடன்கூடிய ஈமக் காடுகள் போன்றவை உள்ளன. இவற்றில் ஒருசில இடங்களன்றி, பெரும்பாலான இடங்களில் அகழ்வுகள் நடைபெறவில்லை.
இவற்றில், சிவகளை அகழ்வில் 85க்கு மேற்பட்ட இரும்புப் பொருள்கள் கிடைத்தன. இவற்றின் காலம் கி.மு. 2953 முதல் கி.மு. 3395 வரை என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், சிவகளையில் கிடைத்த எழுத்துப் பொறிப்புகளின் காலம் கி.மு. 685 எனத் தெரிந்துள்ளது. சிவகளையில் கிடைத்த நெல்மணிகளின் காலம் கி.மு. 1155 என்றால், ஆதிச்சநல்லூர் அகழ்வு நெல்மணிகளின் காலம் கி.மு. 1149 என அறியப் பெற்றது.
இவை மட்டுமல்லாது, அண்மையில் மேட்டூர் அருகில் தெலுங்கனூர் மற்றும் மாங்காடு காவிரிக் கரையோரப் பகுதிகளில் நடைபெற்ற அகழ்வில் ஏறத்தாழ 3,600 ஆண்டுகள் பழமையான மனிதப் புதைகுழிகள், முழுமையான மனித எலும்புக்கூடுகள், அவற்றுடன் அடக்கம் செய்யப்பட்ட உயர் கரிம எஃகினாலான தற்காப்பு வாள், தாலிகள், சுண்ணாம்பு மணிகள், மண்பானைகள் மற்றும் பல்வேறு பொருள்கள் கிடைத்துள்ளன.
தென்காசி மாவட்டத்தில் வைப்பாற்றின் கரையோரத்தில் உள்ள கரிவலம்வந்தநல்லூர் அகழ்வில் ஏறத்தாழ 13 அடி நீளம், 13 அடி அகலம் கொண்ட சதுர வடிவக் கிணற்றுச் சுவற்றினைக் கண்டறிந்துள்ளனர். இந்த கிணற்றுச்சுவர் 40 செ.மீ. அகலமும் 20 செ.மீ. நீளமும் 7 செ.மீ. உயரமும் கொண்ட செங்கற்களால் களிமண் சாந்து பூசி நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளது. கிணற்றுக்குள் இறங்கி ஏறப் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அகழ்வுகள் யாவும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி விரவிக் கிடப்பதைப் புறக்கணித்து விடக்கூடாது. தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே தமிழ்ப் பண்பாட்டுத் தொன்மைக்கான சான்றுகள் பெருமளவில் கிடைத்துவருகின்றன.
கீழடியில் மூன்றாவது கட்ட அகழ்வுக்கு வாய்ப் பில்லையென ஒன்றியத் தொல்லியல் துறையினரால் அனுப்பப்பட்ட வேறொருவர் அறிக்கை தந்து முடித்து வைத்த பின்னர், மேலும் பல கட்டங்களில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அகழ்வினை மேற்கொண்டு தமிழரின் தொன்மைப் பண்பாட்டினை வெளிக்கொண்டு வருகிறது.
தமிழரின் தொன்மையையும் பெருமைகளையும் வெளிக்கொண்டுவரக் கடந்த தி.மு.க. ஆட்சியில் பெருமுயற்சிகள் எடுக்கப்பட்டன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஒன்றிய அரசின் ஒப்புதல்களை வலியுறுத்திப் பெற்று, ஒத்துழைப்புக் கிடைக்காதபோதும் நிதி ஒதுக்கீடுகளை வேண்டியளவு நல்கி உறுதியுடன் அகழ்வுகள் விரிவுபடுத்தப்பட்டன. அறிவுலகம் ஏற்கத்தக்கவாறு, அகழ்வுப் பொருள்கள் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு ஆய்வுக்கூடங்களில் மதிப்பிடப்பெற்று முடிவுகள் காணப்பட்டன.
இந்த நிலையில், ஒன்றிய அரசு தனிக் குழு அமைத்துக் கீழடியின் முதல் இரண்டு கட்ட அகழ்வுகளில் கிடைத்த பொருள்களைக் கொண்டு மீண்டுமொரு கற்பனை அறிக்கையினை உருவாக் குவது பொருத்தமில்லாததாகவும், உண்மைக்கு மாறான தாகவுமே அமையும் என்பதில் அய்யமில்லை.
மோடியின் வெற்றுச் சொற்கள்
வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகத் தமிழ் பழைமையான மொழி, திருக்குறள் பெருமையுடையது என்றெல்லாம் வேதம் ஓதுவதைப் போல ஒப்புக்குக் குரல் கொடுக்கிறார் பிரதமர் மோடி. ஆனால் தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையையும் சிறப்பையும் மேன்மையையும் வெளிக்கொணர எதிர்ப்பைக் காட்டுகிறார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆனைமங்கலம் செப்பேடுகளை நெதர்லாந்து அரசிடமிருந்து பெற்றுவந்ததை மோடியும் பா.ச.க.வினரும் உயர்வாகப் பேசுகின்றனர். அய்.நா. அமைப்பின் அறிவுறுத்தலால், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் களவாடிச் சென்ற அரும்பொருள்களைத் திருப்பித் தரும் நிலை ஏற்பட்டது. இந்த அடிப்படையில்தான் இந்த ஆனைமங்கலம் செப்பேடுகள் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டன. இதற்கான எத்தகைய முயற்சியையும் மோடி அரசு மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
ஆனால், ஆனைமங்கலம் செப்பேடுகளைக் கொண்டு வந்ததற்கு மோடிக்குத் தமிழர்கள் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கவில்லையெனப் பா.ச.க.வின் தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரனும் வானதி சீனிவாசனும் குறை கூறுகின்றனர்.
ஆனால், தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையினை விரிவாக எடுத்துக் கூறும் கீழடி அகழ்வறிக்கையினை வெளியிடவேண்டுமென மறந்தும்கூட இவர்களும் பிற தமிழ்நாட்டு பா.ச.க.வினரும் கேட்கவில்லை.
ஆரியப் பண்பாட்டுக்கு மாறாக, முன்னதாக உயர்ந்தெழுந்த தமிழரின் தொன்மைப் பண்பாட்டினைப் பற்றிப் பெருமைப்படக்கூட அவர்கள் முன்வரவில்லை.
‘தமிழகம் தலை நிமிரத் தமிழனின் பயணம்’ என்ற பரப்புரையை மேற் கொண்ட நயினார் நாகேந்திரன், தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை எக்காலத்தும் ஏற்றிப் போற்றவில்லை. அதற்கு முன்னர் ‘என் மண் என் மக்கள்’ எனத் தமிழ் நாட்டைச் சுற்றி வலம்வந்த அண்ணாமலையும் கீழடியின் சிறப்புகளையோ இரும்பின் காலம் குறித்த தொன்மையினையோ குறிப்பிடவில்லை.
கங்கைகொண்டசோழபுரத்தில் முதலாம் ராசேந்திரனின் ஆயிரமாவதாண்டு விழாவில் கலந்துகொண்ட மோடி, தமிழ் மொழியின் பழைமையை மட்டும் பேசினாரேயன்றி, தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையைச் சுட்டிக்கூடக் காட்டவில்லை.
‘காசித் தமிழ்க் கூடல்’ என்னும் பெயரில் ஸநாதனப் பரப்புரைகளை மேற்கொள்ளும் ஒன்றிய அரசு, அதன் ஒரு பகுதியாகக் கீழடி போன்ற பண்பாட்டு உயர்வினைப் பேசுபொருளாக்கவில்லை.
‘வாய்ச் சொற்கள் வழியாகத் தமிழ் மக்களை ஏய்த்துவிட முடியும்’ என்ற நம்பிக்கையிலேயே அவர்கள் மிதக்கின்றனர்.
கீழடி அகழ்வறிக்கை ஒரு குறியீடுதான்
கீழடி அகழ்வறிக்கை என்பது ஒரு குறியீடு மட்டுமே. கீழடியைத் தொடர்ந்து, அங்கும் வேறு இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகள், கி.மு. எட்டாம் நூற்றாண்டைத் தாண்டி, கி.மு. 3,400 என்ற தொன்மையைத் தொட்டு, அதற்கு அப்பாலும் கடந்து சென்றுகொண்டுள்ளன.
தமிழ்ப் பண்பாட்டுப் பகைமையைப் பா.ச.க. எந்த வடிவத்தில் எடுத்தாலும் அவற்றையெல்லாம் தகர்க்கக்கூடிய அளவில் அறிவியல் அடிப்படையிலான சான்றுகளும் தரவுகளும் இப்போது குவிந்து கிடக்கின்றன.
இரு அகழ்வறிக்கைகளையும் வெளியிடவேண்டும். இருப்பினும் ஆய்வு நேர்மை என்ற ஓர் அளவுகோல் அறிவு உலகத்தில் இருக்கின்றது. அகழ்வில் கிடைத்த பொருள்கள் பார்வைக்குக் கிடைக்கின்றன. கரிம ஆய்வுக்குட்படுத்தப்பட்ட முடிவுகளும் நம்மிடம் உள்ளன.
இவையெல்லாம் மறைபொருள்கள் அன்று. பொதுவெளியில் இருப்பவைதாம். இவற்றை அடிப்படையெனக் கூறி, வேறொரு அறிக்கையினை ஸநாதனக் கோட்பாட்டின் பின்புலத்தில் பா.ச.க. உருவாக்கித் தரட்டும். அதை எதிர்கொள்ள அகழ்வுச் சான்றுகள் தமிழ்நாட்டில் கொட்டிக்கிடக்கின்றன.
அமர்நாத் அளித்த அகழ்வறிக்கையையும் வெளி யிடட்டும். ஸநாதனச் சார்புள்ள பா.ச.க.வின் அறிக்கையும் வெளிவரட்டும்.
அறிஞர்கள் முடிவெடுக்கட்டும். தமிழர்கள் மட்டு மல்லாமல், உலகம் முழுதும் பா.ச.க.வினரின் ஸநாதனச் சார்பைப் புரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைக்கட்டும்.
‘ஜனசக்தி’ 19-07-2026
