பிற இதழிலிருந்து…

மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பிரச்சினைகள்!
தமிழகத்தில் தனிநபருக்குக் கிடைக்கக்கூடிய நீரின் அளவு பிற மாநிலங்களைவிட மிகவும் குறைவு

பெங்களூரு மாநகரின் நீர்த் தேவை அதிகரித்து வருவதை முதன்மைக் காரணமாகக் கூறி, காவிரியின் குறுக்கே மேகதாது என்கிற இடத்தில் ஏறக்குறைய 67.16 டிஎம்சி நீர்க் கொள்ளளவு கொண்ட புதிய அணை கட்டுவதற்குக் கருநாடக அரசு முன்முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. மேட்டூர் அணையின் கொள்ளளவில் ஏறக்குறைய 72 சதவீத அளவில் உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த அணை, ஒருவேளை கட்டப்பட்டால் என்னென்ன விளைவுகள் நேரும்?

 நீர்ப் பங்கீட்டு வரலாறு

காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையானது மதராஸ்-மைசூர் மாகாணங்களுக்கு இடையே 1892இல் தொடங்கி இன்றுவரை தீர்க்கப்படாத ஒன்றாகத் தொடர்ந்து வருகிறது. 125 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவந்த காவிரி நதிநீர்ப் பங்கீட்டு விவகாரத்தில், ஒருவழியாக உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை 2018 பிப்ரவரி 16இல் அறிவித்தது. தமிழ்நாட்டில் காவிரி பாயும் மாவட்டங்களில் 20 டிஎம்சி அளவுக்கு நிலத்தடி நீர் இருப்பதாகச் சொல்லி, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி 2007 பிப்ரவரி 5இல் தமிழ்நாட்டுக்கு வழங்கிய 192 டிஎம்சி நீரின் அளவிலிருந்து 14.75 டிஎம்சியைக் குறைத்து, கருநாடகம் 177.25 டிஎம்சி நீரைத் தமிழ்நாட்டுக்கு  வழங்க வேண்டும் எனத் தனது தீர்ப்பில் கூறியது. மேலும், அடுத்த 15 ஆண்டுகளுக்கு இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டது.

வேகமாக மாறிவரும் காலநிலை மாற்றத்தால் மழையின் அளவு, நீர்த் தேவை உள்ளிட்டவை மாறிவரும் சூழ்நிலையில் 15 ஆண்டுகளுக்கு மேல் முறையீடு செய்ய முடியாது என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு, அப்போதே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காவிரி நதிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் சில நல்ல கட்டளைகளையும் உச்ச நீதிமன்றம் அப்போது பிறப்பித்தது. பல மாநிலங்களின் விவசாயம், குடிநீர்த் தேவையைத் தொடர்ந்து பூர்த்திசெய்துவருவதால், காவிரி ஆறு ஒரு தேசியச் சொத்து என்றும், ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்குச் சொந்தமானது இல்லை எனவும் தீர்ப்பளித்தது.

இதன்படி, தமிழ்நாட்டின் அனுமதியின்றிக் காவிரியின் குறுக்கே இனிமேல் புதிய அணையை கருநாடக அரசு கட்ட முடியாது. நீர்ப் பங்கீட்டு முறையைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்காக, ஒன்றிய அரசு அடுத்த ஆறு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது. அதேநேரத்தில், காவிரிப் பாசனம் பெறும் தமிழ்நாடு மாவட்டங்களில் 20 டிஎம்சி நிலத்தடி நீர் இருப்பதாகக் கூறி, 14.75 டிஎம்சி நீரைக் குறைத்துக் கூறியது அறிவியல்பூர்வமானதாக இல்லை.

 அணை என்ன செய்யும்?

மேட்டூர் அணையின் கொள்ளளவில் ஏறக்குறைய முக்கால் பங்கு (72%) கொண்ட இந்த நீர்த்தேக்கத்தை அமைப்பதன் மூலம், அதிவேகமாக வளர்ந்துவரும் பெங்களூரு பெருநகரத்தின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்யவும், சுமார் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் முடியும் என்பது கருநாடக அரசின் முதன்மை வாதம். முக்கியமாக, மழைக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் உபரிநீரைச் சேமிக்கவே இந்த அணை கட்டப்படும் என்றும், இதனால் தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய நீர்ப் பகிர்வில் பாதிப்பு இருக்காது என்றும் கருநாடகம் கூறுகிறது.

பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்தல், 400 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பு போன்ற நோக்கங்களைத் தள்ளிவைத்துவிட்டு, உண்மையில் கருநாடகம் கூறுவதுபோல உபரிநீரைச் சேமிக்கவே இந்த அணை கட்டப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், காவிரி ஆற்றில் 67.16 டிஎம்சி உபரிநீர் பெரும்பாலான ஆண்டுகளில் வருவதில்லை என்பதைத் தரவுகள் கூறுகின்றன. மேட்டூர் அணை பயன்பாட்டுக்காகத் தொடங்கப்பட்ட 1934-1935 முதல் 2020-2021 வரையிலான 87 ஆண்டுகளில், வெறும் 14 ஆண்டுகளில் மட்டுமே உபரியாக 67.1 6 டிஎம்சிக்கு மேல் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. முக்கியமாக 26 ஆண்டுகளில் உபரிநீர் பூஜ்ஜியம் முதல் 10 டிஎம்சிக்குக் குறைவாகவே இருந்திருக்கிறது. 1990-1991 முதல் 2020-2021 வரையிலான சமீப காலக்கட்டத்தில் வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உபரி நீர் 67.16 டிஎம்சிக்கு மேல் வெளியேற்றப்பட்டுள்ளது. காவிரியில் அடிக்கடி நீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதால் பெரும்பாலான ஆண்டுகளில் மேட்டூர் அணையின் நிர்ணயிக்கப்பட்டுள்ள மொத்தப் பாசனப் பரப்பான 1 6 முதல் 17.5 லட்சம் ஏக்கர் அளவை எட்ட முடியாமல் போய்விடுகிறது.

இழப்பு எவ்வளவு?

ஒருவேளை மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாடு மிகப்பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும். நவீன நீர் மேலாண்மை முறைப்படி, ஒரு டிஎம்சி தண்ணீரைக் கொண்டு அதிகபட்சமாக 10,000 ஏக்கர்வரை பாசனம் செய்ய முடியும். இக்கணக்கீட்டின் படி, தமிழ்நாடு ஏறக்குறைய 6.71 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பை நேரடியாக இழக்கக்கூடும். இது மட்டும் அல்லாமல், காவிரி ஆற்றிலும் அதன் கால்வாய்களிலும் நீர் ஓடுவதால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள கிணறுகளில் நீர் சுரத்தல் (Water Recharge) நல்ல முறையில் ஏற்பட்டுக் கிணற்றுப் பாசனம் மூலம் பயிர்ச் சாகுபடி நடைபெறுகிறது. அணை கட்டப்பட்டால் கிணறுகளின் நீர் சுரத்தல் குறைந்து கிணற்றுப் பாசனத்துக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படக்கூடும்.

2018இல் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் 14.75 டிஎம்சி நீரைத் தமிழ்நாடு இழந்ததால், கடை மடையில் உள்ள ஏறக்குறைய 1.5 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு, நீர்ப் பற்றாக்குறைக் காலத்தில் பாசன வசதியை இழந்திருக்கக்கூடும். கடைமடை விவ சாயிகள் காலங்காலமாகப் போதிய அளவு நீர் கிடைக்காமல் வறுமையில் சிக்கிப் பல்வேறு இன்னல் களைச் சந்தித்துவரும் வேளையில், இந்த அணை கட்டப்பட்டால் அவர்களின் வாழ்வாதாரத்தில் மேலும் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

பிற மாநிலங்களைப் போல் அல்லாமல், தமிழ் நாட்டுக்கு முதல் ஆதாரமாக உள்ள வடகிழக்குப் பருவமழை அடிக்கடி பொய்த்துப் போவதால், நீராதாரங்கள் சுருங்கிக்கொண்டே வருகின்றன. தமிழ்நாட்டில் தனிநபருக்குக் கிடைக்கக்கூடிய நீரின் அளவு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவு. பல ஆண்டுகளாகத் தமிழ்நாடு மாவட்டங்கள் பலவற்றில் நீர்ப் பஞ்சம் மக்களுக்குப் பெரும் பிரச்சினையாக உள்ளது. புதிய நீர்த் திட்டங்களுக்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு. உலகெங்கும் மரபார்ந்த சாகுபடி உரிமை உள்ளவர்களுக்கே நதிநீர்ப் பங்கீட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டுக்கு  வழக்கமாகத் திறக்கப்பட வேண்டிய மாதாந்திர – ஆண்டிற்கான நீர் வரத்தும் இயல்பான நீரோட்டமும் முற்றிலுமாகக் கட்டுப்படுத்தப்படும். எனவே, காவிரி ஆற்றில் தமிழ்நாட்டுக்கு  அளிக்கப்படும் பங்கைவிட அதிகப்படியான உபரிநீர் இல்லை என்பதைத் தமிழ்நாடு அரசு தரவுகளுடன் கருநாடக அரசிடம் எடுத்துக்கூறி சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, அணையைக் கட்ட விடாமல் தடுக்க வேண்டும். இல்லை எனில், தமிழ்நாடு வரலாறு காணாத தண்ணீர்ப் பஞ்சத்தைச் சந்திக்க நேரிடும்.

– நாராயணமூர்த்தி, மூத்த பேராசிரியர்,

இந்திய விவசாயச் செலவுகள்-விலைகள் ஆணையத்தின் முன்னாள் முழு நேர உறுப்பினர், புதுடில்லி.

நன்றி: ‘இந்து தமிழ் திசை’ 02.07.2026 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *