சென்னை, ஜூலை 22 அமைச்சர்கள் அறைகளை வாஸ்துப்படி புனரமைக்கும் பணிகளை, பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனராம்!
தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை யில், 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு, வி.சி.க., மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
வி.சி.க.,வைச் சேர்ந்த சமூக நீதித் துறை அமைச்சர் வன்னிஅரசுக்கு, தலைமைச் செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகையின் முதல் தளத்தில் அலுவலகம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மற்ற அமைச்சர்களுக்கு, கோட்டை கட்டடத்தில் தரைத்தளம் உட்பட மூன்று தளங்களிலும் அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
முந்தைய தி.மு.க., ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் இருந்த அறைகளில் எந்த மாற்றமும் செய்யாமல் இப்போதைய அமைச்சர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் கமலி, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், வீட்டுவசதித் துறை அமைச்சர் ராஜ்குமார், சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் உட்பட பல அமைச்சர்களின் அறைகளில் இருந்த தற்காலிக மேற்கூரை, செயற்கை தடுப்புச் சுவர்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு உள்ளன. அங்கிருந்த மேஜைகள், சோபா உள்ளிட்டவைகள் முழுமையாக அகற்றப்பட்டு புனரமைக்கப்பட்டு வருகின்றன. புதிய மின் விளக்குகள், மின் விசிறி, குளிர்சாதனக் கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, தலைமைச் செயலக ஊழியர்கள் கூறியதாவது:
தி.மு.க., ஆட்சியில், ஒவ்வொரு அமைச்சர் அறையிலும் பல லட்சம் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான், பல அமைச்சர்களின் அறைகள் புதுப்பிக்கப்பட்டன.
தற்போது, அந்த அறைகளில் மீண்டும் புனரமைப்புப் பணிகள் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பல அமைச்சர்கள் சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகின்றனர். இதற்கு, அமைச்சர்களின் அறைகளில் வாஸ்து சரியில்லாமல் இருப்பதே காரணம் என, ஆஸ்தான ஜோதிடர் கூறியுள்ளார். இதையடுத்து, அமைச்சர்கள் அறைகளை முழுமையாக ஆராய்ந்து, அவற்றை வாஸ்துப்படி புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
