சாப்பாட்டிலும் மதமா?

3 Min Read

அயோத்தியில் உள்ள சரயு நதியில், தங்களது வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்கள், படகில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் விவாதங்களையும் விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது.

அயோத்தியின் குப்தார் காட் பகுதியில் லவ்குஷ் நிஷாத், ஜிதேந்திர நிஷாத், ராஜ்குமார் நிஷாத் உள்ளிட்ட மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது அவர்கள் தங்கள் நண்பர்களுடன் மேற்கொண்ட   காணொலி அலைபேசி உரையாடல் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. அவர்கள் ஆட்டிறைச்சி சாப்பிட்டதாகவும், மது அருந்தியதாகவும் கூறி, “பக்தர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக” காவல்துறையினர் அந்த மூவரையும் கைது செய்துள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை உழைக்கும் வர்க்கத்தின் மீதான அராஜகம் என்ற ரீதியில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

எந்தவொரு வேலைக்குச் செல்பவர்களும் தங்களது உணவு இடைவேளையில் பணிபுரியும் இடத்திற்கு அருகிலேயே சாப்பிடுவதுதான் வழக்கம். நடு ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள், மதிய உணவிற்காகப் படகை கரைக்குக் கொண்டு வந்து, சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஆற்றுக்குள் செல்வது என்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது.

உழைக்கும் மக்கள் தங்களுக்குக் கிடைக்கும் உணவை அல்லது தங்களுக்குப் பிடித்த உணவை உண்பதற்கான உரிமை கொண்டவர்கள். அது எந்தச் சாப்பாடாக இருந்தால் என்ன? பசிக்குச் சாப்பிடுவது எப்படிப் பெரும் குற்றமாகும்?

கைது செய்யப்பட்ட மீனவர்கள் ‘நிஷாத்’ (படகோட்டி/மீனவர்) சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தலைமுறை தலைமுறையாக ஆற்றில் மீன்பிடித்து, அதை விற்று, தாங்களும் உண்டு வாழ்பவர்கள். மீன் பிடிப்பதே மாமிச உணவுக்காகத்தான் எனும் போது, அதே ஆற்றில் வைத்து ஆட்டிறைச்சி சாப்பிட்டது மட்டும் எப்படி மகா ‘பாவமாக’ அல்லது மத உணர்வை புண்படுத்தும் செயலாக மாற முடியும்?

இந்த தர்க்கத்தின்படி பார்த்தால், இனி மீனவர்கள் ஆற்றில் மீன்பிடிக்கச் செல்லும்போது மரக்கறி உணவை மட்டும்தான் கொண்டு செல்ல வேண்டும் என்று சட்டம் இயற்றப்படுமோ!

ஸநாதன நம்பிக்கைகளின்படி, கடலில் லட்சுமி தேவி வாசம் செய்வதாகக் கூறுகிறார்கள். மீன்களையும் கடலையும் ‘புனித’மாகப் பார்க்கும் வழக்கம் பரவலாக உண்டு.அப்படியென்றால், நாளை இந்தியக் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் லட்சக்கணக்கான மீனவர்கள் தங்களது படகுகளில் இறைச்சி சாப்பிட்டால், இந்தியக் கடற்படை அவர்களைக் கைது செய்யுமா?

தலைமுறை, தலைமுறையாக அந்த நதியையே நம்பி வாழும் பூர்வகுடி மீனவர்களின் வயிற்றுப் பசியையும், அவர்களின் வாழ்வாதார உரிமையையும் ‘மத உணர்வு’ என்ற பெயரால் நசுக்குவது எந்த வகையில் நியாயம்? வழிபாட்டுத் தலங்களின் ‘புனித’த்தை மதிக்க வேண்டும் என்றுகூறி சாப்பாட்டில் கை வைக்க வேண்டுமா?

சரயு நதியின்மீது ஆட்டுக்கறி சாப்பிட்டது குற்றம் என்றால், கங்கையில் குப்பையைக் கொட்டுபவர்களும், பிணங்களை மதிக்க விடுபவர்களும், கழிவுகளைச் சேர்ப்பவர்களும் யார்? காசியில், கங்கைக் கரையில் சுற்றி அலையும் சாமியார்கள், நர மாமிசம் தின்னும் அகோரிகள் எல்லாம் கங்கைக்குப் ‘புனிதம்’ சேர்க்கிறார்களா? ஆட்டு மாமிசம் தின்றால் குற்றம் – நர மாமிசம் தின்றால் புண்ணியமா?

உழைக்கும் மக்களின் அத்தியாவசியத் தேவையான ‘உணவு’, ‘பசி’ என்பதைத் தனிப்பட்ட ஒழுக்கக் கண்ணோட்டத்துடனும், மதக் கோட்பாடுகளுடனும் பிணைத்துக் கைது நடவடிக்கைக்கு உள்ளாக்குவது அராஜகத்தின் உச்சம்!

மீன் என்பது மகா விஷ்ணுவின் மச்சவதாரம் என்று சொல்லி மீன் பிடிப்பது – சாப்பிடுவதுகூட    குற்றம் என்று கூறி தனிச் சட்டம் கொண்டு வந்து சிறைப்படுத்தினாலும் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி ஆட்சியில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அப்படிப் பார்க்கப் போனால் வங்காளத்தில் உள்ள பார்ப்பனர்களுக்கு மீன் முக்கிய உணவு என்பது நினைவில் இருக்கட்டும்!

மதம் யானைக்குப் பிடித்தாலும் ஆபத்து! மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்தே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *