விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. உறுப்பினர் கைது!
‘‘சட்டப்படியும், மனசாட்சிப்படியும் செயல்படாவிட்டால், அதற்கான பின்விளைவுகளை சந்திக்கவேண்டி இருக்கும்!’’
சென்னை, ஜூலை 21– விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் அவர்களை த.வெ.க. அரசின் காவல்துறை நேற்று (20.7.2026) காலை கைது செய்துள்ளதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சட்டப்படியும், மனசாட்சிப்படியும் செயல்படாவிட்டால், அதற்கான பின்விளைவுகள் இருக்கும் என்று குறிப்பிட்டு, ‘தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? ‘சாத்தானின்’ ஆட்சியா?’ என்று கடுமையாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதில் சாடியுள்ளார்.
கோவில்பட்டி கிருஷ்ணன்கோவில் திடலில் நேற்று முன்தினம் (19.7.2026) இரவு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் விளாத்திக் குளம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் கலந்துகொண்டு பேசினார். அப்போது முதலமைச்சர் பற்றியும் த.வெ.க. ஆட்சி பற்றியும் விமர்சித்துப் பேசினார். அதை யடுத்து த.வெ.க.வினர் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று (20.7.2026) காலை அவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அது வருமாறு:–
ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சி யில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்ட னத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறு களையும், அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பி னர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டை யாடி வருகிறது ‘திசை திருப்பும் மாடல்’ த.வெ.க. அரசு.
நீதிமன்றத்தால் குட்டுப்பட்ட த.வெ.க. அரசு!
“அவதூறு வழக்குகளில் கூட எதற்கும் தொடர்பில்லாத குற்றப்பிரிவு களைச் சேர்க்கிறீர்கள்?” என நீதி மன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்குரைஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும், மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, ‘சாத்தானின்’ ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின்கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
மனசாட்சிப்படி செயல்படுங்கள்!
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும்மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences. (அதற்கான பின் விளைவுகள் இருக்கும்)
இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டுள்ளார்.
