நடைபாதை மற்றும் சாலையில் கடைகள் அகற்றம் நடைபாதைக் கோயில்களும் அடங்குமா?

4 Min Read

சென்னை, ஜூலை 20- சென்னையில் பல இடங்களில் நடை பாதையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதும், கடைகளை போட்டு வியாபாரம் நடத்துவதும் அதிகரித்து வருகிறது. இது குறித்து மாநகராட்சிக்கு, பொதுமக்கள் சார்பில் புகார்களும் அளிக்கப்பட்டு வந்தன.

மேலும் நீதிமன்றம் உத்தரவின்படி மருத்துவமனை, பள்ளிகள், ரயில் நிலையம் அருகே 100-150 மீட்டர் தொலைவுக்குள் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றப்பட வேண்டும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமிக்கும் கடைகள், வாகனங்களை தொடர்ந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் எழும்பூர் மகப்பேறு மருத்துவனைக்கு முன்புறம் உள்ள பாந்தியன் சாலையில், நடைபாதையில் இருந்த கடைகள் அகற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில்,

பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-61, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பகுதியில் உள்ள பாந்தியன் சாலையில், நடைபாதை கடைகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்ட பகுதியில் (Non Vending Zone) இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் மாநகராட்சி மற்றும் காவல்துறை அலுவலர்களால் 18.07.2026 அன்று அகற்றப்பட்டன. இதில், 2 பங்க் கடைகள் (bunk shops), ஒரு கரும்புச் சாறு கடை மற்றும் மூன்று தள்ளுவண்டிகள் அகற்றப்பட்டன.

மேலும், இப்பகுதியில் உள்ள நான்கு கடைகள் தற்போது அறிவிப்பு காலக்கெடுவில் (Notice Period) உள்ளன. அந்தக் கடைகளை விற்பனை மண்டலப் பகுதியில் (Vending Zone) ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதியில், அய்ந்து நாட்களுக்குள் தாங்களாகவே அங்கிருந்து இடமாற்றம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அய்ந்து நாட்களுக்குள் அவை அகற்றப்படாவிட்டால், நான்கு கடைகளும் அகற்றிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்ற நடவடிக்கைளில் நடைபாதைக் கோயில்களும் அடங்குமா? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 

கார்பனை குறைக்கும் கிடை மாடுகள்

மதுரையில் அதிகாரிகள் ஆய்வு

மதுரை, ஜூலை 20- நபார்டு வங்கியின் மதுரை மாபிப் நிறுவனம் சார்பில் இந்திய உணவு மற்றும் வேளாண் நிறுவன பிரதிநிதிகள் கிருஷ்ணன், விஷால் இருவரும் மதுரை நிலையூரில் மேய்ச்சல் மாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

மேய்ச்சல் மாடுகளால் சுற்றுச்சூழலில் கார்பன் சதவீதம் குறைவது குறித்து ஆய்வு மேற்கொண்டதாக தொழுவம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனர் கபிலன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

தொழுவம் நிறுவனத்தின் துணை என்ற செயலி மூலம் மேய்ச்சல் மாடு வளர்ப்பவர்களை ஒருங்கிணைத்து விவசாயிகளின் வயலில் கிடை அமைக்க உதவுகிறோம். மேலும் கிராஸ் கார்ட்ஸ் செயற்கைகோள் மூலம் மேய்ச்சல் நிலங்களில் என்னென்ன வகையான புற்கள் என்பது வரை அனைத்தும் துல்லியமாக கண்காணிக்கப்படும். புற்கள் உற்பத்திக்கு காற்றிலுள்ள கார்பனை பயன்படுத்துவதால் கார்பன் சதவீதம் குறைகிறது.

ஒவ்வொரு மாடும் நாள்தோறும் சராசரியாக 5 கிலோ புல்லை சாப்பிடும். இவை ஒன்று முதல் இரண்டு மாதங்கள் புற்கள் வளர்வதற்கு வளிமண்டலத்தில் இருந்து 15 கிலோ அளவு கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொள்கிறது.

மதுரை மாவட்டத்தில் 40ஆயிரம் எண்ணிக்கையில் புலிக்குளம் வகை கிடைமாடுகள் வளர்கின்றன. மரங்கள் வளர்ப்பதை விட புற்கள் வளர்ந்து மேய்ச்சலுக்கு பயன்படும் போது வளிமண்டல கார்பன் அளவை அதிகமாக குறைக்க முடியும்.

பூமியில் பல்லுயிர்கள் பெருக்கம் சரியாக இருக்க வேண்டுமெனில் மேய்ச்சல் நிலங்களை பராமரிக்கவேண்டும் என்றார். மேய்ச்சல் மாடுகளை வளர்க்கும் முருகனுடன் அதிகாரிகள் கலந்துரையாடினர்.

 

கீழடி அகழாய்வு பணிகள் தீவிரப்படுத்தப்படும்

பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை குறித்து விரைவில் அறிவிப்பு – அமைச்சர் தகவல்!

திருப்புவனம், ஜூலை 20- சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வு தளத்தையும், அங்குள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்தையும் தமிழ்நாடு கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று (19.7.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

உலக நாகரிகத்தின் தாய்மடி கீழடி!

“முந்தைய அரசுகள் செய்த நல்ல பணிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் நிறுத்தாது. கீழடி அகழாய்வுப் பணிகளை அரசு மேலும் தீவிரப்படுத்தும். கீழடி என்பது தமிழர்களின் நாகரிகத்திற்கு மட்டுமல்ல, உலக நாகரிகத்திற்கே ஒரு தாய்மடி போன்றது” என்று குறிப்பிட்டார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை

அமைச்சரிடம் அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடைகள் மாற்றப்படுமா? என்ற செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த அமைச்சர், “பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் புதிய சீருடை வடிவமைப்பு குறித்தான பரிந்துரைகள் தயார் செய்யப்பட்டு, முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று தெரிவித்தார்.

பத்திரிகையாளர் நல வாரியம்
டிஜிட்டல் மயமாகிறது

மேலும், பத்திரிகையாளர்களுக்கான நல வாரிய சேவைகள் அனைத்தும் முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படும் என்றும், இதன் மூலம் அவர்களுக்குரிய நலத்திட்ட உதவிகள் மற்றும் நன்மைகள் எளிதாகவும் விரைவாகவும் சென்றடைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *