சிங்கப்பெண் அதிரடிப் படைக்கு புதிதாக வீராங்கனைகள் தேர்வு! விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

2 Min Read

சென்னை. ஜூலை 20- சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு புதிய வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது தொடர்பான அறிவிப்புவிரைவில் வெளியாக உள்ளது.

சிங்கப்பெண் அதிரடிப்படை

தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தை களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், அவசர காலங்களில் துரிதமாக களமிறங்கி நடவடிக்கை எடுக்கவும், பெண்கள் மட்டுமே இடம்பெறும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப் படை கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இந்த படை தற்போது சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் தற்காலிகமாக செயல்படுகிறது.

இந்நிலையில், காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி,சென்னை அசோக் நகரில் உள்ள காவல் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையின் நிரந்தர தலைமையகத்தை அமைக்க காவல்துறை தலைவர் பவானீஸ்வரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதையொட்டி, அலுவலக கட்ட மைப்பு, கட்டுப்பாட்டு அறை, தகவல் தொடர்பு மய்யம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

அசோக் நகரில் உள்ள காவல் பயிற்சிக் கல்லூரி வளாகம் ஏற்கெனவே தமிழ்நாடு காவல் துறையின் முக்கிய புலனாய்வு மற்றும் சிறப்புப் பிரிவுகளின் மய்யமாக விளங்கி வருகிறது. மாநில சைபர் க்ரைம், பொருளாதார குற்றப்பிரிவு, சிலை கடத்தல் தடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு என பல்வேறு முக்கிய பிரிவுகள் இங்கு இயங்கி வருகின்றன.

அதே வளாகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை தலைமையகமும் அமைக்கப்படுவதால், ஒருங்கிணைந்த காவல் நிர்வாகம், விரைவான தகவல் பரிமாற்றம் மற்றும் அவசர நடவடிக்கைகளை மேலும் திறம்பட மேற்கொள்ள முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

சிங்கப்பெண் அதிரடிப் படையை தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்தும் வகையில், அதிநவீன ட்ரோன்கள், கண்காணிப்பு உபகரணங்கள், நவீன தகவல் தொடர்பு சாதனங்களை வாங்கும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. கூட்ட நெரிசல் பகுதிகள், முக்கிய விழாக்கள், பெண்கள் பாதுகாப்பு பணிகள் மற்றும் அவசர மீட்பு நடவடிக்கைகளில் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

துடிப்புமிக்க 2,500 பெண் காவலர்களை இந்த படைக்கு புதிதாக தேர்வு செய்யும் வகையில், விதிமுறைகளை இறுதி செய்யும் பணியும் நடந்து வருகிறது. வயது வரம்பு, உடல் தகுதி, கல்வித் தகுதி, தொழில்நுட்ப அறிவு, மன உறுதி, சிறப்பு பயிற்சிக்கான திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் எழுத்து மற்றும் உடல் தகுதிதேர்வு நடைமுறை வகுக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

குழந்தை திருமணம் தடுப்பு: பெண்களின் பாதுகாப்பை வலுப் படுத்துவது மட்டுமின்றி, குழந்தை திருமணத்தையும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினர் தடுத்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளன. இதுதவிர, பாதியில் படிப்பை நிறுத்திய குழந்தைகளின் பெற்றோரிடம் பேசி 75-க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பாலியல் அத்துமீறல் தொடர்பாக விழிப்புணர்வு மேற்கொள்வதோடு, புகார்களைப் பெற்று சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் பணிகளையும் சிங்கப்பெண் அதிரடிப் படையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *