இன்று ‘‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்!’’

8 Min Read

‘‘என்னுடைய இயக்கம், இன்றைக்கு நான் தொடங்கும் போது அது ஒரு சிறிய அளவில்,
ஒரு சிறு கூட்டத்தாரோடு போராடுகின்ற இயக்கம் மாதிரி உங்களுக்குத் தோன்றினாலும்,
வருங்காலத்தில் உலகளாவிய இயக்கமாக,
அதனுடைய தேவையும், பரப்பும் இருக்கும்!’’ – தந்தை பெரியார்
‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–4)
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை

சென்னை, ஜூலை 19  ‘‘என்னுடைய இயக்கம், இன்றைக்கு நான் தொடங்கும் போது அது ஒரு சிறிய அளவில், ஒரு சிறு கூட்டத்தாரோடு போராடுகின்ற இயக்கம் மாதிரி உங்களுக்குத் தோன்றினாலும், அது வருங்காலத்தில் உலகளாவிய இயக்கமாக, அதனுடைய தேவையும், பரப்பும் இருக்கும்’’ என்று தொலைநோக்கோடு தந்தை பெரியார் சொன்னார். அதனால்தான், ‘‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்!’ பெரியாருடைய சிந்தனை என்பது இனி வரக்கூடிய தலைமுறைகளையும் உள்ளடக்கிய சிந்தனை!  என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents
‘‘என்னுடைய இயக்கம், இன்றைக்கு நான் தொடங்கும் போது அது ஒரு சிறிய அளவில், ஒரு சிறு கூட்டத்தாரோடு போராடுகின்ற இயக்கம் மாதிரி உங்களுக்குத் தோன்றினாலும், வருங்காலத்தில் உலகளாவிய இயக்கமாக, அதனுடைய தேவையும், பரப்பும் இருக்கும்!’’ – தந்தை பெரியார் ‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–4) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–4)  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை200 ஆண்டுகள் ஆண்ட வெள்ளைக்காரன் நம்முடைய மொழியை உயர்த்தினான் அவன்!திராவிட இயக்கம் இனவெறி இயக்கம் அல்ல; ஒரு பண்பாட்டு பாதுகாப்பு இயக்கம்!தமிழ் மொழியை அழிப்பதற்கு முயற்சி செய்தது மட்டுமல்லாமல், மிலேச்ச பாஷை என்றனர்!பண்பாட்டு படையெடுப்பு என்பதினால்தான் எதிர்க்கிறோம்!உலகத்தில் அதிகமாக திராவிட இயக்க புத்தகங்கள்தான் வியாபாரம் ஆகின்றன!எழுத்தாளர்  டி.ஜே.எஸ். ஜார்ஜ்திராவிட இயக்கம் இனவெறி இயக்கம் அல்ல; ஒரு பண்பாட்டு பாதுகாப்பு இயக்கம்!இனத்தை குறிப்பதையும் தாண்டி, மானிடத்துக்கே விரிவு செய்தார்மனுதர்மத்தையும், கீதையையும் பரப்பிய அளவிற்கு, ஆரியர்கள் ஏன் திருக்குறளைப் பரப்பவில்லை?மனித குலம் அத்தனைக்கும் பொதுவானது!மனுதர்மத்தில் கூட  திராவிடம்!தமிழ்நாடு போன்று மற்றவர்கள் புரிந்தவர்கள் கிடையாதுபெரியாருடைய சிந்தனை என்பது இனி வரக்கூடிய தலைமுறைகளையும் உள்ளடக்கிய சிந்தனை!‘‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்!’’

‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–4)  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை

்கடந்த 6.7.2026 அன்று மாலை 6.30 மணியளவில், சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார்  அரங்கத்தில், பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல், திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில்,  ‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–4) என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

அம்பேத்கருக்கே, அந்த மிகப்பெரிய ஒரு குழப்பம் இருந்தது சமஸ்கிருதத்தை அவர் படித்ததினால். ஆனால், அந்த இடத்திலேயும் பெரியார் சரியாக இருந்தார். காரணம் என்னவென்றால், சமஸ்கிருதம் மொழியினால் அந்த பேதம் கூடாது என்று சொல்கிறோம் அல்லவா! சமஸ்கிருதம் பேதத்தையே தன்னுடைய மொழியின் அம்சமாகக் கொண்டது.

அய்யாவின் சிந்தனையுடைய கூர்மையை நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள். இதை வெறும் வாக்கியமாக நீங்கள் நினைத்தால், உங்களுக்குப் புரியாது. இன்னும் கொஞ்சம் அதிகமான அளவுக்கு உள்ளே போகவேண்டும். அப்படி உள்ள போகும்போது, அந்தத் தத்துவத்தில் ஓர் உதாரணம் சொல்கிறார்.

200 ஆண்டுகள் ஆண்ட வெள்ளைக்காரன் நம்முடைய மொழியை உயர்த்தினான் அவன்!

நான், சமஸ்கிருதத்தை மொழி என்பதற்காக மட்டும் எதிர்க்கவில்லை. அந்த மொழி, பேதத்தை உண்டாக்குகிற மொழி. வெள்ளைக்காரன் இங்கே வந்ததிலிருந்து எல்லாரும் சமஸ்கிருதத்தை விட வெள்ளைக்காரன் மொழியான ஆங்கில மொழியைத் தான் அடிக்கடி நாம் பயன்படுத்துகிறோம். அது சரியா, தவறா? அதனால் ஏற்பட்ட தாக்கம் என்ன என்பது குறித்து தனியாக விவாதம் செய்யலாம், அது வேறு. ஆனால், அந்தத் தாக்கத்தை உண்டாக்கும் போது, 200 ஆண்டுகள் ஆண்ட வெள்ளைக்காரன் அன்றைக்கு ஆட்சியைப் பிடித்திருந்தான். அதனால்தான் நமக்கு ஆங்கிலம் வந்தது என்று சொல்லக்கூடிய அளவுக்கு வந்தாலும், நம்முடைய மொழியை அவன் உயர்த்தினான்.

திராவிட இயக்கம் இனவெறி இயக்கம் அல்ல;
ஒரு பண்பாட்டு பாதுகாப்பு இயக்கம்!

 

தமிழ் மொழியை அழிப்பதற்கு முயற்சி செய்தது மட்டுமல்லாமல், மிலேச்ச பாஷை என்றனர்!

ஆங்கிலம் வந்ததினால்தான், நம்முடைய மொழியைப்பற்றிய பெருமை வரிவடிவில் கிடைத்தது. வெளிநாட்டில் இருந்து வந்த ஜி.யு.போப் போன்றவர்கள்; அதே மாதிரி திராவிடச் சான்று கொண்டவர்கள்; அதேபோல மிக முக்கியமாக இருக்கக்கூடிய திரா விட நாகரிகம்பற்றிச் சொன்ன சர்ஜான் மார்ஷல் போன்றவர்களுடைய பங்களிப்பில் அதிகம். இது ஒரு பக்கம்.  பெஸ்கி முனிவர், யாராக இருந்தாலும், அவர்களும் வெளிநாட்டுக்காரர்கள். ஆனால், அவர்கள் நம்முடைய மொழியை இழிவுபடுத்தவில்லை. ஆனால், வடநாட்டுக்காரன் நம்முடைய மொழியை அழிப்பதற்கு முயற்சி செய்தது மட்டுமல்லாமல், மிலேச்ச பாஷை என்றார்கள். தமிழ் மொழியை நீஷ பாஷை; சமஸ்கிருதம் தேவ பாஷை என்றனர். அங்கேயே பிரிவினையை உண்டாக்கிவிட்டான். மொழியில் பிரிவினையை உண்டாக்கி, பிராமண – சூத்திரன் மாதிரிதான் – தேவ பாஷை – நீஷ பாைஷ.

கலைஞர் அரும்பாடுபட்டு, நம் தமிழ் மொழியை செம்மொழியாக ஆக்கினார். அது பெரிய சாதனையாகும். ‘தினமலர்’ போன்ற பார்ப்பனப் பத்திரிகைகள் என்ன எழுதியது? ‘‘தமிழ் செம்மொழியானால், ஒரு பிளேட் பிரியாணி கிடைக்குமா?’’ என்று எழுதியது. சரி, அடுத்த ஆண்டே வடமொழியான சமஸ்கிருதத்தையும் செம்மொழி ஆக்குங்கள் என்று கேட்டீர்களே, அதனால் ஒரு கஃப் தயிர் சாதம் கிடைக்குமா?  என்று  நாம்  யாராவது கேட்டோமா?

பண்பாட்டு படையெடுப்பு என்பதினால்தான் எதிர்க்கிறோம்!

எதற்காக இதைச் சொல்கிறோம் என்றால், மிக முக்கியமாக சிந்திக்க வேண்டிய விஷயம், அய்யா சொன்னார், மொழி என்பதற்காக நாம் ஹிந்தி மொழியையோ, சமஸ்கிருத மொழியையோ எதிர்க்கவில்லை. பண்பாட்டு படையெடுப்பு என்பதி னால்தான் எதிர்க்கிறோம். அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து மீள வேண்டும் – மீட்பு இயக்கம் – இதுதான் திராவிடம். அதுதான் திராவிடத்தினுடைய சிறப்பு.

உலகத்தில் அதிகமாக திராவிட இயக்க புத்தகங்கள்தான் வியாபாரம் ஆகின்றன!

ஆகவே, அதனுடைய ஆழம் எங்கே இருக்கிறது பாருங்கள். இது ஓர் இனவாத இயக்கமா என்றால், இனவாத இயக்கம் அல்ல. ஓர் இனவாத இயக்கம் என்று சொல்லும்போது, Ethnic Group அதை சாதாரணமாக அது மாதிரி சொல்ல முடியாது. அதற்கு ஓர் ஆதாரத்தை உங்களுக்குச் சொல்ல வேண்டும். ‘இந்து’ பத்திரிகை கலைஞருடைய நூற்றாண்டை ஒட்டி ஒரு புத்தகம் வெளியிட்டது. உங்களுக்கெல்லாம் தெரியும் பல பதிப்புகள் வெளிவந்தன. நல்ல மார்க்கெட்டிங் பொருள் எதுவென்றால், உலகத்தில் அதிகமாக திராவிட இயக்க புத்தகங்கள்தான் வியாபாரம் ஆகின்றன. ‘அமேசானில்’கூட  பெரிய அளவுக்கு விற்பனையாகின்றன. அதிலேயும் லாபம் அடைவது அவர்கள்தான்.

எழுத்தாளர்  டி.ஜே.எஸ். ஜார்ஜ்

எழுத்தாளர்  டி.ஜே.எஸ். ஜார்ஜ் என்பவரிடம்  ஒரு கட்டுரை ஆங்கிலத்தில் கேட்டு, அதை மொழி பெயர்த்து தமிழில் போட்டிருக்கிறார்கள், அந்தப் புத்தகத்தில். அதில், அற்புதமான ஒரு செய்தியை அவர் அந்தக் கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார். இத்தனைக்கும் நமக்கு அப்பாற்பட்டவர் அவர்.  நான் ஏன் அவரைச் சுட்டிக் காட்டுகிறேன் என்றால், அவர் கேரளத்துக்காரர் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நன்கு அறிமுகமானவர். மூத்த பத்திரிகையாளர், நல்ல கருத்தாளர். அப்படிப்பட்டவர், அவர் சொல்லும்போது, அந்தக் கருத்தை எடுத்து சுட்டிக் காட்டுகிறார்.

என்ன சொல்கிறார்? அங்கே அய்யாவை முதலில் குறிப்பிடுறார்.  திராவிட இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் – திராவிடம் என்று கொண்டு வந்தாலும், அதை ஓர் இனவாத இயக்கமாக ஆக்காமல், ஒரு  Ethnic அமைப்பு மாதிரி, ஓர் இனவாத, இனவெறி இயக்கமாக ஆக்காமல். இனவெறி ஹிட்லர் சொன்னது, இனவெறி. திராவிட இயக்கத்தை இனவெறி இயக்கம் என்று சொல்ல முடியாது. இனவெறி இயக்கமாக இந்த இயக்கத்தை, நீங்கள் கருத முடியாத அளவுக்கு என்ன செய்தார்?

திராவிட இயக்கம் இனவெறி இயக்கம் அல்ல; ஒரு பண்பாட்டு பாதுகாப்பு இயக்கம்!

திராவிடம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்; ஆரியம் கூடாது என்கிறார்கள். அப்படியென்றால், இனவெறி இயக்கம் இல்லையா? மேலெழுந்த வாரியாகப் பார்த்தாலே தெரியவில்லையா? என்று கேட்டபோதுதான், அவர் உணர்ந்தார்; திராவிட இயக்கம் இனவெறி இயக்கம் அல்ல; ஒரு பண்பாட்டு பாதுகாப்பு இயக்கம் (Cultural Protection).

இனத்தை குறிப்பதையும் தாண்டி,
மானிடத்துக்கே விரிவு செய்தார்

எனவே, இனவெறி வேறு – அவரவருடைய பண்பாட்டு நாகரிகத்தைப் பாதுகாப்பது என்பது வேறு. அதனால்தான், அய்யா அவர்கள், நீதிக்கட்சி – சுயமரியாதை இயக்கம் இந்த இரண்டும் தனித்தனியாக இருந்தபோது, ‘பார்ப்பனர் அல்லாதார்’ என்ற பெயரை, எதிர்மறைப் பெயராக இருந்ததை ‘திராவிட இயக்கம்’ என்று ஆக்கினார் என்றால், திராவிட நாகரிகம் – திராவிடர்கள் இந்தியா முழுவதும் இருந்திருக்கிறார்கள். திராவிடம் என்பது  இடத்தைக் குறிப்பதை விட, ஓர்  இனத்தை குறிப்பதையும் தாண்டி, மானுடத்துக்கே விரிவு செய்தார்.

மனுதர்மத்தையும், கீதையையும் பரப்பிய அளவிற்கு, ஆரியர்கள் ஏன் திருக்குறளைப் பரப்பவில்லை?

அந்த மானுடம் என்னவென்றால், எல்லாருக்கும் எல்லாம் என்பது திராவிடம். அனைவருக்கும் அனைத்தும் என்பதே திராவிடம். சமத்துவம், சம உரிமை, சமவாய்ப்பு என்பதே திராவிடம். ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்று சொல்வதே திராவிடம். அதனால்தான் இன்றைக்கு மனுதர்மத்தையும், கீதையையும் பரப்பிய அளவிற்கு, ஆரியர்கள் ஏன் திருக்குறளைப் பரப்பவில்லை? குறளுக்குச் செல்வாக்கு வந்தவுடனே, காவி வண்ணத்தை எடுத்துக் கொண்டு வருகிறார்கள். பெயிண்ட் அடிப்பதற்கு. இதுதான் அவர்களுடைய நிலைமையை தவிர வேற கிடையாது.

மனித குலம் அத்தனைக்கும் பொதுவானது!

ஆகவேதான், அய்யாவினுடைய அந்த நுண்ணறி வைப் பாருங்கள். திராவிடம் என்று பெயர் வைத்தார். திராவிடர் கழகம் என்று பெயர் வைத்தார். இந்தத் திராவிடம் என்பது இருக்கிறதே, ஒரு பண்பாட்டு பாதுகாப்பு. எனவே அது வெறும் இனவெறி இயக்கம் அல்ல, மனித குலம் அத்தனைக்கும் பொதுவானது.

அம்பேத்கர் அவர்கள் எழுதிய புத்தகத்திலே சொன்னார், வடக்கே இருக்கக்கூடிய ‘நாகர்கள்’ என்பவர்கள் எல்லாம் தமிழ் மொழி படித்தவர்கள். பேசுவது திராவிட மொழிகள் என்று சொன்னார்.

ஆகவே, சில பேர் மொழியை வைத்து திராவிடம் என்று சொல்லுகிறார்கள். சிலர்  மற்ற அளவை வைத்துச் சொல்லுகிறார்கள். இடத்தை வைத்துச் சொல்லுகிறார்கள்.

மனுதர்மத்தில் கூட  திராவிடம்!

மனுதர்மத்தில் கூட  திராவிடம் என்று குறிக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஆளை வைத்தே சொல்கிறார்கள்.  அதே மாதிரி ஆரியர்கள் அல்லாதவர்களைப்பற்றிச் சொல்லும்போது அதைக் குறிக்கிறார்கள். பாகவதத்தில் இருக்கிறது. இதிகாச புராணங்களில் இருக்கிறது. வரலாற்றில் இருக்கிறது. இன்றைக்கும் திராவிடத்தை, யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் எடுத்துவிட முடியாது. ஆனால், எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். மூன்றில், இரண்டு பங்கு பெரும்பான்மை என்று சொல்லுவதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு போன்று மற்றவர்கள்
புரிந்தவர்கள் கிடையாது

‘வந்தே மாதரம்’ பாடலை வைத்துக்கொண்டு ஒருவர் வந்து நிற்கிறார். எதிர்ப்பில்லை என்றால் அதை நிலை நிறுத்துவதற்குத் தயாராக இருக்கிறார்கள். தமிழ்நாடு போன்று மற்றவர்கள் புரிந்தவர்கள் கிடையாது.

சிறுபான்மைச் சமுதாய மக்களான இஸ்லாமியர்களைக் கொச்சைப்படுத்துவதற்காக எழுதப்பட்ட  நூலில் இருக்கின்ற ஒரு பகுதிதான் வந்தே மாதரம் பாடல்.

இதைச் சொல்வதற்கு நம்மைத் தவிர வேறு ஆள் கிடையாது. இதையும் கேட்டுவிட்டு, அங்கே போகிறவர்கள் இருக்கிறார்கள். எங்கே போகக்கூடாதோ, அங்கே போய்ச் சேருவதற்குத் தயாராக இருக்கிறார்கள். எங்கே இருந்து போராடினோமோ, அதைப்பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.  ஆனாலும், அதனுடைய சிந்தனை என்பது மிக முக்கியம்.

பெரியாருடைய சிந்தனை என்பது இனி வரக்கூடிய தலைமுறைகளையும் உள்ளடக்கிய சிந்தனை!

ஆகவே, பெரியாருடைய சிந்தனை என்பது – அது நமக்காக மட்டுமல்ல; இன்றைய தலைமுறைக்காக மட்டுமல்ல. இனி வரக்கூடிய தலைமுறைகளையும் உள்ளடக்கிய சிந்தனை – எதிர்காலத்தையும்.

இனிவரும் உலகம், இனி அமைய வேண்டிய மானுடம், எப்படி சமத்துவத்துக்கு உரியதாக இருக்கும் என்று வகுத்துச் சொன்னார்.

‘‘பெரியார் உலக மயம்;
உலகம் பெரியார் மயம்!’’

அதனாலதான் அய்யா சொன்னார், ‘‘என்னுடைய இயக்கம், இன்றைக்கு நான் தொடங்கும் போது அது ஒரு சிறிய அளவில், ஒரு சிறு கூட்டத்தாரோடு போராடுகின்ற இயக்கம் மாதிரி உங்களுக்குத் தோன்றினாலும், அது வருங்காலத்தில் உலகளாவிய இயக்கமாக, அதனுடைய தேவையும், பரப்பும் இருக்கும்’’ என்று தொலைநோக்கோடு சொன்னார். அதனால்தான், ‘‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்!’’

நன்றி வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *