சென்னை, ஜூலை 19- மாணவர்களின் மன உறுதியை காக்க ‘நட்புடன் உங்களோடு’ திட்டத்தில் மனநல ஆலோசனை பெறுவதற்காக தமிழ்நாடு அரசு கட்டணமில்லா தொலைபேசி எண் 14416, 104 அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது நேற்று முன்தினம் (17.7.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2026-2027ஆம் கல்வியாண்டின் நீட்தேர்வு முடிவுகள் 16.7.2026 அன்று வெளியாகி உள்ளது. மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனநல ஆலோசனைகள் பெறுவதற்கு தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இச்சேவை மனநல மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம்
ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு
சென்னை, ஜூலை 19- சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள டெண்டரில், மாநிலம் முழுவதும் பெண்களின் வேலைவாய்ப்பு நிலை மற்றும் அவர்கள் வேலைக்குச் செல்வதில் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார, பாதுகாப்பு உள்ளிட்ட சவால்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆய்வின் மூலம், பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு தடையாக உள்ள பாதுகாப்பு குறைபாடுகள், குழந்தை பராமரிப்பு வசதியின்மை, திறன் பற்றாக்குறை, போக்குவரத்து சிக்கல்கள் மற்றும் சமூக காரணிகள் ஆகியவை கண்டறியப்பட்டு, அவற்றை களைய தேவையான பரிந்துரைகள் வழங்கப்பட உள்ளன.
அதேபோல், மாவட்ட வாரியாக எந்தெந்த துறைகளில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதையும் ஆலோசனை குழு பரிந்துரைக்கப்பட உள்ளது. இதன் அடிப்படையில் பெண்களுக்கான திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் ஊக்குவிப்பு, பாதுகாப்பான பணிச்சூழல், குழந்தை பராமரிப்பு வசதிகள் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய விரிவான செயல்திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. மாநில மற்றும் மாவட்ட அளவில் செயல்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த பெண்களுக்கான தரமான வேலைவாய்ப்புத் திட்டம் (Women’s Quality Employment Plan) கட்டமைப்பையும் உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
