புதுடில்லி, ஜூலை 16 நாடாளு மன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு, நாடாளுமன்ற வளாகத்திற்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மறியல் செய்யவோ, உண்ணா நிலை இருப்பதற்கோ அல்லது மதச் சடங்குகளை நடத்துவதற்கோ தடை விதித்து மக்களவை செயலகம் புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
மழைக் கால கூட்டத் தொடர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத் தொடரில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறு வரையறை தொடர்பான 131-ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை மீண்டும் கொண்டு வர பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிக்க வரும் 19-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத் தாள் திருத்த குளறுபடிகள், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, அயோத்தி ராமன் கோவில் நன் கொடை முறைகேடு மற்றும் ஈரான்-அமெரிக்கா மோதலில் 13 இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகளை எழுப்பி அரசை முடக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
கட்டுப்பாடுகள்
இந்த அரசியல் பரபரப்புக்கு இடையே, நாடாளுமன்ற வளா கத்தின் பாதுகாப்பு மற்றும் நாடா ளுமன்ற உறுப்பினர்களின் தடையற்ற நடமாட் டத்தை உறுதி செய்யும் வகையில் மக்களவை செயலகம் விதி 124ஏ(2)-இன் கீழ் புதிய கட்டுப் பாடுகளை விதித்துள்ளது. அதன் விவரங்கள்:
போராட்டம் நடத்த தடை
நாடாளுமன்ற கட்டட நுழை வாயில்கள் முன்போ அல்லது வளாகத்தின் பிற பகுதிகளிலோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபடுதல், உண்ணா நிலை போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
பதாகைகள் மற்றும் சுவரொட் டிகள்: செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட அவதூறான சித்திரங்கள், படங்கள், முழக்கங்கள் அடங்கிய சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் காட்சிப்படுத்தக் கூடாது. நாடாளுமன்ற வளாகத்தை எந்தவொரு மதச் சடங்குகளை நடத்துவதற்கும் பயன்படுத்தக்கூடாது.
நாடாளுமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிகள், லத்திகள், ஈட்டிகள், வாள்கள், தடிகள் போன்ற ஆயுதங் களையோ அல்லது பதாகை அட்டை களையோ எடுத்துச் செல்லக் கூடாது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டம்
மழைக்கால கூட்டத்தொடரை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்க, தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம் வரும் 21-ஆம் தேதி காலை 9:30 மணிக்கு நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.
