குருமூர்த்தியின் குருநாதர் திருவாளர் சோ.ராமசாமி கடவுள், கோயில் பற்றி என்ன சொல்லுகிறார்? (3)

– மின்சாரம்

கோயில், பக்தியின் யோக்கியதை பற்றி திருவாளர் குருமூர்த்தியின் குருநாதர் சோ.ராமசாமி என்ன சொல்லுகிறார்?

கேள்வி: சென்னைத் தீவுத் திடலில் திருப்பதி ஏழுமலையான் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது பற்றியும், அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றது பற்றியும் தங்கள் கருத்து?

சோவின் பதில்: ‘இவ்வளவுக் கட்டணம் கொடுத்தால் வெங்கடேஸ்வரப் பெருமாளை உங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்து தங்க வைக்கிறோம்’ என்று ஒரு புதிய திட்டம் வராதது ஒன்று தான் குறைவு.

(‘துக்ளக்’, 23.4.2006, பக்கம் 17).

* * * * *

கோயிலுக்கு வர்றவன்
சைட் அடிக்கன்னா வர்றான்!

பதிலடிப் பக்கம்

வினா: வேத மந்திரத்தை இந்த மாதிரி விலை பேசி விற்கலாமா?

புரோகிதர் பதில்: எல்லாம் காலக் கோளாறுதான். காலம் ரொம்பத் தப்பாப் போச்சு நாங்கள்ளாம் இந்த மாதிரி வந்துட்டோம். இப்ப பிராமணனும் இல்லே. பிராமண தர்மமும் இல்லே.

வினா: நீங்க முன்னே பார்த்த மாதிரி ஜனங்களிடம் பக்தி இருக்கிறதா இப்போது?

புரோகிதர் விடை: பக்தியாவது ஒண்ணாவது? கோவிலுக்கு வர்றவன் சாமி தரிசனத்துக்கா வர்றான்? சைட் அடிக்கன்னா வர்றான். பொம்மனாட்டிகள் மட்டும் என்ன யோக்கியம்? அவாளும் புடவை, நகை, நட்டு இதெல்லாம் போக நேரம் இருந்தா சுவாமி அம்பாளை நெனச்சுக்கிறா!

– ‘துக்ளக்’ 01.06.1981 இதழ் பக்கம் 32

* * * * *

கேள்வி: அரசியல்வாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? ஆன்மிகவாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? நடிகராவதற்கு என்ன தகுதி வேண்டும்?

சோவின் பதில்: அரசியல்வாதி ஆவதற்குப் பொய் சொல்லத் தெரியவேண்டும். ஆன்மிகவாதியாவதற்குப் பொய்யை அருள்வாக்காக மாற்றத் தெரிந்திருக்க வேண்டும். நடிகராவதற்கு உண்மையாகவே நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

(‘துக்ளக்’, 26.10.2016, பக். 23)

* * * * *

கேள்வி: இலவசங்களைக் கொடுத்து ஓட்டு வாங்கிடலாம் என்ற அரிய தத்துவத்தை முதலில் கண்டு பிடித்த ஜீனியஸ் காங்கிரஸா, தி.மு.க.வா?

சோவின் பதில்: இவர்கள் யாருமில்லை. விபூதி குங்குமத்தோடு நிற்காமல் புளியோதரை, வெண் பொங்கல்’னு இலவசமாக கொடுத்தா பக்தர்கள் வருவாங்க’னு கண்டுபிடிச்சது கோயில்தான்.

(‘துக்ளக்’, 20.6.2012)

* * * * *

கோயில்கள் பற்றி காந்தியார்

பதிலடிப் பக்கம்

கானாடு காத்தானில் காந்தியார் கூறியதாவது:

“ஆலயங்களை நிர்மாணிப்பதில் நீங்கள் தாராளமாகப் பணத்தைச் செலவிடுகிறீர்கள் என்று அறிகிறேன். ஆலயம் என்று ஒரு கட்டடத்தைக் கட்டிவிட்டதால் மட்டும் கடவுள் அங்கு இருக்கிறார் என்று எண்ணுவது மூடநம்பிக்கை. தாசி வீட்டில் எந்த அளவு இறைவன் இருப்பாரோ அந்த அளவே அவர் இருக்கும் ஆலயங்கள் பலவற்றை நான் அறிவேன். தீண்டத்தகாதாருக்குக் கோயில் கட்டிக் கொடுக்குமாறு சில நண்பர்கள் என்னிடம் பணம் கொடுத்தார்கள். ஒரு புனிதமான மனிதன் கிடைத்தாலொழிய – அதை நிருவகிக்க நல்ல தர்ம கர்த்தாக்கள் கிடைத்தாலொழிய – அப்பணத்தை வைத்துக் கோயில் கட்ட நான் மறுத்துவிட்டேன்” என்று அவர் கூறினார்.

“விபசார விடுதிகளில் ஆண்டவன் எந்த அளவு இருக்கிறாரோ அந்த அளவே அவர் இருக்கக்கூடிய பல கோயில்கள் எனக்குத் தெரியும்” என்று காந்திஜி கூறியதற்குத் தமிழகத்தில் வைதீகர்கள் மத்தியில் – ஏன் வைதீகர்கள் அல்லாதோர் சிலரிடமிருந்தும் – பின்னால் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. உதாரணமாக, சென்னையில் அரசாங்கப் பள்ளியில் ஆசிரியராக இருந்த நாகராஜசர்மா “இம்மாதிரி நிதானம் தவறிப் பேசுவது மகாத்மாவிற்கு அழகல்ல”. மிஸ் மேயோ இந்தக் கோயில்களை விபசார விடுதிகள் என்று எழுதியிருப்பதாக வைத்துக் கொள்வோம். மகாத்மா காந்தி அப்போது அவரைக் கண்டித்திருப்பார். நகரத்தார்கள் கோயில்களைக் கட்டிக் கொண்டு போகும் வேலையை விடாமல் நடத்திக் கொண்டுபோக வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று பத்திரிகைகளுக்கு எழுதியிருந்தார். இதை சேலம் சி. விஜயராகவாச்சாரியார் போன்றவர்களும் எதிர்த்தார்கள். அவர்கள் தேவதாசி முறை அகல வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டார்கள் ஆனாலும் மேற்கண்டவாறு கூறியதன் மூலம் இந்து சமுதாயத்தின் மனதை காந்திஜி புண்படுத்திவிட்டதாக விஜயராகவாச்சாரியார் கூறினார்.

– (‘தமிழ் நாட்டில் காந்தி’ பக்கம் – 533)

* * * * *

விவேகானந்தர் என்ன சொல்கிறார்?

பதிலடிப் பக்கம்

“மதச் சண்டைகளும், ஜாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குவதற்கு ஒரு பெருங் கருவியாய் இருந்ததும், இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும். சமஸ்கிருத நூல்கள் தொலைந்து போகுமானால், இப்போராட்டங்களும் தொலைந்து போகும் என்று வருந்திக் கூறினார் விவேகானந்தர்.”

(மறைமலை அடிகளாரின்
‘தமிழர் மதம்’, பக். 24)

* * * * *

பதிலடிப் பக்கம்

‘சச்சி இராமாயணம்’ (தந்தை பெரியாரின் இராமாயணப் பாத்திரங்கள் தமிழ் நூலின் ஹிந்தி மொழி பெயர்ப்பு) நூலின் மீதான தடையை நீக்கி, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யர் வழங்கிய தீர்ப்பில் கீழ்க்கண்ட விவேகானந்தரின் கூற்றை எடுத்துக் காட்டியுள்ளார்.

“எங்களுடைய மதம், அடுப்பங்கரையிலும், எங்களுடைய தெய்வம் பானைகளாகவும் இருப்பதால், எந்த மதமும் என்னைத் தொடுவதற்கு அருகதையற்றதாக இருக்கிறது”.

* * * * *

பக்திக்கும் ஒழுக்கத்திற்கும்
சம்பந்தம் இல்லை!

கிருபானந்த வாரியார்

பதிலடிப் பக்கம்

கேள்வி: நம் நாட்டில் இறையுணர்வு குறைந்து வருகிறதோ…?

பதில்: என் அனுபவத்துல சொல்றேன்…. பக்தி அதிகமா யிட்டிருக்கு…. கோயிலுக்குப் போகிறவங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கிட்டே இருக்கு.

பழனியில் எம்பெருமான் முருகன் கோயில் உண்டியலில் முன்னாடியெல்லாம் அஞ்சு லட்சம், ஆறு லட்சம் ரூபாதான் வந்திச்சு. இப்பவோ காணிக்கைத் தொகை ரெண்டு மூணு கோடியைத் தாண்டிடுது. – பக்தி அதிகமாக இருக்கு… ஆனால் ஒழுக்கம்தான் குறைந்துப் போயிடுச்சு!

கேள்வி: இறைவனிடத்தில் மக்களுக்குப் பக்தி அதிகமாக இருக்கிறதென்றால், ஒழுக்கமும் இருக்கிறதென்று கொள்ளலாமே?

பதில்: ஊ…. ஹூம்… அப்படியில்லை. பக்திக்கும் ஒழுக்கத்துக்கும் சம்பந்தமேயில்லை.

– கிருபானந்தவாரியார்,
(‘ஆனந்தவிகடன்’ 22.12.1991)

* * * * *

காஞ்சிபுரம் மச்சேசுவரன் பெருமாள் கோயில் குருக்கள் தேவநாதனின் லீலை

கோயில் கருவறையில் உல்லாசம் அனுபவித்த காஞ்சிபுரம் மச்சேசுவரன் பெருமான் கோயில் குருக்கள் தேவநாதனின் அக்கிரமத்தை உலகுக்கு ஆதாரத்தோடு சொன்னது ஜூனியர் விகடன்தான் (9.12.2009). உடனடியாக போலீஸ் அவரைத் தேடத் தொடங்கவும், முதலில் தலைமறைவாகி, பிறகு முன்ஜாமீன் நாடி. அது கிடைக்காமல் சரண்டராகி, இப்போது சிறைக்கும் போலீஸ் கஸ்டடிக்குமாக ஹட்டில் அடித்துக் கொண்டிருக்கிறார் இந்த காம குருக்கள்! போலீஸ் விசாரணையில் அடுத்தடுத்து இவரைப் பற்றி வெளியாகத் தொடங்கிய தகவல்கள் பகீருக்கு பகீர் சேர்ப்பதாகவே அமைந்தன. டாக்டர் மனைவியுடன் தொடர்பு, பட்டு அதிபர் மனைவியுடன் தொடர்பு…. பிரபல டி.வி. நடிகையுடன் குருக்கள் உல்லாசம் என்றெல்லாம் பத்திரிகைகள் வெளுத்துக் கட்டிக்கொண்டே இருக்க… நாளுக்கு நாள் இவர் மீதான கோபம் மக்களிடையே திரண்டு கொண்டே போனது.

கடந்த திங்களன்று இவரை கோர்ட்டுக்கு போலீஸ் கூட்டி வந்தபோது… ஏராளமாகத் திரண்டுவிட்ட மக்கள் கடும் எதிர்ப்பு காட்டியதோடு…. இந்த ஆளைத் தூக்கில் போடணும்! என்று கோஷமிட்டபடி செருப்பு, விளக்குமாறெல்லாம் வீசியிருக்கிறார்கள். அங்கிருந்து தேவநாதனை பத்திரமாக மீட்டுச் செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

அந்த ஆவேச கும்பலின் கையில் குருக்கள் அன்று தப்பித் தவறி சிக்கியிருந்தால், அங்கேயே நசுங்கி பஞ்சாமிர்தம் ஆகியிருப்பார்! என்கிறார் கோர்ட்டுக்கு போன டீமில் இடம் பெற்ற ஒரு போலீஸ்காரர்!

பதிலடிப் பக்கம்

பெயர் சொல்ல விரும்பாத சில போலீஸ் நண்பர்கள் நம்மிடம், சாமி கும்பிட வரும் பெண்களின் மன ஓட்டத்தைக் குறிப்பால் அறிந்து வசியம் தடவிய வார்த்தைகள் பேசி, கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பக்கம் ஈர்த்திருக்கிறான் தேவநாதன். கடவுளின் தூதுவரான என்னுடன் சந்நிதானத்தில் உறவு கொண்டால், தெய்வப் பிரசாதம் ஆன பாக்கியம் உனக்குக் கிடைக்கும்! என்று சொல்லி ஆசைமூட்டி அவர்களை வீழ்த்தியிருக்கிறான்.

தேவநாதன் விரித்த வலையில் வசமாகச் சிக்கிக் கொண்ட ஒருவரின் பெயர் அம்பிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தேவநாதன் என்னை பலாத்காரம் செய்துவிட்டார் என்று இப்போது புகார் கொடுத்திருக்கும் இவருக்கு வயது முப்பது.

இவருக்கும் இவரது கணவருக்கும் பிரச்சினை இந்தப் பிரச்சினைக்கு விடிவு தேடித்தான் மச்சேசப் பெருமான் கோயிலுக்குச் சென்று மனமுருகி வேண்டுவதை வழக்கமாக்கி இருக்கிறார். அம்பிகாவின் வனப்பை நோட்டமிட்ட தேவநாதன் மெள்ள மெள்ளப் பேச்சால் வசியப் படுத்தியிருக்கிறான் இந்தக் கோயிலுக்கு வந்துட்டீங்கள்ல, உங்க எல்லா குறையும் நிவர்த்தி ஆயிடும் என ஆசை வார்த்தைகளை வீசியிருக்கிறான். அடுத்தடுத்து நெருங்கிப் பழகி நம்பிக்கையை சம்பாதித்திருக்கிறான். ஒருநாள், இந்தப் பிரசாதத்தை எடுத்துக்கோங்கோ என்று போதைப் புகையிலை போன்ற ஒரு வஸ்துவை பிரசாதத்தோடு சேர்த்துக் கொடுத்திருக்கிறான். அதை நம்பிய அம்பிகா, பிரசாதத்தை சாப்பிட்டுவிட்டு, தீர்த்தத்தையும் குடித்திருக்கிறார். சிறிது நேரத்தில் அந்தப் புகையிலை தந்த கிறுகிறுப்பில் பிரகாசத்தைச் சுற்றிவர முடியாமல், ஒரு ஓரமாக உட்கார்ந்தே விட்டார்.

அம்பிகாவை அருகில் சென்று உடல்நலம் விசாரித்து, நடந்த களைப்பா இருக்கும்… நீங்க சித்த நேரம் ஈசன் காலடியில் வந்து உட்கார்ந்துட்டுப் போங்கோ..! என்று அவரை அரவணைத்து கைத்தாங்கலாக அழைத்துவந்து, கருவறைக்குள்ளேயே அமர வைத்திருக்கிறான். அதன்பிறகுதான் அந்த அசிங்கத்தை அங்கேயே அரங்கேற்றி இருக்கிறான். அதை செல்போனிலும் காட்சிகளாக பதிவு செய்து கொண்டான். அம்பிகா ஓரளவு தெளிவு நிலைக்கு வந்து அழுதபோது, செல்போன் காட்சிகளைக் காட்டியே வாயடைத்திருக்கிறான். இதுபோலவே தொடர்ந்து அவரை கோயிலுக்கு வரவழைத்தும் இருக்கிறான்! என்று தமிழ் சினிமா வில்லக் காட்சியை விவரிப்பதுபோல விளக்கினார்கள் அந்த போலீஸ் நண்பர்கள். நமக்கு அடி வயிற்றைக் கலக்கியது!

* ஒரு பிரபல பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியையும் தேவநாதன் விடவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை… என்றார்கள்.

– ‘ஜூனியர் விகடன்‘ 09.12.2009

(வளரும்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *