பெட்ரோலிய அமைச்சகத்துக்கு தகவல் ஆணையம் உத்தரவு
புதுடில்லி, ஜூலை 14 இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவைக் குறைப்பதற்காக, பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகன இன்ஜின்கள் பாதிக்கப்படுவதாகவும், மைலேஜ் குறைவதாகவும் வாகன ஓட்டிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்தச் சூழலில், கடந்த 2014-2015ஆம் ஆண்டு முதல் தற்போதைய ஆண்டு வரை, எத்தனால் கலப்பு தொடர்பான முக்கியத் தரவுகளைக் கோரி மனுதாரர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத் தின் (RTI) கீழ் விண்ணப் பித்திருந்தார்.
மனுதாரர் கோரிய முக்கிய அம்சங்கள்
பெட்ரோல் உற்பத்தி அளவுகள், பெட்ரோல் இறக்குமதி விவரங்கள், அதற்கான ஒட்டு மொத்த செலவினம், எத்தனால் கலவை விதிமுறைகள், எத்தனால் கொள்முதல் மற்றும் அதன் பயன்பாடு பெட்ரோல் விற் பனை மூலம் அரசுக்குக் கிடைத்த லாபம், மறைக்கப்பட்ட தகவல் களும் மேல் முறையீடும் என்பன பற்றி விண்ணப்பத் தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை பரிசீலித்த ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு (PPAC), முழுமையான விவரங்களை வழங்காமல் பகுதியளவு தகவல்களை மட்டுமே வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த மனுதாரர், உரிய தகவல்களைப் பெற மேல்முறையீடு செய்தார்.
தகவல் ஆணையரின் அதிரடி உத்தரவு
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஒன்றிய தகவல் ஆணையர் குஷ்வந்த் சிங் சேத்தி அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.”பெட்ரோல் உற்பத்தி, இறக்குமதி, எத்தனால் கொள்முதல், எத்தனால் கலவை மற்றும் பெட்ரோலியத் துறையின் லாபம் தொடர்பாக இணையதளத்தில் உள்ள அனைத்துத் தரவுகளையும் மின்னஞ்சல் (Email) மூலம் மனுதாரருக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். மேலும், எத்தனால் கலவை தொடர்பான அரசின் அதி காரப்பூர்வ அறிவிப்புகளின் இணையப் பக்க இணைப்புகளையும் (Web links) மனுதாரருக்கு வழங்க வேண்டும்,” என்று அவர் தனது உத்தரவில் திட்ட வட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தகவல் ஆணையரின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, எத்தனால் கலப்பு மற்றும் பெட்ரோல் லாபம் குறித்த முழுமையான விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க் கப்படுகிறது.
