நெஞ்சு எரிச்சலைத் தடுப்பது எப்படி?

4 Min Read

உணவு உண்டதும் பலருக்கு நெஞ்சில் எரிச்சல் (Heart Burn) ஏற்படுவது வழக்கம். இந்தியாவில் சுமார் 40 சதவீதம் பேருக்கு நெஞ்செரிச்சல் உள்ளது. இவர்களில் 100இல் 20 பேருக்கு இது அன்றாடப் பிரச்சினையாக உள்ளது. வழக்கத்தில் நாம் நெஞ்செரிச்சல் என்று சொன்னாலும், இது நெஞ்சு முழுவதும் ஏற்படும் பிரச்சினை அல்ல. இது உணவுக்குழாய்ப் பிரச்சினை. மருத்துவ மொழியில் இந்த நோய்க்கு ‘இரைப்பை அமிலப் பின்னொழுக்கு நோய்’ (Gastro – Esophageal Reflux Disease சுருக்கமாக GERD) என்று பெயர். இது உணவுக் குழாய்ப் பிரச்சினைகளுள் மிக முக்கியமானது.

நெஞ்செரிச்சலுக்கு காரணம் என்ன?

நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம் இரைப்பையில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விசயம் என்னவெனில், உணவுக் குழாய் அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை. இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது அங்குள்ள திசுப்படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால்தான் நெஞ்செரிச்சல் ஏற்படும்.

மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் உணவுக் குழாயின் கீழ்முனை தொளதொளவென்று தொங்கி விடும். இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது அதைத் தடுக்க முடியாமல் உணவுக் குழாய்க்குள் அனுமதித்து விடும். இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தாலும் அது உணவுக் குழாயின் கீழ்ப்பகுதிக்குச் சென்று காயத்தை ஏற்படுத்தும். ‘அல்சர்’ எனப்படும் இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கு இப்படித்தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

வயிற்றில் அதிக அழுத்தம் இருந்தால் நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உடல் பருமனாக உள்ளவர்கள், கர்ப்பிணிகள், இறுக்கமாக உடை அணிபவர்கள், வயிற்றில் கட்டியைச் சுமந்து கொண்டிருப்பவர்கள் இதனால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து, அமிலம் மேலேறி, நெஞ்செரிச்சலை உண்டாக்கி விடும்.

சிலருக்கு இரைப்பையின் சிறு பகுதி மார்புக்குள் புகுந்து (Hiatus Hernia) உணவுக் குழாயை அழுத்தும். இதன் விளைவாக, உணவுக் குழாயின் தசைகள் கட்டுப்பாட்டை இழந்துவிடும். இரைப்பை அமிலம் உணவுக் குழாய்க்குள் செல்ல, அங்கு புண் உண்டாகி நெஞ்செரிச்சல் தொல்லை கொடுக்கும். பலருக்கு உணவு சாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் ஏற்படும். சிலருக்குப் பசிக்கும்போது ஏற்படும். பொதுவாக, இந்தத் தொல்லை இரவு நேரத்தில்தான் அதிகமாக இருக்கும்.

என்ன பரிசோதனை செய்வது?

சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப அறிகுறியாக நெஞ்செரிச்சல் மட்டுமே உண்டாகலாம். இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க, நெஞ்சில் எரிச்சல் உள்ளவர்கள் நோயின் துவக்கத்திலேயே இரைப்பை அகநோக்கி (Endoscopy) மற்றும் இதய மின்னலை வரை படம் (E.C.G.) பரிசோதனைகளைச் செய்து கொண்டால் காரணம் தெரிந்துவிடும்.

சிகிச்சை என்ன?

இரைப்பையில் அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகளும், அமிலத்தைச் சமன் செய்யும் மருந்துகளும் தரப்படுகின்றன. இவற்றுடன் அமிலம் பின்னொக்கிச் செல்வதைத் தடுக்க ‘புரோகைனட்டிக்’ மருந்துகள் (Prokinetic Drugs) மற்றும் வாந்தித் தடுப்பு மருந்துகள் தரப்படுகின்றன.

தடுப்பது எப்படி?

நெஞ்செரிச்சலுக்குப் பெரும்பாலும் உணவுக் குழாய் அழற்சிதான் காரணமாக இருக்கும். உணவு விசயத்தில் தெளிவும், கவனமும் இருந்தால் போதும், ஆரம்ப நிலையிலுள்ள நெஞ்செரிச்சலை மிக எளிதில் குணப்படுத்திவிடலாம். சாப்பிடும்போது மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும். கவலையாக இருக்கும்போதோ, கோபமாக இருக்கும்போதோ சாப்பிட வேண்டாம்.

உங்களுக்குத் தேவையான அளவுக்கு உணவு சாப்பிடுங்கள். ருசிக்காகவோ, மற்றவர்களைத் திருப்திப்படுத்தவோ சாப்பிடுவதைத் தவிருங்கள். அதிகச் சூடாக எதையும் சாப்பிடாதீர்கள். காரம் அதிகமாக உள்ள உணவுகளும் வேண்டாம். மசாலா கலந்த, எண்ணெய் மிகுந்த, கொழுப்பு நிறைந்த, புளிப் பேறிய உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் வயிறு நிறையச் சாப்பிடுவதைவிட மூன்று அல்லது நான்கு மணிநேர இடைவெளிகளில் சிறிது சிறிதாகச் சாப்பிடலாம்.

அவசரமாகச் சாப்பிடக் கூடாது!

அவசரம் அவசரமாகச் சாப்பிடுவது தவறு. அப்படிச் சாப்பிடும்போது உணவோடு சேர்ந்து காற்றும் இரைப்பைக்குள் நுழைந்துவிடும். இதனால் ஏப்பம் வரும். சில சமயங்களில் ஏப்பத்துடன் ‘அமிலக்கவளம்’ உணவுக் குழாய்க்குள் உந்தப்படும். இதனால் நெஞ்செரிச்சல் அதிகமாகும். ஆகையால், உணவை நன்றாக மென்று, மிக நிதானமாக விழுங்குங்கள். சாப்பிடும் நேரத்தில் பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் ஒரே நேரத்தில் அதிக அளவாக இரண்டு தம்ளர் தண்ணீர் குடித்தால் போதும். அளவிற்கு மீறி தண்ணீர் குடித்தால், உணவில் உள்ள எண்ணெயும் இரைப்பையில் உள்ள அமிலமும் தண்ணீரில் மிதந்து மேலெழும்பி வந்து நெஞ்செரிச்சலை உண்டுபண்ணும்.

கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு, காபி, தேநீர், சாக்லேட், மது, பெப்சி, கோக், வாயு நிரப்பப்பட்ட பிற பானங்கள், பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகள், காரம், மசாலா உணவுகள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. இவற்றை முழுமையாகத் தவிர்க்க இயலாதவர்கள் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.

வழக்கமாக, உணவு உண்டபின்பு இரைப்பை விரிவடையும். அப்போது அதன்மேல் அழுத்தம் ஏற்பட்டால் அமிலம் உணவுக் குழாய்க்குள் செல்லும். இதனைத் தடுக்க, உண்டபின் இடுப்பு ஆடைகள், இடுப்பு பெல்ட் போன்றவை இறுக்கமாக இருந்தால், சிறிது தளர்த்திக் கொள்ள வேண்டும். சாப்பிட்ட பின் குனிந்து வேலை செய்யக் கூடாது; கனமான பொருளைத் தூக்கக்கூடாது; உடற்பயிற்சி செய்யக்கூடாது; தண்டால் எடுக்கக்கூடாது.

சாப்பிட்டவுடன் படுக்கைக்குச் செல்லக் கூடாது

மிக முக்கிய யோசனை இது: சாப்பிட்டவுடன் படுக்காதீர்கள். இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கச் செல்லுங்கள். அப்போதுகூட படுக்கையின் தலைப்பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடி வரை உயர்த்திக் கொள்வது நல்லது. தலைப்பக்கக் கட்டில் கால்களுக்குக் கீழே அரை அடி உயரத்திற்கு மரக்கட்டைகளை வைத்தால் போதும். வலப்புறமாகப் படுப்பதைவிட இடதுபுறமாகத் திரும்பிப் படுப்பது நெஞ்செரிச்சலைக் குறைக்கும்.

புகைப்பிடிப்பு, இரைப்பையில் அமிலச் சுரப்பை அதிகரிப்பதோடு, உணவுக் குழாயின் சுருக்குத் தசைக் கதவுகளையும் தளரச் செய்வதால் நெஞ்செரிச்சல் அதிகமாகிவிடும். புகைப்பிடிப்பதைப் போலவே புகையிலை போடுவது, மது அருந்துவது, பான்மசாலா உபயோகிப்பது ஆகியவையும் நெஞ்செரிச்சலுக்கு ஆகாது. இவற்றையும் அறவே தவிர்த்து விடுங்கள். நெஞ்செரிச்சல் தொல்லை நிரந்தரமாகத் தீரும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *