அயோத்தி ராமன் கோயில் மோசடி! முட்டுக்கொடுக்கும் ‘துக்ளக்’ (2)

9 Min Read

அயோத்திராமன் கோயில் மோசடி உலகமெல்லாம் சந்தி சிரிக்கிறது. ‘ப்பூ’ ராமன் சக்தி இவ்வளவு தானா? என்று மக்கள் உதட்டைப் பிதுக்கும் நிலை ஏற்பட்டு விட்டது என்ற நிலையில் எதையாவது எடுத்துச் சொல்லி முட்டுக் கொடுக்க வேண்டும் என்று மூச்சு முட்டும் அளவுக்கு சாஸ்திரங்கள், புண்ணாக்கு மூட்டைகளை எல்லாம் அவிழ்த்துக் கொட்டுகிறது ‘துக்ளக்’.

ஆரியம் பற்றிக் கூறும் போது, விதைக்காது விளையும் கழனி என்றார் அறிஞர் அண்ணா.

அதற்கு ஆபத்து வந்து விட்டது என்ற நிலையில் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அலை மோதுகிறது அவிட்டுத் திரிக் கூட்டம்!

உண்மையை மறைக்க முயன்றால்தான் மோசடியாம்! அயோத்தி கோயில் பிரச்சினையில் உண்மையை மறைக்கவில்லையாம். அதனால் இதில் குற்றம் காண்பதற்கு ஏதுமில்லை என்ற போக்கில் ‘துக்ளக்’ எழுதித் தள்ளுகிறது.

இது இன்று நேற்றல்ல; வாழையடி வாழையாகப் பார்ப்பனர்கள் கையாண்டுவரும் ஒரு வகை யுக்தி!

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட தஞ்சைவாணன் கோவையைப் புரட்டினால், இவர்களின் புரட்டு வெளிப்படும்.

“நாகப்பட்டினத்தில் புத்தர் தெய்வம் பசும் பொன்னால் செய்திருந்தது. ஆவி நாடர் (திருமங்கை ஆழ்வார்) களவில் கொண்டு வந்து திருவரங்கத்து மதில் செய்வித்தார். அவர் அச்சமயத்தில் கடவுள் தன்மையராய் விளங்கினார். அவரைக் குற்றம் ஒருவரும் இலர்”.

சொல்லுவது திராவிடர் கழகம் வெளியிட்ட நூல் அல்ல. சைவ சித்தாந்தக் கழகம் வெளியிட்ட அகப் பொருள் நூல்.

பன்னிரெண்டு ஆழ்வார்களுள் ஒருவனான திருமங்கை திட்டமிட்டுத் திருடி இருக்கிறான். ஆனால் அவனைத் திருடன் என்று சொல்லாமல், திருடிய நேரத்தில் அவன் கடவுள் தன்மை உடையவனாக இருந்தானாம். அதனால், அவனைக் குற்றம் கூற முடியாதாம்.

13 நூற்றாண்டு முன்பு இருந்த திருடன் திருமங்கை இந்த 2026ஆம் அதே பாணியில் இருப்பதைக் காண முடிகிறது.

திருமங்கை ஆழ்வார் பற்றி தஞ்சை வாணன் கோவை மட்டுமல்ல; ‘‘குரு பரம்பரைப் பிரபாவம்” வைணவ நூலிலும் குறிப்பிட்டுள்ளது.

கி.பி. எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றண்டில் இருந்த திருமங்கையாழ்வார் நாகைப்பட்டினத்துப் பவுத்த விகாரையொன்றில், முழுவதும் பொன்னால் அமைக்கப்பட்டிருந்த புத்த உருவச் சிலையைக் கவர்ந்து கொண்டு போய் அப்பொன்னைக் கொண்டு திருவரங்கத் திருப்பதியில் திருமதில் எடுப்பித்தல் முதலான திருத்தொண்டுகளைச் செய்தார் என்பது “குரு பரம்பரைப் பிரபாவம்” முதலிய வைணவ நூல்களினால் தெரிய வருகிறது.

(‘பவுத்தமும் தமிழும்’, பக். 47,48,

ஆசிரியர் – மயிலை சீனி வெங்கடசாமி)

கோயில் கட்டடக் கொள்ளை

கூலிக் கேட்டால் கொலை

திருமங்கையாழ்வார் நாகைப்பட்டினத்து புத்தர் கோயில்களிலிருந்து பொன் விக்கிரகத்தை எடுத்து வந்து உருக்கிவிற்றுப் பணமாக்கி, சிறீரங்கம் கோயில் மதில்கள் முதலியன கட்டினார். இதற்கான தளவாடங்களுக்கும். அன்றாட வைஷ்ணவ திருமேனிகள் திருவமுது கைங்கரியத்துக்கும் ஏராளமான பொருள்கள் செலவாயிற்று. ஆனால், மதில்களையும், கட்டடங்ளையும் கட்டிய பாட்டாளி மக்களின் கதியோ? படித்துப் பாருங்கள்.

மூளைச் சலவை முன்னோடி

“தற்போது திருமதில்கள் கட்டின கொல்லர் முதலிய தொழிலாளிகள் தங்களுக்குக் கொடுக்கவேண்டிய கூலிக்காக, ஒருமித்து வந்து இவரை (திருமங்கையாழ்வாரை) பாதிக்க, இவர்களிடத்தில் இதமாகப் பேசி. திருக்காவேரி தீரத்தில் சில திரவியம் சேமித்து வைத்திருக்கிறது என்றும். அங்கே வந்தால் வேண்டியவரையில் கொடுப்போம் என்றும் (திருமங்கை) சொல்ல; அவர்களும் இசைய அவர்களை ஓர் இடத்தில் ஏற்றிக்கொண்டு; திவ்ய ஞானங்களை அமோகமாய்ப் போதித்து; அவர்களுக்கு (தொழிலாளருக்கு) இந்த ஜகத்திலிருந்த இச்சையை மாற்றி, பக்தர்களாகும்படி பண்ணி, ப்ரவாகத்தின் (வட காவேரி – கொள்ளிட நதி வெள்ளம்) மத்தியிலே போமளவில், இவர் (திருமங்கை) அவர்களை (தொழிலாளர்களை) நோக்கி, “உங்களுக்கு எல்லாம் இப்போது திரவியத்தின் (பணம்) பேரில் இச்சையோ? நித்திய வாழ்வைப் பெற இச்சையோ? என்று கேட்டார். நித்திய வாழ்வே. வேண்டும் என்று அவர்கள் (தொழிலாளர்கள்) ஏககண்டமாய்ப் (ஒரே குரலாக) பிரார்த்தித்தனர்”.

“அப்படியானால், யாவரும் சிரசின் மேல் கைளைக் கூப்பிக்கொண்டு, பெரிய பெருமாள் (சிறீரங்கநாதர் சிலை) திருவடிகளில் மனத்தைச் சத்தியமாக நிறுத்தி வைத்து, தியானித்து நிற்பீர்களாகில், இப்போதே அந்தப் பரமபதநாதனை நாம் பிரத்யட்சமாக்கித் தருகிறோம்” என்றார் (திருமங்கையாழ்வார்). அவர்களும் (தொழிலாளர்கள்) அப்படியே செய்து நிற்க, அந்த சமயத்தில், ஓடக்காரனுக்கு (திருமங்கை)ச் சமிக்ஞை பண்ணினார். அவனும் தாமுமாய் (திருமங்கை), பிணையல் போட்டுக் கொண்டு வந்த மற்றொரு ஓடத்தில் தாண்டிக் கொண்டு, அவர்களை (தொழிலாளர்களை) ஓடத்தோடே கவிழ்த்துவிட்டுத் திருநாடு அளித்து (வெள்ளத்தில் மூழ்கடித்துச் சாகடித்துவிட்டு) திரும்பிவந்து, கோயிலில் (சிறீரங்கம்) எழுந்தருளியிருந்தார்.

”அனந்தரம் அந்தத் தொழிலாளர்களுடைய புத்திர பவுத்திரர்கள் இந்த வர்த்தமானத்தை (தொழிலாளர்களைக் கொள்ளிடத்தில் மூழ்கடித்துக் கொன்ற விஷயம்) அறிந்து கொண்டு. ‘எங்களுடைய பிதாக்களையும், பிதாமஹர்களையும் (பாட்டனார்) கொன்று விட்டிருப்பதற்குக் காரணம் சொல்லும்’ என்று இவர்களைச் (திருமங்கையை – ஓடக்காரனை) சூழ்ந்து கொண்டு பலவிதமாக இரைந்தனர். அப்போது இவர் (திருமங்கை) மகா துக்கத்துக்குள்ளாகி விழித்துக் கிடந்தார்.

‘ஒருநாள் இவர் (திருமங்கை) பெரிய பெருமாளை (அரங்கர் சிலைச் சேவித்து நின்று ஒருவாறு சிந்தித்துக் கொண்டிருக்க, பெரிய பெருமாள் கடாட்சித்து.”நீர் எதுக்குச் சிந்திக்கிறீர்” என்றார். இவர் (திருமங்கை) ”சுவாமி! இப்போது திருமதில் வேலைக்காரர்களைத் தேவரீர் ஆட்கொள்ள இடமாக அமைந்த வட திருக்காவேரிக்குக் “கொள்ளிடம் (முழுகும் மனிதரைக் கொள்ளும் – மூழ்கடித்துச் சாகடிக்கும் இடம்) எனவும்: அந்தத் துறைக்கும் ‘பார்வனத் துறை” (பார்வனம் -சிரார்த்தம் செய்யும் இடம்) எனவும் பெயர் வருமாறும். அடியேன் அந்தத் தீரத்தில் வேலியிட்டுக் கொள்ளவும், அவ்வேலிக்குள் அநாதைப் பிரேதங்களுக்கு எல்லாம் அடியேன் சமஸ்காரம் செய்து கொண்டிருக்கவும்:அவைகளுக்குத் தேவரீர் பரமபதம் சாதித்து வரவும். கிருபை புரிய வேண்டியதாய் ஒரு வரம் கேட்கிறேன்” என்ன –

‘பெரிய பெருமாள் (சிறீரங்கநாதர்) உவந்த உள்ளத்தாராய், ‘ஆழ்வீர்! நீர் இடுகிற வேலிக்குள் (கொள்ளிடம் ஆற்றில்) விழுந்து இறக்கிற மனுஷ்ய, பசு, பட்சியாதி சகல சீவர்களுக்கும் பரமபதம் தருகிற நாம் உம்மால் சமஸ்காரம் பண்ணப்படுபவர்களுக்கு மாத்திரமோ இல்லை என்போம்’ என்று வரம் தந்தருளினார்.

‘திருமங்கையார் புளகிக்ருதகாத்ராய், பார்வனத் துறையைத் திருத்தி, மண்டபம் இயற்றி, அனந்தமான அனாதைப் பிரேதங்களுக்கு சமஸ்காரங்கள் செய்து, அவர்களுக்கெல்லாம் முக்தி தந்து கொண்டிருந்தார்’.

(வைணவ சமயத்தவர்களது “குரு பரம்பரை” என்ற நூலில் திருமங்கையாழ்வார் வைபவம் என்ற அவரது வரலாற்றில் காணப்படுவது)

‘கோயில் உண்டியல்களில் இருந்து பணத்தைத் திருடுவது தான் மிகவும் எளிது. உண்டியலில் போடும் பணம் புனிதமானது. அதை வெளியே எடுக்கும்போது அது வெறும ரூபாய் நோட்டுகளாகி விடுகின்றன ‘ – என்று கூறியது கோயில் நிர்வாகம் குறித்து சி.பி.ராமசாமி அய்யர் குழுவின் அறிக்கை. அதன் அடிப்படையில் தான் கோயில் நிதியை மதச்சார்பற்ற அரசு கையிலெடுப்பது நியாயமானது என்பதை நீதிமன்றம் ஏற்றது.

“திருட்டு, ஊழல், மோசடி ஆகியவை அரசு அமைப்புகளில் நிலவுகின்றன. அதற்கு எதிராகப் பொறுப்பானவர்கள் எவ்வளவு விரைவாகச் செயல்பட்டு அதற்கான தீர்வைத் தொடங்குகிறார்கள் என்பதே நாணயத்தின் அடையாளம்” என்று சப்பைக் கட்டு கட்டுகிறார் திருவாளர் குருமூர்த்தி.

நடவடிக்கை எடுப்பதாலேயே ராமன் கோயில் மோசடி என்ற ஒன்று இல்லாமல் போய்விடுமா?

ராமன் கோயில் கட்டுவதற்காக ‘அடேயப்பா’ எவ்வளவுக் குரல் கொடுத்தார் பிரதமர் மோடி. இப்பொழுது அதே ராமன் கோயிலில் மோசடிக்கு மேல் மோசடி என்று நாளும் செய்து வந்த வண்ணம் உள்ளதே – பிரதமர் மோடிஜி ஏன் வாய் திறக்கவில்லை. இதுதான் ‘துக்ளக்’ கூறும் நிர்வாக இலட்சணமா?

இதில் சர்.பி.பி.ராமசாமி அய்யர்வாளின் அறிக்கையை வேறு சாட்சிக்கு அழைத்துள்ளார் – திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள். 1960இல் சர்.சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை 1962இல் வெளிவந்தது. கோயில்களில் நடைபெறும் மோசடிகள், தில்லுமுல்லுகளைப் புட்டுப் புட்டு வைத்துள்ளதே – அதற்கு என்ன பதில் குருமூர்த்தியாரே! – இதோ ஒன்றிரண்டு:

ஏராளமான மகந்துகளும், டிரஸ்டிகளும் அறக்கட்டளைகளின் சொத்துகளை மூன்றாம் தரப்பு நபர்களுக்கோ அல்லது தங்களைச் சார்ந்திருக்கும் வேண்டியவர்களுக்கோ அல்லது தங்களால் நியமிக்கப்படும் ஆசாமிகளுக்கோ ஒப்படைப்பு செய்திருக்கிறார்கள்; அல்லது அச் சொத்துகளைத் தங்கள் சொத்தாகப் பாவித்திருக்கிறார்கள்- தங்களுக்குப் பின் தங்கள் பிள்ளைகளுக்கு அச் சொத்து கைமாறும்படி- இவ்வாறு அய்யர் கமிஷன் அறிக்கை கூறுகிறது.

கமிஷன் மேலும் கூறுவதாவது:-

“நாங்கள் சோதித்துப் பார்த்தவற்றில் பெரும்பான்மையான விவகாரங்களில் தப்பு வழியில் பயன்படுத்துவது என்பது மிகவும் பச்சையான முறையில் நடத்தப்பட்டிருந்தன; அதாவது, அதை மோசடி என்றே கூறிவிடலாம். கோயில்கள் மிகவும் கேவலமான முறையில் பராமரிக்கப்பட்டிருந்தன. அவை மிகவும் பழுதுபட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தன. சாமியை எழுந்தருளச் செய்து கொண்டுவரும் ஆராதனை மண்டபம்கூட பல நாள்களுக்குச் சுத்தம் செய்யப்படாமல் கிடந்தன. திரிகால பூசை பற்றிய கணக்கில் இதற்காகப் பெருந்தொகைகள் செலவிடப்பட்டதாக எழுதப்பட்டிருந்தது. ஆனால், இதுபற்றி நாங்கள் நடத்திய விசாரணையின் மூலம் தொடர்ந்து பல நாள்களுக்கு தினசரி ஒருவேளை பூஜை கூட செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாயிற்று” என்று சி.பி.ராமசாமி அய்யர் அறிக்கை மேலும் கூறுகிறது.

இதன் காரணமாக, பல கோயில்கள் தங்களுக்கு ஏராளமான செல்வம் படைத்தவையாக இருந்தாலும், பெருமளவில் காணிக்கை வந்து குவிந்தாலும்கூட அதன் கணக்குப் புத்தகங்களைப் பரிசீலித்துப் பார்த்தால் அவை ஏழைக் கோயில்களாகவே இருக்கின்றன. இதில் வியப்படைவதற்கு ஏதுமில்லை. இத்தகைய கடுமையான முறைகளுக்குப் பொறுப்பாக உள்ள டிரஸ்டிகளும், மகந்துகளும், பூசாரிகளும், அர்ச்சகர்களும் “ஒன்று தற்குறிகளாக இருக்கின்றனர். அல்லது அரைகுறை கல்வியறிவு படைத்தவர்களாக இருக்கின்றார்கள். அத்துடன் வழக்கமாகவே பணம் பறிக்கும் ஆசாமிகளாக இருக்கிறார்கள்” என்று அய்யர் கமிஷன் அறிக்கை அளந்தறிந்து கூறுகிறதே!

அய்யர் கமிஷன் அறிக்கை மேலும் கூறுகிறது:-

பழமையானதும், புகழ் பெற்றதுமான காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் குறிப்பிட்ட சில மகந்து, பண்டாக்களின் பரம்பரைச் சொத்தாக, உரிமை கொண்டாடப்படுகிறது. இவர்கள் தங்கள் குடும்பங்களை நிர்வகிக்க நிர்வாகக் கமிட்டி ஒன்றை இப்போது உருவாக்கி இருக்கிறார்கள். காணிக்கைகள் யாருக்குச் சொந்தம் என்பது பற்றிய வியாஜ்ஜியம் இவர்களுக்கிடையே கடந்த 60 வருடங்களாக நடைபெற்ற வண்ணம் இருக்கிறது. அறக்கட்டளைச் சொத்துகள் மூலமும் காணிக்கைகளின் மூலமும் கோயிலுக்கு வரும் வருமானம் முறைப்படி கணக்கெழுதப்படவில்லை என்று ஏராளமான சாட்சிகள் உறுதிப்படுத்தினார்கள்.

தேவைக்கான பூஜைக்குரிய செலவுகளைக் கழித்துக் கொண்ட பிறகு, காணிக்கைகள் 4 குடும்பங்களிடையே பங்கிட்டுக் கொள்ளப்படுகிறது. சம்பிரதாயத்தின் அடிப்படையிலும் சிறீ கிருஷ்ணதாஸ் என்பவரால் எழுதப்பட்டு, 1937ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “விசுவநாத தரிசனம்” என்ற நூலில் குறிப்பிட்டிருக்கும் வழக்கத்தின் அடிப்படையிலும் இவர்கள் இவ்வாறு பங்கிட்டுக் கொள்கிறார்கள்.

கோயில் விவகாரம் இங்கே மட்டும்தான் இப்படி என்பதில்லை. அரித்துவாரம், காசி, விந்தியாச்சல், கயா, தேவ்கார், பூரி மற்றும் புவனேஸ்வரம் ஆகிய புகழ்பெற்ற மத ஸ்தலங்களில் உள்ள கோயில்களில் பெரும்பான்மையாகக் காணிக்கைகளின் மீது கட்டுப்பாடு விதிக்கவும், பரம்பரை பாத்தியதை கோரவுமான உரிமை பண்டாக்களுக்கே இருக்கிறது.

பூசாரிகள் அனைவரும்  தற்குறிகளே

பெரும் அதிகாரங்களையும் மாற்றமுடியாத உரிமைகளையும் பெற்றிருக்கும். இந்த பண்டாக்கள்பற்றி அய்யர் கமிஷன் அறிக்கை என்ன கூறுகிறது தெரியுமா?

“அநேகமாக இவர்கள் தற்குறிகளாக இல்லையென்றால், தப்பாகக் கற்றுக்கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். எவ்வளவு அதிகமாகப் பணம் பெறமுடியுமோ, அவ்வளவு பணம் பெறவேண்டும் என்பதுதான் இவர்களின் ஒரே வேலை.”

இந்தப் பண்டாக்கள் கையாளும் மிரட்டலும், உருட்டலுமான முறைகள் பற்றி அய்யர் கமிஷன் சில விவரங்களைக் காட்டியிருக்கிறது. வரலாற்றில் பேசப்படும் பிண்டாரிக் கொள்ளையர்களின் இன்றைய பதிப்பாக இவர்கள் இருக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டின் புகழ்மிக்க – வளம் மிக்க நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலுக்கு 60 ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலம் சொந்தமாக இருந்தது என்று தஸ்தாவேஜுகள் காட்டுகின்றன. ஆனால், இந்தக் கோயிலின் விவகாரங்களை அய்யர் கமிஷன் பரிசோதித்துப் பார்க்கப் புகுந்த வேளையில் 40 ஆயிரம் ஏக்கர் நிலம் காணாமல் போய்விட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

கழகம் வெளியிட்டுள்ள “கோயில்கள் தோன்றியது ஏன்?” என்ற நூலில் மேலும் விரிவாகக் காணலாம்.

சாட்சிக்கு அழைக்கப்பட்டவர் – பிறழ்சாட்சியாகக் காணப்படுகிறாரே!

40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் திருட்டான மோசடியா?

“துக்ளக்” அய்யர் என்ன சொல்லுகிறார்?

(வளரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *