திருவண்ணாமலை, ஜூலை 13– விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தமிழ் தேசிய மாநாடு தொடர்பான மண்டல செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு நிர்வாகிகளிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
கூட்டணி அமைச்சரவை
ஒரு கூட்டணியில் வெற்றி பெற்று விட்டு, மற்றொரு கூட்டணியின் அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்துப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. நாங்கள் இந்த முடிவை மிகவும் தயங்கித் தயங்கித்தான் எடுத்தோம்.
எங்களுக்கு எந்தக் காலத்திலும் பதவியின் மீது நாட்டம் இருந்தது இல்லை. இந்தத் தேர்தலில் ஜாதி, மதம் அல்லது பண பலத்தால் திமுக மற்றும் அதிமுக அணிகள் தோற்கடிக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
திராவிட அரசியலுக்கு எதிராகப் பரப்பப்படும் வெறுப்பு
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, திராவிட இயக்க அரசியலுக்கு எதிரான வெறுப்பு அரசியல் மிகத் தீவிரமாகப் பரப்பப்பட்டு வருகிறது.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தமிழ்நாடு அரசியலில் இரு துருவங்களாக நிலைபெற்று விட்ட பிறகும், அவற்றுக்கு எதிராகத் தொடர்ச்சியான தாக்கு தல்கள் நடத்தப்படுகின்றன. துரோகமும், சூழ்ச்சியும், வஞ்சகமும் நிறைந்த இந்தத் தற்போதைய அரசியல் சூழலில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
தேர்தலுக்கு முன்பாக நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) விமர்சனம் செய்தோம். ஆனால், தேர்தலுக்குப் பிறகு அவர்கள் எங்களை நாடி வந்த போது நாங்கள் அவர்களுக்கு ஆதரவளித்திருக்கிறோம். தமிழ் நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை எந்தவொரு சூழ்நிலையிலும் உள்ளே நுழைய அனுமதிக்க மாட்டோம்.
அரசுப் பதவியை விட்டு விலகு வதற்குக் கடிதம் கொடுத்துவிட்டு வர வேண்டும். ஆனால், அரசியல் கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு அத்தகைய நிலை தேவையில்லை. இருப்பினும், அண்ணாமலை தனது கட்சியை விட்டு வெளியே வருவதற்கு அனுமதி கேட்டுவிட்டு வந்திருக்கிறார். அவர் பாஜகவின் முகமாகத் தொடர்ந்து இருந்துவிடக் கூடாது.
“ஆர்.எஸ்.எஸ் முகமூடியுடன் அண்ணாமலை”
“தமிழ்நாட்டில் பாஜக நேரடியாக அரசியல் செய்ய முடியாது என்பதால், அண்ணாமலையை முன்னிறுத்தி பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் களம் இறக்கி யுள்ளனவோ என்று எண்ணத் தோன்றுகிறது. அண்ணாமலை அரசியலுக்கு வருவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஆனால், அவர் ஆர்.எஸ்.எஸ் முகமூடியுடன் வருவதுதான் இங்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. மேற்கு வங்காளத்தில் நடந்தது போன்ற ஒரு அரசியல் சூழல் தமிழ்நாட்டில் நடந்துவிடக் கூடாது என்பதில் நாங்கள் மிகுந்த கவலையோடு இருக்கிறோம்.”
இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் கூட்டத்தில் பேசினார்.
ஆர்.எஸ்.எஸ் முகமூடியுடன் அண்ணாமலை தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க.-வை வீழ்த்த வெறுப்பு அரசியல் தொல்.திருமாவளவன் ஆவேசப் பேச்சு!
Leave a Comment
