புதுடில்லி, ஜூலை 12 இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 13 பள்ளிகள் மூடப்படுவதாகவும் அதில் மத்தியப் பிரதேசத்தில் மட்டும் பாதிக்கு மேற்பட்ட பள்ளிகள் இருப்பதாகவும் UDISE+ அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் பள்ளிக்கல்வி கட்டமைப்பு குறித்து ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அண்மைய UDISE+ அறிக்கையில் பல அதிர்ச்சி யூட்டும் புள்ளிவிவரங்கள் வெளியாகி யுள்ளன. அதன்படி, நாடு முழுவதும் நாள்தோறும் சராசரியாக 13 பள்ளிகள் நிரந்தரமாக மூடப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.
அதிர்ச்சியூட்டும்
தேசிய புள்ளி விவரங்கள்
தேசிய புள்ளி விவரங்கள்
பள்ளிகளின் உள்கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை மற்றும் ஆசிரியர் விகிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, கடந்த ஓராண்டில் மட்டும் நாடு முழுவதும் 4,791 பள்ளிகள் தங்கள் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டுள்ளன. இதனைச் சராசரியாகக் கணக்கிடும் போது, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 13 பள்ளிகள் இழுத்து மூடப்படுகின்றன. இதில் பெரும்பாலானவை அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆரம்பப் பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேசத்தின்
கவலைக்கிடமான நிலை
கவலைக்கிடமான நிலை
பள்ளிகள் மூடப்படும் விவகாரத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் மோசமான நிலையில் உள்ளது. நாடு முழுவதும் மூடப்பட்ட மொத்த பள்ளிகளின் எண்ணிக்கையில், பாதிக்கும் மேற் பட்டவை (50 சதவீதத்திற்கும் மேல்) மத்தியப் பிரதேசத்தில்தான் அமைந் துள்ளன. இங்கு 2,426 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டுள்ளன.
2024-2025ஆம் ஆண்டில் 14,71,473 பள்ளிகளில் இருந்து 2025-2026ஆம் ஆண்டில், 14,66,682 பள்ளிகளாகக் குறைந்துள்ளன. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கீழே உள்ள மாநி லங்கள் இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தெலங்கானா (1,392), மேற்கு வங்காளம் (568), ஆந்திரப் பிரதேசம் (474), தமிழ்நாடு (369), கருநா டகா (281) மற்றும் இமாச்சலப் பிரதேசம் (266).
மூடப்படுவதற்கான
காரணங்கள் என்ன?
காரணங்கள் என்ன?
இவ்வாறு ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்படுவதற்கான முக்கிய காரணங்களையும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
அரசுப் பள்ளிகளில் போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல் லாதது முக்கியக் காரணமாகும்.
50 அல்லது அதற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சிறிய பள்ளிகளை, அருகிலுள்ள பெரிய பள்ளிகளுடன் இணைக்கும் மாநில அரசுகளின் கொள்கை போதிய உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை.
தனியார் பள்ளிகளை நோக்கிப் பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டுவது.
அடிமட்ட அளவில் மாணவர்களுக் குக் கல்வியைக் கொண்டு சேர்க்கும் அரசுப் பள்ளிகள் பெருமளவில் மூடப் படுவது, கிராமப்புற மற்றும் விளிம்பு நிலை மாணவர்களின் கல்வியைக் கடுமையாக பாதிக்கும் என கல்வி யாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
