பல்கலைக் கழகங்களை நடத்தும் பொறுப்பை மாநில அரசுக்குத் தந்துவிட்டு
அதிகாரத்தைக் கைப்பற்ற முனையும் ஒன்றிய அரசின் திட்டம்தான் ‘விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் மசோதா!’
‘விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான்’ மசோதாவை ஆய்வு செய்யும் கூட்டு நாடாளுமன்றக் குழு இது நாள் வரை பொது விசாரணை நடத்தவில்லை.
இந்த மசோதா பல்கலைக்கழகங்களை ஒழுங்குப்படுத்தும் மன்றத்தை (Regulatory Council) உருவாக்குகிறது. பல்கலைக் கழகங்களை ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசிடம் மட்டுமே இந்திய அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை நேரடியாக ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்தை ஒன்றிய அரசிடம் தரும் இந்த மசோதா, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடான கூட்டாட்சித் தத்துவத்தைத் தகர்க்கிறது. இந்த மசோதா பொறுப்பை மாநில அரசுகளிடமும், அதிகாரத்தை ஒன்றிய அரசிடமும் தருகிறது.
தேசியக் கல்விக் கொள்கை 2020அய் நடைமுறைப்படுத்தத் தேவையான கட்டமைப்பை உருவாக்குவதே இந்த மசோதாவின் நோக்கம். அதன்படி, இந்த மசோதா உருவாக்கும் ஆணையம், அதன் கீழ் இயங்கும் மன்றங்கள், மாநில அரசுகளிடம் தெரிவிக் காமலேயே, தனியாரையும், அந்நியப் பல்கலைக் கழகங்களையும் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் செயல்பட அனுமதிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கும். அத்தகைய உயர் கல்வி நிறுவனங்கள் தங்களின் செலவுகளை ஈடுசெய்யத் தேவையான கட்டணங்களை மாணவர்களிடம் வசூலித்துக் கொள்ளவும், உபரி வருமானத்தை வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள். அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு அரசின் நிதி ஒதுக்கீடு இல்லாமல், தேவையான அளவு கட்டணம் வசூல் செய்யும் தனியாருடனும், அந்நிய பல்கலைக்கழகங்களுடனும் போட்டி போட இயலாமல், அரசு உயர் கல்வி நிறுவனங்கள் பலவீனப்பட்டு, தனியார் கைவசம் செல்லும் சூழல் உருவாகும்.
மாணவர்களின் –- ஆசிரியர்களின் கல்வியியல் சுதந்திரம் பறிக்கப்படு வதுடன் கல்வி வளாக ஜனநாயகம் முற்றிலுமாக இல்லாமல் போகும்.
‘விக்சித்’ என்ற சமஸ்கிருதச் சொல்லின் பொருள் வளர்ந்துவிட்ட (Developed) என்பதாகும். வளர்ந்துவிட்ட இந்தியாவிற்கான கல்வி ஆணையத்தை உருவாக்குவதே இந்த மசோதாவின் நோக்கம். இந்தியா வளர்ந்துவிட்டது உண்மை என்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூறு 41-ன் படி, தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை மக்களுக்குக் கல்வியை அடிப்படை உரிமையாக அரசு வழங்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், வளர்ந்துவிட்ட இந்தியாவிற்கான கல்விக் கொள்கையும், அதை நடைமுறைப்படுத்த இயற்றப்படும் சட்டமும், தனியாரை ஊக்குவிக்கும் அதே வேளையில் அரசு உயர் கல்வி நிறுவனங்களின் முழுச் செலவையும் அரசு ஏற்காது என்று கூறுவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூறு 41 க்கு முரணானது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூறு 246 மற்றும் கூறு 41 ஆகியவற்றுக்கு எதிராக இந்தச் சட்டம் உள்ளதை விவாதிக்கக் கூட்டு நாடாளுமன்றக் குழு பொது விசாரணை நடத்த வேண்டும் என்றும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
கூறு 246 மற்றும் கூறு 41 ஆகியவற்றுடன் இந்திய அரசியலமைப் புச் சட்டத்தின் பல்வேறு கூறுகளுக்கும், அடிப்படைக் கோட்பாடான கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிராக ‘விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் மசோதா’ உள்ளபடியால் இந்த மசோதாவை அரசு திரும்பப் பெற, கூட்டு நாடாளுமன்றக் குழு அரசிற்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
இந்தியா வளர்ந்துவிட்டது என்று ஒன்றிய அரசு சொல்வது உண்மை என்றால், தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை அனைத்து நிலையிலும் கல்வியை மக்களுக்கு அடிப்படை உரிமையாக வழங்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூறு 41 கூறுவதை அரசிற்கு உணர்த்தி, அனைத்து நிலையிலும் கல்வியை மக்களின் அடிப்படை உரிமையாக அரசு அறிவிக்க கூட்டு நாடாளுமன்றக் குழு உரிய பரிந்துரைகளை அரசிற்கு வழங்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது என்று அதன் பொதுச் செயலாளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
