மதம் மாறியவருக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் ஜாதிச் சான்றிதழ் உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

2 Min Read

புதுடில்லி, ஜூலை 9- மதம் மாறியவருக்கு பிசி-முஸ்லிம் என ஜாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணையை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

தூத்துக்குடி தெற்கு இலந்தை குளத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் கடந்த 2015-இல் முஸ்லிம் மதத்துக்கு மாறி, பெயரை சமீர் அகமது என மாற்றிக் கொண்டார். அதன்பின்னர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் பிரிவில் ‘முஸ்லிம் லெப்பை’ எனச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார்.

அவரது மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், முஸ்லிம் லெப்பை எனச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், பி.பி. பாலாஜி அடங்கிய அமர்வு கடந்த ஜூன் 25-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘சென்னை உயர் நீதிமன்றம் 75 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பித்த உத்தரவில், முஸ்லிம் மதத்துக்கு மாறியவுடன் ஒருவர் முஸ்லிம் ஆகிறார் என்று கூறப்பட்டுள்ளது. அவரை ஒரு குறிப்பிட்ட பிரிவுக்குள் அடக்க முடியாது. இந்த உத்தரவு அமலில் இருக்கும்போது, வெறும் அரசாணையால் நீதிமன்ற உத்தரவை மாற்றியமைக்க முடியாது.

முஸ்லிம் மதத்துக்கு மாறியவர்கள் ஏதேனும் ஒரு வகையான இடஒதுக்கீட்டுப் பலனைத் தொடர்ந்து பெறுவதை உறுதி செய்ய மட்டுமே மாநில அரசு இத்தகைய அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு கடந்த 2024 மார்ச் 9-ஆம் தேதி பிறப்பித்த அரசாணை அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்பதால் அந்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது’ என்று தீர்ப்பளித்தனர்.

இதனிடையே, இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்குரைஞர் பி. கருணாகரன் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்ளவில்லை. மதம் மாறியவருக்கு பிசி-முஸ்லிம் எனச் ஜாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணையை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவை விசாரிக்கும்போது தங்களது தரப்பு கருத்தைக் கேட்கக் கோரி சயீது இப்ராஹிம் சார்பில் வழக்குரைஞர் பி.வி. யோகேஸ்வரன், எச். முகமது இஸ்மாயில் சார்பில் வழக்குரைஞர் பக்தி வரதன் சிங் கேவியட் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *