கொள்கை ஒற்றுமை.. கூட்டணி அறம்.. என்பதெல்லாம்… தி.சிகாமணி

11 Min Read

தற்காலத் தமிழ் நாட்டின் இந்தியாவின் அணி மாறும் அரசியல் சூழல் பற்றிய நேரிய விமர்சனப் பார்வையுடன் ‘காக்கைச் சிறகினிலே’ இதழில் வெளியாகியுள்ள இக்கட்டுரையை வாசகர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறோம்.

– ஆசிரியர்

ஆட்சி அமைப்பதற்காகக் கட்சிகளை உடைப்பது, குதிரை பேரம் நடத்துவது போன்றவை தமிழ் நாட்டிற்கு வந்துள்ளது. பாரதிய ஜனதாவின் இந்தப் பாதையை அப்படியே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தனதாக்கி சுவீகரித்துக் கொண்டுள்ளது. சமீப காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த மாற்றம் இது என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு மாத காலத்திற்குள் அய்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளைத் துறந்து விட்டார்கள். த.வெ.க வின் எதிரணியில் இருந்து போட்டியிட்டவர்கள் காங்கிரசைத் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக வெட்கமின்றி த.வெ.க பக்கம் சாய்கிறார்கள். அநேகமாக தி.மு.க தவிர மற்ற மற்ற கட்சிகள் த.வெ.கவின் பிடிக்குச் செல்கின்றன. மக்களை விலைக்கு வாங்கும் நிலையை மாற்றி கட்சிகளை விலைக்கு வாங்கும் தந்திரம் பெரிய மாற்றம் தான்! லாட்டரி மாஃபியா, கார்ப்பரேட்டுகள் பின்னணியில் இருந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இவை கூட்டணி அறம், தர்மம் ஆகியவற்றை கேள்விக் குள்ளாக்கி உள்ளன. கட்சிகளின் உண்மை முகம் தெரிய ஆரம்பித்துள்ளது.

இதில் முதலாவதாக, காங்கிரஸ் கட்சி குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது. டில்லியில் ஜூன் எட்டாம் தேதி நடந்த ‘இண்டியா’ கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் தி.மு. கழகம் பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டணி ஆரம்பித்த காலத்தில் இருந்து எல்லாக் கூட்டங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்று வந்தது. தென் மாநிலத்தில் இந்துத்துவ எதிர்ப்பு நிலைப்பாட்டிலுள்ள ஒரே கட்சி திமு கழகம் தான். ஆனால் அந்தக் கட்சி இந்தக் கூட்டத்தை புறக்கணிக்கும் வகையில் ராகுல் காந்தி செயல்பட்டு விட்டார். இது குறித்து அந்தக் கூட்டத்தில் பல கட்சிகள் கேள்வி எழுப்பின. ‘தமிழ்நாட்டில் இரண்டு அமைச்சர் பதவிக்காக தி.மு.க.வைக் கைகழுவி விட்டு விட்டீர்கள்’ என்று விமர்சித்தார்கள். ஆனால் ராகுல் ஏன் தமிழக வெற்றிக்கழக கூட்டணிக்கு சென்றார் என்பதை விளக்காமல் ‘‘தி.மு.க. கழகம் இப்போதும் முழுமையாக இந்தக் கூட்டணியில் பங்கேற்க முடியும்’’ என்று ஒரு பதிலைச் சொல்லி உள்ளார். தங்களின் பழைய தியாகம், ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு வரலாறு ஆகியவற்றை சொல்லி, இன்றைய தவறுகளை மறைக்கப் பார்த்துள்ளார். ஒரு நாளும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்.எஸ்.எஸ்.க்கு அடி பணிய மாட்டார்கள் என்று சொல்லி உள்ளார். ஆனால் ஏராளமான காங்கிரஸ்காரர்கள்தான் பா.ஜ.க. பக்கம் தாவி வருகின்றனர் என்ற எதார்த்தம் யாவரும் அறிந்ததே. காங்கிரஸ் அடிப்படையிலேயே ஆர்.எஸ்.எஸ். கருத்தியலுக்கு எதிரானது என்று கூறியுள்ளார். ஆனால் மதவெறியாட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் களத்தில் செயலாற்றவில்லை.

மக்களைப் ‘புனித’ப் பசுக்கள் போல் நினைத்து அவர்கள் சரியாகத்தான் முடிவு எடுப்பார்கள். “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’’ என்ற கோஷத்தில் நம்பிக்கை வைக்கத் தேவையில்லை. நரேந்திர மோடி, டொனால்ட் டிரம்ப் தேர்வுகளையும் மக்கள் தான் செய்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ‘தி.மு.க. தலைமை யிலான மதச் சார்பற்ற கூட்டணிதான் ஒற்றுமையான சித்தாந்த உறுதியுள்ள கூட்டணி’ என்ற நிலை இருந்தது. அந்தக் கூட்டணியின் பிம்பத்தை நொறுக்கும் வகையில் ராகுல் காந்தியின் ஆதரவு கோஷ்டி மாணிக்கம்தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி போன்ற பிரமுகர்கள் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வேண்டும் என்று பேசினார்கள். அந்தப் பேச்சை ராகுல் காந்தி எங்கும் கண்டிக்கவில்லை. மிகவும் அக்கறையாக ‘ஜனநாயகன்’ படம் வெளிவராதது குறித்து கண்டனத்தை வெளியிட்டார். திமுகவுக்கு எதிராக நிலை எடுத்தவர்கள் விஷயத்தில் அமைதியாக இருந்து சீர்குலைவு வேலை நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

28 இடங்கள் தேவை என்று நெருக்கடி தந்து அந்த இடங்களை பெற்றது. தமிழ்நாட்டிற்கு தேர்தலுக்கு சற்று முன்பு தான் பிரச்சாரத்திற்கு ராகுல் வந்தார். ஆனால் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து எந்தக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. 2024-இல் காங்கிரசு கட்சியே தனது பிரதமர் வேட்பாளர் என்று ராகுல் காந்தியை அறிவிக்காத நிலையில் அவருக்கு பிரதமர் வேட்பாளர் என்று மு.க.ஸ்டாலின் அங்கீகாரம் கொடுத்தார். ‘என் சகோதரர்’ என்று ராகுல் காந்தி ஸ்டாலினை அழைத்து வந்தார். இப்போது தேர்தலுக்கு முன்பாக பிரச்சாரத்திலும் ‘என் சகோதரர்’ என்று
மு.க. ஸ்டாலினை குறிப்பிட்டு ராகுல் பேசியது வெறும் சம்பிரதாய பேச்சு. ஏனென்றால் தேர்தல் முடிவு வெளியான பின்பு 5 இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, ஓடோடிச் சென்று த.வெ.க.-வுக்கு  ஆதரவைத் தந்தது. இந்த ஆதரவை தருவதற்கு காங்கிரசின் தலைமையின் ஆசிர்வாதம் இருந்துள்ளது.

தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தயவிலும் வெற்றி பெற்றோம் என்ற நிலையில் அவர்களுக்கு ஒரு நன்றியைக்கூடத் தெரிவிக்காமல் காங்கிரஸ் த.வெ.க.பக்கம் தாவியது. இந்த அளவுக்கு பதவி வெறியில் அவர்கள் இருந்திருப்பார்கள் என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. எந்த வகை யிலும் தமிழக வெற்றிக் கழகம் பாசிச எதிர்ப்பில் உறுதிகாட்டவில்லை. ‘‘நாம் பாஜக.வின் பாசிசத்திற்கு எதிராக குரல் கொடுத்தால் தி.மு.க அணுகுமுறை என்ன பாயாசமா?’’ என்று கேட்டு மொத்தமாக ‘பாசிசம்’ என்ற விமர்சனத்தையே சிறுமைப்படுத்தியவர் நடிகர் விஜய். கூட்டணி அறம், தர்மம் என்ற வார்த்தைகளுக்கு எந்தப் பொருளும் இல்லாத வகையில் காங்கிரஸ் நடந்து கொண்டது.காங்கிரஸ் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; பல்வேறு மாநிலங்களிலும் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தாலும் அவர்களுடன் மோதுவது, அவர்களிடம் அதிகமாக இடங்களை கேட்டு நெருக்கடி கொடுப்பது, அதிக இடங்களை பெற்றும் தோல்வியை பல இடங்களில் தழுவுவது என்பதுதான் நடந்து வந்தன.

அகில இந்திய அளவில் பாஜகவை எதிர்க்க மாநிலக் கட்சிகள் காங்கிரசுக்கு தேவை. ஆனால் மாநில அளவில் மாநிலக் கட்சிகளுடன் போட்டியாளராகவே காங்கிரஸ் செயல்பட்டு அவர்களை பலவீனப்படுத்தும் வேலையை செய்து வந்தது.

பீகாரில் தேஜஸ்வியை முதலமைச்சர் வேட்பாளர் என்று அங்கீகரிக்காமல் இழுத்து அடித்து வந்தது. கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்ற நிலையை உருவாக்கியது. அங்கும் சரியான முறையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி செல்லவில்லை. உத்தரப் பிரதேசத்திலும் அகிலேஷ் உடன் அவருக்கு மோதல் ஏற்பட்டுவிட்டது. அகிலேஷ்க்கு அதிருப்தி இருந்த போதிலும் இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார். அதேபோல் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடன் காங்கிரசுக்கு மோதல். அரவிந்த் கெஜ்ரிவால் இந்தக் கூட்டத்திற்கு வரவில்லை. ஓமர் அப்துல்லா வந்திருந்தார். காங்கிரஸ் கட்சிதான் அனைவரையும் இணைக்கும் ஒட்டும் சக்தி, பசை என்று பேசினார். காங்கிரஸ் எல்லாப் பகுதிகளிலும் ஓரளவு செல்வாக்குள்ள கட்சி என்ற போதிலும் காங்கிரசார்கள் மாநில அளவில் உறுதியான பாஜக எதிர்ப்பில் இல்லாதது  அந்த கட்சியின் தோல்விக்கு ஒரு காரணம். மக்கள் பிரச்சினைக்காக அவர்கள் களத்தில் போராட்டம் நடத்துவதில்லை.

ராகுல் அரசியலமைப்புச் சட்டம், கூட்டாட்சி, பன்மைத்துவம் பற்றி ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக் கிறார் என்றால் உள்ளூர் காங்கிரசார்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாதவர் களாக உள்ளனர். அவர்களின் செயல்பாடு மென்மையான இந்துத்துவா போக்கில் அமைந்திருக்கிறது. மாநில உரிமை பற்றிய காங்கிரஸின் பேச்சு கூட உதட்டளவு பேச்சு என்று அம்பலமாகி வருகிறது. காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்தபோது மாநிலங்களை கிள்ளுக் கீரையாக நடத்தியதற்கு பிராயச்சித்தம் தேடுவது போல் மாநில உரிமையைப் பேசியதும் நடிப்புதான் என்று தெரிகிறது.

2024 தேர்தலில் கூட்டணிக்கு காங்கிரஸ் கூட்டணி அனேகமாக வெற்றி பெற்றுவிட்டது என்று ராகுல் காந்தி பெருமைப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளை பாஜக கைப்பற்றி விட்டது. தேர்தல் மூலம் வெற்றி பெற்று விடலாம் என்று சமாஜ்வாதி கட்சி, திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதளம் ஆகியவை நம்புகின்றன. ஆனால் வாக்கு இயந்திர தில்லு முல்லு மூலமும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது என்பதை இவர்கள் உணரவில்லை என்றதோடு பா.ஜ.கவின் பெரும்பான்மையை குறைந்து விட்டோம் என்கிறார் ராகுல்.

அவர் அன்றைய நம்பிக்கை

அமலாக்கத்துறை சோதனைகள் மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டி பாஜகவில் சேர்த்து வெற்றியை ஈட்டியது என்று புகார் சொன்ன ராகுல் காந்தி, கேரளத்தில் என்ன செய்தார்? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசிய பேச்சு யாரும் எதிர்பாராதது. ‘‘பினராய் விஜயனை ஏன் அமலாக்கத்துறை நெருங்கவில்லை? பினராயுடன் பாரதிய ஜனதாவுக்கு நெருக்கம் உள்ளது; ரகசிய உறவு உள்ளது’’ என்று பேசினார். இதைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி ஆள் காட்டி வேலையை செய்தார் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ் முகத்தில் அறைவது போல ‘இண்டியா’ கூட்டணிக் கூட்டத்தில் பேசினார். ஒரு காலத்தில் ‘வெறுப்பு சந்தையில் அன்பு கடை விரிக்கிறோம்’ என்று பேசியவர் ராகுல் காந்தி. அப்படிப் பேசிவிட்டு பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் ஆரத்தழுவினார். ஆனால் இப்போது பினராய் விஜயனை தன்னால் ஆரத் தழுவ முடியாது என்கிறார். அதேசமயத்தில் மாநிலக் கட்சிகளுடன் மோதுவது என் நோக்கம் அல்ல; பாஜகவுக்கு எதிராக அனைவரையும் ஒருங்கிணைப்பது தான் என் நோக்கம் என்றும் முரண்பட்டு பேசுகின்றார்.

காங்கிரஸ் மீது அமலாக்கத்துறை ஏவி விடப்பட்ட போதெல்லாம் இடதுசாரிகள் பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்தார்கள். ஆனால் பினராய் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய போது காங்கிரஸ் அமைதி காத்தது. இந்தப் போக்கு எல்லாம் எந்த வகையில் ‘இண்டியா’ கூட்டணிக் கட்சிகளை ஒற்றுமையுடன் இருக்க வைக்க உதவும்? ‘இண்டியா’ கூட்டணியில் உள்ள பல கட்சிகள் தேர்தல் வெற்றிக்காக மட்டும் கைகோக்கும் கட்சிகளாக இருக்கின்றன. அவர்களை ஒருங்கிணைக்கும் குறைந்தபட்ச செயல்திட்டம் எதுவும் இல்லை. ‘இண்டியா’ கூட்டணியின் தலைவராக நிதிஷ் குமார் வருவதை அன்று எதிர்த்த மம்தா,  இப்போது ஒற்றுமைக் குறைவின் ஆபத்துகளை தேர்தல் தோல்வி மூலம்  உணர்ந்திருப்பார்.

நாடு முழுவதும் ‘பாரத் ஜோடோ’ பயணம் நடத்தி மக்களின் நன்மதிப்பை பெற்ற ராகுல் காந்தி இப்போது மாறிவிட்டார் போல் தெரிகிறது. நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர் தடுமாறுகிறார் அல்லது திசை மாறுகிறார்!

பல பத்தாண்டுகள் கூட்டணியில் இருந்திருந்த ஒரு கட்சியை கை கழுவி விட்டதற்கு உருப்படியான காரணம் எதையும் ராகுல் காந்தி சொல்லவில்லை. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியை உடைக்க வேண்டும் என்பது பாஜ்கவின் திட்டம். இந்த திட்டத்திற்கு ராகுல் காந்தி தேர்தலுக்கு முன்பும், அதன் பின்பும் உறுதுணையாக இருந்துள்ளார்.

வேடிக்கை என்னவென்றால் விஜய் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ராகுல் வந்திருந்தார். விதிமுறைகளை மீறி மேடையிலேயே அமர்ந்தார். அதுமட்டுமின்றி, பதவியேற்பின் அமைச்சரவையில் இருந்தவர்களுடன் சேர்ந்து ஒளிப்படம் எடுத்துக்கொண்டார்.

காங்கிரசுக்கு வாக்களித்த மக்கள் த.வெ.க எதிர்ப்பு நிலையில் இருந்து வாக்களித்தனர். ஏதோ த.வெ.க கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றது போல் ராகுல் உற்சாகமாக அன்று காணப்பட்டார்.

ஒருவேளை காங்கிரசுக்கு அதிக இடங்கள் கொடுக் காமல் இருந்திருந்தால் த.வெ.க வுக்கு கிடைத்த இடங்கள் குறைந்திருக்கும். த.வெ.க ஆட்சி அமைவதுகூட சாத்தியப்பட்டிருக்காது.

அரசியலற்ற தலைமுறை

மக்களுக்குத் தேவையான திட்டங்களைப் பார்த்து பார்த்து தந்தார் முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின். முன்னுதாரணமான ஓர் ஆட்சியைத் தந்த தி.மு.கழகம் தோல்வியைச் சந்தித்தது தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட தோல்வியும் தான். சினிமா கவர்ச்சி மட்டும் இல்லை; இன்ஸ்டாகிராம் மூளைச் சலவை ஆகியவை த.வெ.க. முன்னுக்கு வருவதற்கு காரணமாக இருந்திருக்கிறது. பாரம்பரியமான அரசியல் மீது இளைஞர்களுக்கு கோபம் இருந்துள்ளது. ‘ஆட்சி மாறினாலும், காட்சி மாறுவதில்லை’ என்ற வகையில் ஊழல் அரசுத் துறை களில் தொடர்ந்து இருந்திருக்கிறது. குடும்ப அரசியல் உயர்நிலையிலும், மாவட்டங்களிலும் இருந்துள்ளது. இதன் மீதான விமர்சனங்களை சரி செய்ய தி.மு.க தவறிவிட்டது. மக்களிடம் ஆட்சிக்கு எதிரான மனநிலை இருந்துள்ளது. இந்த கள நிலவரத்தை அறிவதில் தி.மு.க எப்படி கோட்டை விட்டது என்பது தெரியவில்லை.

தி.மு.க. முழங்கிய நிதிப் பங்கீட்டு உரிமை, கூட்டாட்சிக் குரல் போன்ற சித்தாந்த நிலைப்பாடுகளை மதிக்காமல் மக்கள் தங்கள் அன்றாட பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தந்துள்ளனர். ‘மாற்றம் வேண்டும்’ என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால் முன்னேற்றமான ஒரு சமூகத்தைக் கட்டமைக்கும் வாய்ப்பை மக்கள் தவற விட்டு விட்டனர். மக்களைப் ‘புனித’ப் பசுக்கள் போல் நினைத்து அவர்கள் சரியாகத்தான் முடிவு எடுப்பார்கள். “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு “என்ற கோஷத்தில் நம்பிக்கை வைக்கத் தேவையில்லை. நரேந்திர மோடி, டொனால்ட் டிரம்ப் தேர்வுகளையும் மக்கள் தான் செய்திருக்கிறார்கள்.

சித்தாந்தமற்ற அரசியலற்ற ஒரு தலைமுறை உருவாகியுள்ளது. நம் சமூகம் பெற்ற கல்வி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி போன்றவை ஏதோ தானாக ஏற்பட்டு விட்டது என்று இளைஞர்கள் நினைக்கிறார்கள். தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டு வரலாற்றையும் சமூக நீதி கோட்பாட்டையும் அவர்கள் மதிக்கவில்லை.

ஜாதி ஆதிக்க மனோபாவம் உள்ளவர்கள், பிராமணிய கண்ணோட்டம் கொண்டவர்கள் தி.மு.கவை எதிர்த்தே வருகிறார்கள். அன்று எம்.ஜி.ஆரை… இன்று விஜய்யை – இவர்களே முன்னின்று ஆதரிக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். முதல் விஜய் வரை ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்று சொல்வதைக் கூட ஏற்கும் மன நிலை சிலருக்கு இல்லை. பெண்களுக்கு கட்டணமில்லா பயணத்தை கூட ஆணாதிக்க சக்திகள் ஏற்காமல் இருந்திருக்கக் கூடும். தி.மு.கவின் தோல்விக்கு காரணம் எதுவென்றாலும் அதைக் கண்டறிவது முக்கியம். தற்போது த.வெ.கவுக்கு ஆதரவு தந்த கம்யூனிஸ்டுகள், வி.சி.க போன்றவர்கள் ஆதரவு முடிவை தாங்களாகவே எடுத்தார்களா அல்லது தி.மு.க.வே சொல்லி எடுத்தார்களா என்ற விவாதம் நடக்கிறது. தி.மு.க விடம் கேட்டுவிட்டு சென்றார்கள் என்று மு.கஸ்டாலின் சொன்னது அவர்களின் சுயமரியாதையை பாதித்து விட்டது. இக்கட்சிகள் கோபமாக எதிர்வினை ஆற்றுகின்றன.  அடுத்தடுத்த தேர்தலுக்கு த.வெ.க உறவு தேவை என்ற அடிப்படையில் இந்த கட்சிகள் த.வெ.கவுக்கு ஆதரவு நிலை எடுக்கும் முழு உரிமை உள்ளது. ஆனால் திருமாவளவன் போன்றவர்கள் ‘‘விஜய் ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளை’’ போன்ற வசனம் பேசி சித்தாந்தப் போக்கு காட்டியது ஏன்? தேர்தல் ஆதாயத்திற்கே கட்சிகளை நடத்துகிறோம் என்று இந்தக் கட்சிகள் சொல்லாமல் சொல்லிவிட்டன.

‘தி.மு.க.வுடன் கூட்டணிக்கான சூழல் இன்று இல்லை’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வீரபாண்டியன் பேசுவதும் ‘‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்ற ஒன்று இல்லை. நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. தொகுதி உடன்பாடுதான் செய்து கொண்டோம்’’ என்று மார்க்சிஸ்ட் கட்சியின் சண்முகம் பேசுவதும் த.வெ.க.விடம் துண்டு போடும் முயற்சி. இந்த சந்தர்ப்பவாத நிலை பெரிய வீழ்ச்சி. ‘விஜய்க்குதான் ஒட்டு போட்டோம்’ என்று விளையாட்டாக பேசும் தலைமுறை மட்டுமல்ல; இந்த முற்போக்குக் கட்சிகளின் மாறாட்டம் பெரிய பின்னடைவுக்கு காரணமாக இருக்கப் போகிறது. எனினும் கொள்கைவாதிகள் சோர்வு அடைவதில்லை. நீண்ட கொள்கைப் போராட்டம் தேவைப்படுகிறது. பொய், புளுகு ஏமாற்று அரசியல் நிலைத்து வாழ்ந்ததில்லை.

நன்றி: ‘காக்கைச் சிறகினிலே’ ஜூலை 2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *