குற்றாலம் – பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் தாக்கம்!
குற்றாலத்தில் ஜூன் 25-ஆம் நாள் தொடங்கி நான்கு நாள்கள் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தப் பயிற்சியின் மூலம் நான் மிகவும் பயன் அடைந்தேன். தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் மற்றும் கொள்கைகள் குறித்து தெளிவாக அறிந்துகொள்ள முடிந்தது.
கடவுள், மதம், ஜாதி, தீண்டாமை, பகுத்தறிவு, பெண் உரிமை, சமூக நீதி போன்ற தலைப்புகளில் மாணவர்கள் எளிமையாகப் புரிந்துகொள்ளும் விதமாக பாடம் எடுத்தப் பேராசிரியர்கள் பெரியாரியலைப் பயிற்றுவித்தனர்.
தனிமனித சுயமரியாதைக்கும் – வாழ்விற்கும், நாட்டுரிமைக்கும்- முன்னேற்றத்திற்கும், தந்தை பெரியாரின் கொள்கைகள் எவ்வாறு நியாயம் சேர்க்கிறது என்பதையெல்லாம் இந்தப் பயிற்சிப் பட்டறையின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
நமது தலைமுறையில் பாட்டிகள் படிக்கவில்லை, அம்மாக்கள் படிக்கவில்லை, இன்று பேத்திகள் முதல் தலைமுறை பட்டதாரியாகப் படிக்கிறார்கள்- சாதிக்கிறார்கள் என்றால் அதற்கு இந்த நூறு ஆண்டுகால சுயமரியாதை இயக்கம் தொடங்கி, திராவிட இயக்கங்களின் உழைப்புதான் காரணம் என்பதை ஆசிரியர் அவர்களின் உரையிலிருந்து என் நிலையில் பொருத்திப் பார்த்துக் கொண்டேன். நான்தான் எங்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரி ‘நம் முன்னோர்கள் அறிவில்லாமல் இல்லை. ‘வாய்ப்பு இல்லாததால் படிக்க முடியாமல் போனது’ என்பதை முழுமையாக உணர்ந்தேன். நமக்குக் கிடைத்த இந்தக் கல்வி வாய்ப்பை நம் (பெண்) மேன்மைக்காக எப்படி சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் நினைத்துப் பார்த்து வியந்தேன்.
எனது தந்தை செந்துறை மதியழகன் எனக்கு ஏன் நாட்டில் பெரும்பாலும் இல்லாதப் பெயரான ‘நாத்திகா’ என்று வைத்தார் என்று பலமுறை சிந்தித்ததுண்டு. அது ஒரு கொள்கைக் குறியீடு என்பதை உணர்ந்தேன்
தந்தை பெரியாரைப் பற்றியும், அவருடைய கொள்கைகளைப் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்ளாமல் தவறாகப் பேசுபவர்களுக்கு எவ்வாறு ஆதாரப்பூர்வமாகவும், சரியான முறையிலும் பதிலளிக்க வேண்டும் என்பதையும் இந்தப் பயிற்சியின் மூலம் கற்றுக்கொண்டேன்.
ஜாதி இல்லை என்கிறீர்களே, பள்ளிகளில் ஜாதிச் சான்றிதழ் (Community Certificate) ஏன் கேட்கப்படுகிறது என்பது குறித்து என்னுடன் கல்லூரியில் பயிலும் மாணவர்களே பலமுறை கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கான சரியான விளக்கத்தை பேருரையாளர்கள் மூலம் அறிந்தேன். இனி யாராவது அப்படிக் கேள்வி கேட்டால் என்னால் முழுமையாக தக்கப் பதில் அளிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது.
மேலும், இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் ஏன் கூடாது? ஜாதி ரீதியாக புறந்தள்ள பட்டவர்களை அந்த வழியாகவே முன்னேற்றுவது தானே சரியானவழியாகும், என்பதை தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் ஏன் வலியுறுத்தினார்கள்? ‘‘நோயை குணப்படுத்த எப்படி மருத்துவர் மருந்தை பயன்படுத்துகிறாரோ, அப்படி ஜாதியை இட ஒதுக்கீட்டுக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும்’’ என்று ஆசிரியர் அய்யா அவர்கள் எளிமையாக விளக்கியது சிந்தையை விட்டு அகலவில்லை.
அதேபோல், தந்தை பெரியார் அவர்கள்
70-வயதில் ஏன் மறுமணம் செய்துகொண்டார்? என்று கேள்வியையும் என்னுடன் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பலமுறை கேட்டுள்ளனர். இதற்கு முன்பு அதற்கான தெளிவான பதில் எனக்குத் தெரியவில்லை. பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் எடுத்த வகுப்பின் மூலம். அன்றைக்கு இருந்த வாரிசு உரிமை சட்டம்தான் அதற்கு காரணம் என்ற உண்மையைச் சரியாக புரிந்துகொண்டேன்.
இந்தப் பயிற்சிப் பட்டறை எனது சிந்தனையையும். சமூகத்தின் மீதிருந்த எனது பார்வையையும் மாற்றி இருக்கிறது. இதுபோன்ற பயனுள்ள பயிற்சி முகாமை தொடர்ந்து நடத்தும் ஆசிரியர் அய்யா மற்றும் ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சக மாணவ தோழர்களுக்கு அன்பும், நன்றியும்.
வாழ்க தந்தை பெரியார்!
வாழ்க ஆசிரியர் அய்யா!
ம. நாத்திகா பி.இ., (இரண்டாம் ஆண்டு)
அரசு பொறியியல் கல்லூரி மாணவி, கோயம்புத்தூர்
lll
கல்வி வளர்ச்சியில் தலைவர்கள்….
அண்மையில் குற்றாலத்தில் நடைபெற்ற 47ஆவது ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து “கல்வி வளர்ச்சியும்- தடுக்கும் முயற்சிகளும்” என்ற தலைப்பில் தாங்கள் ஆற்றிய உரை மிகச் சிறப்பு மிக்கது! உரையில் 100 -ஆண்டு கல்விப் பயணத்தில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சிகள், நீதிக்கட்சி செய்த கல்விப் புரட்சி, ஆச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் அதை எதிர்த்து தந்தை பெரியார் போராடி ஒழித்த வரலாறு! வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு எதிராக நீதிமன்றத்திலே தனக்கு இடம் கிடைக்கவில்லை என்று செண்பகம் துரைராஜ் என்கின்ற பெண்மணி மூலமாக நீதிமன்றம் சமூக நீதிக்கு சமாதி கட்டிய வரலாறு, காமராஜர் ஆட்சியில் ராஜாஜி மூடிய பள்ளிகளை இரட்டிப்பாக திறந்த வரலாறுகள், கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு அடைந்த முழு வீச்சான பயன்கள், எத்தகைய சிரமங்கள் நெருக்கடிகள் வந்தாலும் எப்படியாவது நம் பிள்ளைகள் உயர் கல்வியை கற்றாக வேண்டும் என்று ஆதங்கத்தோடும், கவலையோடும் தாங்கள் பேசிய பேச்சு அருமை!
1976-இல் கல்வியை ஒன்றிய அரசு கையில் எடுத்த நிலை – எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது 1979-இல் சமூக நீதிக்கு எதிராக பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்தார். அதை எதிர்த்து ஆசிரியர் அவர்கள் போராடிய நிலையில் அனைத்து, கட்சி கூட்டத்தை கூட்டிய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஆசிரியர் கி. வீரமணி அய்யா அவர்களை மட்டுமே பேச வைத்து அந்த கருத்தை உள்வாங்கிய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் சிறப்பாக இட ஒதுக்கீட்டை 31- லிருந்து 50- உயர்த்திய அந்த வரலாறு!
1990-இல் மருத்துவம் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு கொண்டு வந்த கொடுமையை கலைஞர் அவர்கள் 2006 -இல் ரத்து செய்த வரலாறு! 2014 -இல் நீட் தேர்வு எனும் கொடுமையை அது ஒழிப்பதற்கு பாடுபட்டு வருகிறோம் என்கின்ற செய்தியையும் மிக அழகாக எடுத்து வைத்தீர்கள்!
செயற்கை நுண்ணறிவு என்பது 2030- ஆம் ஆண்டுக்கான கல்வி வளர்ச்சி இலக்குகள் என்ற கல்வித் திட்டத்தை தந்தை பெரியார் 1940-லேயே பேசி விட்டார் என்ற செய்தியும், திராவிடர் இயக்கம் என்றும் கல்வி வளர்ச்சிக்கு போராடிக் கொண்டே இருக்கிறது என்பதையும் மிக சிறப்பாக அழகாக எடுத்து வைத்தீர்கள். அதை பாதுகாத்து பயன்படுத்திக்கொள்ள வேண்டிய பொறுப்பு மாணவர்களாகிய உங்களை சேரும் என்று முத்தாய்ப்பாக முடித்தீர்கள்! உங்களுடைய உரையை ‘விடுதலை’யில் நம்முடைய கழக தகவல் தொழில் நுட்ப அணி மாநிலச் செயலாளர் அருமை தோழர் வி.சி. வில்வம் சிறப்பாக தொகுத்து இருந்தார் என்பதை இந்த நேரத்தில் நினைவு கூற வேண்டும்! நன்றி!
– பெ. கணேசன்
தலைவர், மும்பை திராவிடர் கழகம்
