மதுரை, ஜூலை 8- அரசு வழக்குரைஞர்கள் நியமனங்கள் திறன், நேர்மை அடிப்படையில் நடைபெற வேண்டும், பரிந்துரைகள் அல்லது பிற புறக்காரணிகளின் அடிப்படையில் நடைபெறக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலூர் அருகே கீரனூர் கிராமத்தில் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பை தட்டிக் கேட்டதற்காக முத்துராஜா என்பவரை தாக்கியதாக சின்னத்துரை, மகாராஜன் உள்ளிட்டோரை மேலூர் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கில் இருவரின் பிணை மனுவை மதுரை வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக்கோரி இருவரும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.
அதிகார வரம்பு
இதனை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
மனுதாரர்களின் மேல்முறையீடு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது மனுதாரர் களுக்கு விசாரணை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இது நீதித்துறை ஒழுங்குமுறை தொடர்பான சிக்கலை எழுப்பியுள்ளது.
பிணை விவகாரங்களில் உயர் நீதிமன்றம் மற்றும் அமர்வு நீதிமன்றம் ஆகிய இரண்டும் ஒரே மாதிரியான அதிகார வரம்பைக் கொண்டுள்ளதால், உயர் நீதிமன்றத்தின் அதிகாரவரம்பு குறித்த கேள்வி எழவில்லை.
அதேநேரத்தில் பிணை மறுக்கப் பட்டதை எதிர்த்த குற்றவியல் மேல் முறையீடுகளை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்ற நிலையில், அதே நபர்கள் தாக்கல் செய்த புதிய பிணை மனுக்களை அமர்வு நீதிமன்றம் பரிசீலித்தது சிக்கலானது ஆகும். ஒரு விவகாரம் உயர் நீதிமன்ற பரிசீலனையில் இருக்கும்போது, அதே விஷயத்தை விசாரணை நீதிமன்றம் பரிசீலிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் பிணை கோரியபோது ஏற்கெனவே பிணை மறுக்கப்பட்டதை எதிர்த்த மனுக்கள் உயர் நீதிமன்ற விசாரணையில் இருந்தது.
இதனை மனுதாரர் தரப்பு வழக் குரைஞரோ அல்லது அரசுத் தரப்பு வழக்குரைஞரோ விசாரணை நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை. வழக் குரைஞர்கள் நீதிமன்றத்தின் அலுவலர் ஆவார்கள். முக்கிய உண்மைகளை மறைக்காமல் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
திறன் – நேர்மை
அரசு வழக்குரைஞர் விசாரணை அமைப்புக்கும் நீதிமன்றத்துக்கும் இடையிலான ஒரு முக்கிய இணைப் பாகச் செயல்படுகிறார். வழக்குகளில் நீதிமன்றத்துக்குத் திறம்பட உதவிகள் வழங்கப்படாவிட்டால், நீதி நிர்வாகமே பலவீனமடைகிறது. இதை கருத்தில்கொண்டு திறமையான அரசு வழக்குரைஞர்களை நியமிக்க வேண்டும்.
அதன்படி தகுதியின் அடிப்படையில் நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதையும், நீதிமன்றத்துக்குத் திறம்பட உதவக் கூடிய வழக்குரைஞர்களை அரசு வழக் குரைஞர்களாக நியமிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். இது வெறும் காகித அளவில் சம்பிரதாயங்களாக மட்டும் இருக்கக் கூடாது.
அரசு வழக்குரைஞர்கள் நியமனங்கள் திறன், நேர்மை அடிப்படையில் நடைபெற வேண்டும். பரிந்துரைகள் அல்லது பிற புறக்காரணிகளின் அடிப்படையில் நடைபெறக் கூடாது. அப்படி நடந்தால் மட்டுமே குற்றவியல் நீதி அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க முடியும். மனுதாரர்கள் ஏற்கெனவே பிணை பெற்றுள்ளதால் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டியதில்லை. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
