பட்டாசு விபத்துகளைத் தடுக்க உயர் அதிகாரிகள் குழு அமைப்பு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!

1 Min Read

மதுரை, ஜூலை 8- விருதுநகர் மாவட்டத்தில் அடிக்கடி நிகழும் பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்ய, மாவட்ட இலவச சட்ட உதவி மய்யத் தலைவர் தலைமையில் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பின்னணி மற்றும்
தனி நீதிபதி உத்தரவு

விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த சமுத்திரவள்ளி மற்றும் வேலுத்தாய் ஆகியோரின் கணவர்கள், சிவகாசி எட்டக்காபட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர்.

இதற்கு உரிய இழப்பீடு கோரி இருவரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பட்டாசு ஆலைகளின் உரிமம், பாதுகாப்பு அலுவலர் நியமனம், தொடர் ஆய்வுகள், பாதுகாப்பு பயிற்சி மற்றும் வெடிபொருள் சட்டம், தொழிற்சாலை சட்டம் உள்ளிட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவது தொடர்பாக பல்வேறு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்.

அரசு தரப்பு மேல்முறையீடு

தனி நீதிபதியின் இந்த உத்தரவுகளை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதிகள் அமர்வின்
புதிய உத்தரவு

இந்த மேல்முறையீட்டு மனு நேற்று (7.7.2026) நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், விருதுநகர் மாவட்டத்தில் தொடர் கதையாகி வரும் பட்டாசு விபத்துகளைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.

இதற்காக, மாவட்ட இலவச சட்ட உதவி மய்யத் தலைவர் தலைமையில், தொடர்புடைய அனைத்துத் துறைகளின் உயர் அதிகாரிகளையும் உள்ளடக்கிய சிறப்புக் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டனர்.

இக்குழுவினர் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்து, அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையைத் தள்ளி வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *