உலகப் போரைத் தொண்டர்களுக்கு விளக்கிய பெரியார்– ர.பிரகாசு

2 Min Read

திராவிட இயக்கம் பயன்படுத்தும் ஆயுதங்களில் மிக முக்கியமானது, மாநாடு. அந்த மாநாடுகளின் வரலாற்றை வாரம் ஒன்றாக வாசிப்போம்…

‘திருநெல்வேலி ஜில்லா தமிழர் மாநாடு’ 8.6.1940 அன்று நடைபெற்றது. பெரியார், அண்ணா, பொன்னம்பலனார், நாகை மணி உள்ளிட்டோர் முந்தைய நாள் இரவு, திருச்சி, மணச்சநல்லூரில் இருந்து புறப்பட்டு காரில் நெல்லை வந்தடைந்தனர். காலை 9 மணிக்கு ஊர்வலம் தொடங்கியது. உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து பலரும் பங்கேற்ற அந்த ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று, மாநாட்டுப் பந்தலை அடைந்தது. பந்தலின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்க் கொடியை அண்ணா ஏற்றிவைத்தார். சரியாக காலை 10 மணிக்கு மாநாடு தொடங்கியது.

இராஜம் அம்மையார், மாநாட்டைத் திறந்துவைத்து சொற்பொழிவாற்றினார். ஏ.வி.முத்தையா பிள்ளை வரவேற்புரை யாற்ற இருந்த நிலையில், உடல்நிலை காரணமாக அவர் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக சி.டி.நாயகம் வரவேற்புரை நிகழ்த்தினார். இம் மாநாட்டிற்கு தலைமை வகித்த பெரியார், தனது முன்னுரையில்… ‘நீதிக்கட்சியின் கொள்கை’, ‘தமிழர் வாழ்க்கை’, ‘திராவிட நாகரிகம் – ஆரிய நாகரிகம்’, ‘காந்தியம்’, ‘அமைச்சர்களின் வாக்கு நாணயம்’, ‘காங்கிரஸ்’, ‘காங்கிரஸ் ஆட்சியில் தமிழர் பட்ட கஷ்டங்கள்’, ‘ஆரிய சூழ்ச்சியால் இங்குள்ள தொழிலாளர் களின் நிலைமை’, ‘திராவிட நாட்டுப் பிரிவினை’, ‘அய்ரோப்பா யுத்தம்’ உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து 2 மணி நேரம் விவரித்துப் பேசினார்.

பின்னர், சர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் உருவப்படத்தை சென்னையைச் சேர்ந்த வி.எஸ்.தேவசுந்தரம் அவர்கள் திறந்துவைத்து, பன்னீர்செல்வத்தின் தியாகம், சேவை பற்றி எடுத்துரைத்தார். அத்துடன் காலை நேர நிகழ்ச்சிகள் முடிந்து, மதிய உணவுக்காக மாநாடு கலைந்தது. மீண்டும், மாலை 4 மணிக்கு மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியவுடன் பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

குறிப்பாக, இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டம் அது. “அப்போரில் பிரிட்டன் வெற்றி பெற நம்மாலான உதவிகளைத் தாராள மாகச் செய்ய வேண்டும், இந்தியாவில் நாஜி உளவாளிகளாக நாட்டைக் காட்டிக் கொடுக்கும் கொடும் படையை அடக்க, சர்க்கார் முன்வர வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “பிரிட்டன் இப்போரில் வென்றால், உலகில் ஜனநாயகமும் நாகரிகமும், நீதியும் நிலைக்கும், இந்நாடும் முன்னேறும்” என்று அதற்கு விளக்கமும் அளித்தார் பெரியார்.

அதேபோல, ‘தமிழரின் கிளர்ச்சியை மதித்து, கட்டாய இந்தியை ரத்துசெய்த ஆளுநருக்கு நன்றி – ஹிந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்றுச் சிறைபுகுந்த இயக்கத்திற்கு நன்றி’, ‘ராஜாஜியால் விதிக்கப்பட்ட விற்பனை வரி – புகையிலை வரியை நீதிக்கட்சியின் கிளர்ச்சிக்கு இணங்கி பாதியாகக் குறைத்த ஆளுநருக்கு நன்றி’, ‘திராவிட நாடு’ இந்தியாவுடன் பிணைக்கப் பட்டதால் தனி அரசுரிமையை இழந்து, வடநாட்டுக்குச் சந்தையாகி பாழாகிவருவதால், மீண்டும் திராவிட நாடு பண்டைய சிறப்புடன் விளங்க, திராவிட நாடு தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற காஞ்சி மாநாட்டிற்கு ஆதரவு’, ‘காங்கிரஸ் ஆட்சியில் மதக் கலவரத்தாலும் கலைகளாலும், நாகரிகத்தாலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தனி நாடு (பாகிஸ்தான்) கோருவதற்கு ஆதரவு’ என எட்டு முக்கியத் தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

அதன் பின்னர், அண்ணா, பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் எழுச்சிமிக்க உரைகளுடன் மாநாடு முடிவுற்றது.

… கூட்டம் திரளும்.

நன்றி: ‘முரசொலி’, 7.7.2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *