ராதாபுரம், ஜுலை 6-– திருப்பரங்குன்றம் மலைமீது ஒன்றியஅரசு அதிகாரி ஆய்வு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி என்று தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் இந்தத் த.வெ.க. அரசு தமிழ்நாட்டின் உரிமைகளையும் பெருமைகளையும் 55 நாட்களில் பறிகொடுத்து நிற்கிறது. தமிழ்நாட்டில் நடப்பது த.வெ.க. ஆட்சியா? அல்லது ஆர்.எஸ்.எஸ். ஆட்சியா? தமிழ்நாடு மக்கள் தெளிவு பெறுவார்களா? என முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தனது ‘எக்ஸ்’ வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு முதலமைச்சர் பதவியில் இருந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விலகி 55 நாட்களில் தமிழ்நாட்டு மக்கள் இழந்த உரிமைகளும்,பெருமைகளும் ஏராளம். ஆளுநரின் அதிரடி ஆய்வு, கன்னியாகுமரி மாவட்ட கடலோர மீனவ கிராமத்தில் அணு கனிமச் சுரங்க அனுமதி நீட்டிப்பு. தலைவர் கலைஞர் அவர்களால் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட 3.5 சதவீத இட ஒதுக்கீடு நீதிமன்றம் மூலம் பறிப்பு. பக்ரீத் பண்டிகையின் போது பொது இடத்தில் தொழுகை நடத்தவும், பலியிடவும் நீதிமன்றத் தடை, சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களில் உரிமையைப் பறிக்கும் வெளிநாட்டு நிதி உதவி ஒழுங்குபடுத்தும் சட்டம் (FCRA) கிறித்தவக் கோயில்கள் மற்றும் இஸ்லாமிய தொழுகை கூடங்கள் கட்ட ஒரு மாதத்திற்குள் அனுமதி வழங்கும் சட்டத்திற்கு நீதிமன்றத் தடை (உதாரணம் கோவை சிஎஸ்அய் கிறித்தவ கோயில் கட்ட தடை).
திருப்பரங்குன்றம் மலைமீது ஒன்றிய அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி என்று தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் இந்த த.வெ.க. அரசை தாங்கிப் பிடிக்கும் காங்கிரஸ் இதனை ஏற்கிறதா? தம்பி திருமாவளவன் ஆதரிக்கிறாரா? இடதுசாரி தோழர்கள் அங்கீகரிக்கிறார்களா? அய்யுஎம்எல் தலைவர்கள் சம்மதிக்கிறார்களா? தலைவர் கலைஞர் அவர்களாலும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களாலும் பல பதவிகளை பெற்ற வைகோ இதனைப் பார்த்து மன மகிழ்ச்சி கொள்கிறாரா?
தமிழ்நாட்டில் நடப்பது த.வெ.க. ஆட்சியா? அல்லது ஆர்.எஸ்.எஸ். ஆட்சியா? தமிழ்நாட்டின் உரிமைகளையும்,பெருமைகளையும் 55 நாட்களில் பறிகொடுத்து நிற்கும் தமிழ்நாடு மக்கள் தெளிவு பெறுவார்களா? த.வெ.க.வின் தோழமைக் கட்சிகளே தமிழ்நாட்டு மக்களின் நலன் குறித்து இனியாவது சிந்திப்பீர்களா? அல்லது தொடர்ந்து இந்த அரசுக்கு இன்னமும் முட்டுக் கொடுக்கப் போகிறீர்களா?
இவ்வாறு முன்னாள் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் கூறியுள்ளார்.
அதிர்ச்சித் தகவல்
மேகதாதுவில் அணை கட்டும் பணிகள் தொடக்கமாம்!

கிருஷ்ணகிரி, ஜூலை 6- “மேகதாதுவில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, இரும்பு கம்பிகள் நடப்பட்டு அணை கட்டுமானம் நடப்பது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.” தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கருநாடக மாநிலம் கனகபுரா பகுதி மேகதாதுவில் நேரில் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் ஓசூரில் செய்தியாளர் களிடம் அவர் கூறுகையில், “கனகபுரா, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 10 கி.மீ கீழ் நோக்கி ஆயிரம் அடி ஆழத்தில் அர்காவதி மற்றும் காவிரி ஆறுகள் ஒன்றாக இணையும் இடம் சங்கமம் ஆகும். இப்பகுதி சுற்றுலா தளமாக உள்ளது. சங்கமத்திலிருந்து தமிழ்நாடு நோக்கி காவிரி ஆறு ஓடத் தொடங்குகிற 3ஆவது கி.மீட்டரில் மேகதாது என்கிற இடம் உள்ளது. இங்கு உயர்ந்த இரு மலைக்குன்றுகளுக்கு இடையே குறுகிய இடம் வழியாக தமிழ்நாட்டு எல்லையில் காவிரி நுழையும் இடத்தில் மேகதாது அணை கட்ட திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக தற்போது, மலையடிவார சாலையிலிருந்து 150 அடி ஆழத்தில் ஆற்றின் தளமட்டத்திற்கு செல்ல புதிதாக படிக்கட்டுகள் அமைத்து உள்ளனர். மேலும். தரைமட்டத்தில் அணை கட்டுவதற்கான அளவீடுகள் செய்யப்பட்டு இரும்பு கம்பிகள் கருங்கல் பாறையில் நடப்பட்டுள்ளது. ஏற்கெனவே அடர்ந்த வனப்பகுதி மற்றும் யானைகள் புலிகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தற்போது அணை கட்டுமானத்தை நியாயப்படுத்தும் விதமாக பொது மக்கள் சுற்றுலா செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளது. இதற்கென சிறப்பு பேருந்து மூலம் சங்கமத்திலிருந்து அழைத்து சென்று வருகின்றனர். இது, மேகதாது அணை கட்டுவதற்கு கருநாடக அரசு தயார் நிலையில் உள்ளதை வெளிப்படுத்துகிற விதமாக அமைந்துள்ளது. எனவே ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் வனத்துறை இணைந்து மேகதாது அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்திட முன்வர வேண்டும்.
மேற்கு தொடர்ச்சி மலை வளத்தை பாதுகாப்பதற்கு தொடர்புடைய மாநில முதலமைச்சர்களை கொண்டு பிரதமர் தலைமையில் பாதுகாப்பு குழு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் மேற்கு தொடர்ச்சி மலை வள பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், காங்கிரஸ் கட்சியினர் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என சென்னையில் இருந்து கூறுவதை விட்டுவிட்டு இங்கு நேரில் வந்து என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் உயர்மட்டக்குழு உறுப்பினர் ஓசூர் நடராஜன், திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர் முகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
