சென்னை, ஜூலை 5 ‘அடுத்த ஒரு நூற்றாண்டுக்கான நமது வரலாற்றையும், தமிழ்நாட்டின் புதிய வரலாற்றையும் நாம் ஒருசேர எழுத வேண்டும்’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தேர்தல் தோல்வியால் நான் துவண்டுவிடவில்லை. எனினும், சோர்வு நம்மை அண்டாதவாறு, என் கடமையை உணர்ந்து, நாள்தோறும் அறிவாலயத்துக்கு வரத் தொடங்கினேன். சோதனைகள் நமக்கென்ன புதிதா? அந்த நெருப்பாறுகளை நீந்திக் கடப்போம் வா என்று கம்பீரமாய் எழுந்து நிற்கும் கற்கோட்டையான அறிவாலயத்தின் வாயில் நாள்தோறும் வரவேற்கிறது.
உள்ளே நுழைந்ததும், ‘ஸ்டாலின் எனும் உன்னை இயக்குவது நாங்கள்தான். நீ இயங்குவது எங்களுக்காகத்தான். நம் பயணத்தின் வேகம் கூட வேண்டும். அதற்குப் புதிய பாதையில் நாம் பயணிக்க வேண்டும்’ என விழிகளின் வழியே அன்புக் கட்டளையிட்டு தொண்டர்கள் பலர் வரவேற்கின்றனர்.
நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் என்னைக் காண வருகின்றனர். அவர் களிடம் பேசி, அவர்கள் எண்ணங்களை அறிந்துவருகிறேன். அவர்கள் என்னிடம் சொல்வதெல்லாம், ‘நாங்கள் இருக்கிறோம். நாம் மீண்டும் வருவோம்’ என்பதுதான். இந்தச் சொற்கள் எதிரிகளை ஒருசேர வீழ்த்தும் வலிமையை கொடுக்கின்றன.
ஒருசில இயக்கங்களால் ஒரு தோல்வியைக் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனால் நாம், கொள்கை உறவால் பிணைக்கப்பட்டு, ஒரு குடும்பம் போல் வேரூன்றி வளர்ந்து நிற்கிறோம். அப்படிப்பட்ட நம் இயக்கம் அடுத்த நூறாண்டுகளுக்குப் பயணிக்க வேண்டிய திசையைத் தீர்மானிக்க வேண்டியதும், உங்கள் உணர்வுகளை உள்வாங்கி அதில் புதிய பாதையை அமைக்க வேண்டியதும் எனது கடமை.அதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் கருத்துகள் கேட்டறியப்பட்டன.
உங்கள் எண்ணங்களின்படி கட்சி யின் மறுசீரமைப்புக்காக இளமையும் அனுபவமும் கலந்த மறுசீரமைப்பு ஆலோ சனைக் குழுவையும் அமைத்திருக்கிறேன். திமுகவை போல் அமைப்பு ரீதியாக பலம் கொண்ட வேறு கட்சிகிடையாது என்பதை உணர்த்தும் விதமாக மீண்டெழும்போது மலையென நிற்க வேண்டும்.
அடுத்த ஒரு நூற்றாண்டுக்கான நமது வரலாற்றையும் தமிழ்நாட்டின் புது வரலாற்றையும் நாம் ஒருசேர எழுத வேண்டும். இந்நிலையில்தான் தற்போது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளேன். இருவாரங்கள் அயலகத்தில் இருந்தாலும், அறிவாலயத் தில்தான் என் மனம் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
