மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தல்!
கேந்திரிய வித்யாலயங்களில் தமிழ் புறக்கணிப்புக்குக் கண்டனம்!
என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் மதச்சார்பின்மை நீக்கப்பட்டு, மதவாதக் கருத்துகள் புகுத்தப்படுவதற்குக் கண்டனம்!
வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்கு முறைத் திருத்தத் சட்டத்தைத் (Foreign Contribution Regulation Act) திரும்பப் பெறவேண்டும்!
33% மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாகச் செயல்படுத்துக!
அயோத்தி ராமன் கோயில் நன்கொடை முறைகேட்டு வழக்கை சி.பி.அய். விசாரிக்க வேண்டும்!
நீட்டையும், உயர்ஜாதியினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டையும் (EWS) ரத்து செய்ய வலியுறுத்தி இரு சக்கர வாகன பரப்புரை பயணம்!
நெய்வேலியில் தனியார் மயத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் சட்டத்தை விரைவாகக் கொண்டுவருக!
கட்சிமாறிகளைக் கட்டுப்படுத்தச் சட்டத் திருத்தம் தேவை!
ஜாதிவாரிக் கணக்கெடுப்பைக் குறையின்றி முழுமையாகச் செய்க!
புதிய அரசியல் சூழலில் இயக்கத்தின் நிலைப்பாடு!
சேலம்: திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
சேலம், ஜூலை 4 மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தியும், கேந்திரிய வித்யாலயங்களில் தமிழ் புறக்கணிப்புக்குக்கும், என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் மதச்சார்பின்மை நீக்கப்பட்டு, மதவாதக் கருத்துகள் புகுத்தப்படுவதற்கும் கண்டனங்களைத் தெரிவித்தும், ஜாதிவாரிக் கணக்கெடுப்பைக் குறையின்றி முழுமை யாகச் செயல்படுத்தக் கோரியும், நெய்வேலியில் தனியார் மயத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவது உள்பட 19 தீர்மானங்கள் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
இன்று (4.7.2026) முற்பகல் 10 மணி அளவில் சேலம் – கே.எம்.பி. திருமண மண்டபத்தில் திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் மானமிகு ஆ.வீரமர்த்தினி தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் எண் 1 :
இரங்கல் தீர்மானம்
முன்மொழிதல்: வி.பன்னீர்செல்வம்
தீர்மானம் எண் 2 :
இடைவிடாத பிரச்சாரம், போராட்டக் களம் காணும் தோழர்களுக்குப் பாராட்டு!
இயக்கம் என்பது இயங்கிக் கொண்டே இருப்பது என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் மொழிக்கேற்ப, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகான இரண்டு மாத காலங்களுக்குள் இடைவிடாத பிரச்சாரம், போராட்டம் என தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கழகத் தோழர்களின் உழைப்புக்கும், ஊக்கத்துக்கும் இப் பொதுக் குழு தனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஒகேனக்கல், கல்லக்குறிச்சி, திருவாரூர், லால்குடி-கீழவாளாடி, குற்றாலம் பயிற்சிப்பட்டறைகள், ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளையொட்டி நான்கு மாநிலங்களில் 103 திராவிடர் எழுச்சி நாள் கூட்டங்கள், மேகதாது அணைத் திட்டத்தைக் கண்டித்துத் திருவாரூரில் ஆர்ப்பாட்டம், நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்துத் தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம், நீட் மறுதேர்வு நடத்தி மாணவர் தற்கொலைகளைத் தூண்டுவதைக் கண்டித்து சென்னையிலும், திருவாரூரிலும் மாணவர் கழக ஆர்ப்பாட்டங்கள், எதிர்நீச்சலில் வென்ற பெரியார் கூட்டங்கள், 1000 அறப் போராட்டக் கள வீரர்களின் பட்டியல் திரட்டும் பணிகள் என இடைவிடாது இயங்கும் தோழர்களின் உழைப்புக்கும், இவற்றை மிஞ்சும் வகையில் செயல்வேகம் கொண்டு, தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை, அவர் போட்டுத் தந்த பாதையில் எவ்வித சபலங்களுக்கும் ஆட்படாமல் செய்துமுடிக்கும் பணியில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உழைப்புக்கும் இப் பொதுக் குழு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
முன்மொழிதல்: வழக்குரைஞர் தளபதி பாண்டியன்
தீர்மானம் எண் 3 :
மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட
முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தல்
ஹிந்துப் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த வர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின்னர், அவர்கள் முன்பு அனுபவித்து வந்த பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டு உரிமையை மறுக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள அண்மைய தீர்ப்பு – சமூக நீதியின் அடிப்படைக் கொள்கைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். சமூக மற்றும் கல்வி ரீதியான பிற்படுத்தப்பட்ட நிலை மத மாற்றத்தால் மறைந்து விடாது என்பதால், பாதிக்கப்படும் மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
முன்மொழிதல்: இரா.செந்தூர்பாண்டியன்
தீர்மானம் எண் 4 :
கேந்திரிய வித்யாலயங்களில்
தமிழ் புறக்கணிப்புக்குக் கண்டனம்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத ஆசிரியர் பணியிடங்களைக் கட்டாயமாக நிரப்பும் நிலையில், தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் போது மான அளவில் ஏற்படுத்தப்படாதது மொழிச் சமத்து வத்திற்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானதாகும். தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழ் மொழிக் கல்விக்கு உரிய முக்கியத்துவம் வழங்கி, தமிழ் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக உருவாக்கி நிரப்ப வேண்டும் என்று ஒன்றிய அரசையும், கேந்திரிய வித்யாலயா நிர்வாகத்தையும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. மேலும், ஒரே மொழியை முன்னிறுத்தும் எந்த நடவடிக்கையையும் இப்பொதுக்குழு கண்டிக்கிறது.
முன்மொழிதல்: தா.இளம்பரிதி
தீர்மானம் எண் 5 :
NCERT பாடத்திட்டத்தில் மதச்சார்பின்மை நீக்கப்பட்டு, மதவாதக் கருத்துகள் புகுத்தப்படுவதற்குக் கண்டனம்
இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கோட்பாடு களில் ஒன்றான மதச்சார்பின்மை (Secularism) குறித்த கருத்துக்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (NCERT) பாடப்புத்தகங்களில் இருந்து குறைத்து அல்லது நீக்கும் முயற்சிகளும், அதற்கு மாற்றாக இந்து மத உணர்வுகள், புராணக் கதைகள் மற்றும் அறிவியல் அடிப்படையற்ற மூடநம்பிக்கைக் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் போக்கும் நாட்டின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஆபத்தானதாகும்.
அறிவியல் மனப்பான்மை, பகுத்தறிவு, மனிதநேயம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவை இந்திய அரசமைப்பால் வலியுறுத்தப்படும் அடிப்படை விழுமியங்களாகும். அவற்றைப் பலவீனப்படுத்தி, கல்வியை மதவாத மற்றும் மூடநம்பிக்கை சார்ந்த திசைக்கு இட்டுச் செல்லும் எந்த முயற்சியும் எதிர்கால தலைமுறையினரின் சிந்தனைச் சுதந்திரத்தையும் அறிவியல் வளர்ச்சியையும் பாதிக்கும்.
எனவே, கல்வித்துறையில் காவிமயமாக்கல் மற்றும் மதவாதத் திணிப்பைக் கைவிட்டு, இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பின்மை, அறிவியல் மனப்பான்மை மற்றும் சமூக நீதிக் கொள்கைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை வடிவமைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசையும் NCERT அமைப்பையும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. மேலும், கல்வியை மதவாத மற்றும் மூடநம்பிக்கைக் கருவியாக மாற்றும் அனைத்து முயற்சிகளையும் இப்பொதுக்குழு வன்மை யாகக் கண்டிக்கிறது.
முன்மொழிதல்: தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங்
தீர்மானம் எண் 6 :
வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்கு முறைத் திருத்தத் சட்டத்தைத்
(Foreign Contribution Regulation Act) திரும்பப் பெறவேண்டும்!
இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் (NGOs) வெளிநாடுகளிலிருந்து பெறும் நிதி மற்றும் நன்கொடைகளை ஒழுங்குபடுத்தவும், கண்காணிக்கவும், ஏற்கெனவே உள்ள வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்திற்குத் திருத்தச் சட்டம் ஒன்று. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம் சிறுபான்மை யினரால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்களைக் குறிவைப்பதேயாகும்.
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளை வளர்த்தெடுப்பதில் கிறித்துவ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பை எளிதில் புறக்கணித்துவிட முடியாது.
இன்றைய ஒன்றிய பி.ஜே.பி. அரசைப் பொறுத்த வரையில் சிறுபான்மையினத்தவர் மீதான வெறுப்பு எத்தகையது என்பது நாட்டுக்கே தெரிந்த ஒன்றே!
குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019 (CAA – Citizenship Amendment Act) மற்றும் என்.ஆர்.சி. (National Register of Citizens) போன்ற சட்டங்களும் இதே நோக்கம் கொண்டவையே!
இந்தியா என்பது ஒரே நாடல்ல – ஒரு துணைக் கண்டம்; பல மாநிலங்கள், பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல மதங்கள், தட்ப வெட்ப நிலைகளைக் கொண்டதாகும்.
ஆனால், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேசியம், ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல் என்ற நோக்கில் ஹிந்து ராஜ்ஜியம் அமைப்பு என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் இலக்காகும். இந்தக் கொள்கையைக் கொண்ட ஒன்றிய அரசு, சிறுபான்மை மக்களைக் குறி வைத்துத் தக்குதல் நடத்துவது, அவர்கள் கூறும் ‘‘தேசியத்திற்கே’’ ஊறுவிளைவிக்கக் கூடியது என்று இப்பொதுக் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.
வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி நன்கொடை பெறுதல் போன்றவற்றிற்குச் சட்ட ரீதியான விதிமுறை கள் ஏற்கெனவே இருக்கத்தான் செய்கின்றன. தவறு களைக் களைதல் என்ற சாக்கில் உரிமைப் பறிப்பு – கடும் தண்டனைகளும், அச்சுறுத்தலும் ஏன்?
இதன் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்ட சிறு பான்மை மக்களும், பொது நிலையில் உள்ளவர்களும் இந்தச் சட்டத்தை நாடு தழுவிய அளவில் எதிர்த்து வருவது நியாயமானதும், வரவேற்கத்தக்கதுமாகும்.
அதே அளவுகோல், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்களுக்கு வெளிநாடுகளிலிருந்து குவியும் நன்கொடைகள், வரவுகளுக்கு உண்டா? என்ற கேள்வி எழுகிறதே – வெளிநாடுகளில் இவர்கள் எப்படியெல்லாம் நிதி திரட்டுகிறார்கள், அதைப்பற்றிய கண்காணிப்புகளும், ஒழுங்குமுறைகளும், வரையறைகளும் இல்லை என்பதிலிருந்தே ஒன்றிய பி.ஜே.பி. அரசு கொண்டு வந்துள்ள இந்த FCRA சட்டத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.
‘பி.எம்.கேர் ஃபண்ட்’ என்ற ஒன்றை, ஒன்றிய
பி.ஜே.பி. அரசு உருவாக்கி வைத்துள்ளது. இதற்கு வந்து குவியும் நிதிகளுக்குக் கணக்கு வழக்குக் கிடையாது. வெளிப்படைத்தன்மை என்பது இல்லை. சி.ஏ.ஜி. என்ற இந்தியத் தலைமைக் கணக்குக்கு உட்பட்டதும் இல்லை.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கும் (RTI) உட்பட்டதில்லை.
இந்த இலட்சணத்தில், இந்திய ஒன்றிய அரசு சிறுபான்மையினருக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நன்கொடைகளால் நடத்தப்படும் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அறப்பணிகளை மறை முகமாக முடக்குவது கண்டிக்கத்தக்கது. கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் ஒன்று திரண்டு ஒன்றிய பி.ஜே.பி. அரசின் மதவாதக் கண்ணோட்டத்தோடு கொண்டு வரப்பட்டுள்ள FCRA சட்டத்தை எதிர்த்து முறியடிக்கவேண்டுமாய் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
முன்மொழிதல்: கோவை மாவட்ட மகளிரணி செயலளர் கோவை கலைச்செல்வி
தீர்மானம் எண் 7 :
33% மகளிர் இடஒதுக்கீட்டை
உடனடியாகச் செயல்படுத்துக
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்க ளுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் பிரச்சினை 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கான சட்டத்தை கடந்த 2023 செப்டம்பர் 28-ஆம் தேதியே அரசியலமைப்புச் சட்டத்தின் 106-ஆம் திருத்தமாகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று நிறைவேறிவிட்டது. ஆனால், அதை உடனடியாக நடை முறைப்படுத்தாமல், மூன்று ஆண்டுகளாகத் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
அதற்குப் பதிலாக, அச் சட்டத்தை, மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற இடங்களை அதிகப்படுத்தும் சட்டத்துடனும், தொகுதி மறு சீரமைப்புடனும் முடிச்சுப் போட்டு, தென்னிந்திய மாநிலங்களின் உரிமையைப் பறிக்கவும், எதிர்க்கட்சி களின் வலிமையைக் குறைத்து சர்வாதிகார நாடாக இந்தியாவை மாற்றவும் ஒன்றிய பா.ஜ.க. அரசு சூழ்ச்சி செய்தது. இதனை எதிர்க்கட்சிகள் இணைந்து முறியடித்தன. இதனைச் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பயன்படுத்த பா.ஜ.க. மேற்கொண்ட முயற்சியும் தோற்றுப் போனது. ஏற்கெனவே 454 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மையாக நிறைவேறிய சட்டத்தைச் செயல்படுத்தாமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு முடக்கி வைத்திருப்பது கண்ட னத்திற்குரியதாகும். 78 ஆண்டுகள் சுதந்திரம் அடைந்த ஒரு நாட்டில், சரிபாதி மக்கள் தொகை கொண்ட மகளிருக்கு அரசியல் பிரதிநிதித்துவம் இன்னும் வழங்கப்படவில்லை என்பது வெட்கத்திற்குரிய ஒன்றாகும்.
வேறு சாக்கு போக்குகள் சொல்லாமல், வேறு எதனுடனும் முடிச்சுகளைப் போடாமல், சமூகநீதியுடன் கூடிய பாலின நீதியாக, முதல்கட்டமாக மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும், 2029 நாடாளுமன்றத் தேர்தலிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அடுத்து, இது 50% ஆக உயர்த்தப்பட வேண்டும் என்றும் இப் பொதுக் குழு வலியுறுத்துகிறது. இதனை வலியுறுத்தி, நாடெங்கும் மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் பிரச்சாரங்களும், போராட்டங்களும் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
முன்மொழிதல்: வேலூர் மாவட்டத் தலைவர் வி.இ.சிவகுமார்
தீர்மானம் எண் 8 :
தொகுதி மறுவரையறை என்ற
சூழ்ச்சிப் பொறி
மக்கள் தொகைக்கேற்ப நாடாளுமன்றத் தொகுதிகளை அதிகப்படுத்துவது என்ற பா.ஜ.க.வின் திட்டமும், சட்ட மாக்கும் முயற்சிகள், சூழ்ச்சியும், ஆபத்தும் நிறைந்த ஓர் ஏமாற்று வித்தையாகும். தற்போது இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே நாடாளுமன்றத்தில் விவாதிக்க உரிய நேரம் ஒதுக்க இயலவில்லை; கூடு தலாக 300 பேருக்கு எப்படி நேரம் ஒதுக்க முடியும்? தற்போதிருக்கும் பொருளாதார நெருக்கடியில், கூடுதல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதிகளை எப்படி வழங்க முடியும்? மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு மேற்கொண்ட முடிவைச் சரியாகச் செயல்படுத்திய மாநிலங்களுக்குத் தண்டனை வழங்குவது போல, அவர்களுக்குக் குறைந்த தொகுதிகளையும், ஒன்றிய அரசின் திட்டமான குடும்பக் கட்டுப்பாட்டை செயல்படுத்தாத காரணத்தால், மக்கள் தொகை நிறைந்த மாநிலங்களுக்கு அதிக தொகுதிகளையும் ஒதுக்குவது நியாயமா? தொகுதி மறுசீரமைப்பு என்பதை, எண்ணிக்கையை மாற்றாமல், மாநிலங்களுக்குள்ளேயே செய்ய முடியும் என்ற 2001 ஆம் ஆண்டு மாதிரியைச் செயல்படுத்தாமல் தென்மாநிலங்களின் உரிமையைப் பறிப்பதா? என்பன போன்ற எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல், இந்தியாவை ஒற்றையாட்சியின் கீழ், ஆர்.எஸ்.எஸ். அதிகாரத்தின் கீழ் கொண்டுவரச் செய்யப்படும் இத் திட்டங்களுக்கு திராவிடர் கழகப் பொதுக் குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. தொகுதிகளின் எண்ணிக்கையை 50% அதிகரிக்கிறோம் என்று எப்படி மாய்மாலம் பேசினாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாநிலங்களுக்கிடையே பாரபட்சம் ஏற்படவே செய்யும் என்பதால், இதில் ஏமாந்துவிடக் கூடாது என்று தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் அனைத்துக் கட்சிகளையும் இப் பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.
முன்மொழிதல்: மாநில வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன்
தீர்மானம் எண் 9 :
கட்சிமாறிகளைக் கட்டுப்படுத்தச்
சட்டத் திருத்தம் தேவை
அரசியல் கட்சிகளில் இணைந்து, சட்டமன்றத் திற்கும், நாடாளுமன்றத்திற்கும் மக்களால் தேர்ந்தெ டுக்கப்படும் பிரதிநிதிகள், நினைத்த மாத்திரத்தில் கட்சி மாறிச் செல்வதும், அதற்கு ஈடான பதவிகள் உள்ளிட்ட பலன்களைப் பெறுவதும் ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் அவலங்களாகும். கட்சித் தாவல் தடைச் சட்டம், 1985 ஆம் ஆண்டே கொண்டு வரப்பட்டிருந்தாலும், புதுப் புது வழிகளில் இத்தகைய தாவல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்ததிலிருந்து, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்த வகையில் தான் பா.ஜ.க. ஆட்சியமைத்துள்ளது.
தேர்தலில் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியை விட்டுவிட்டு, வேறு ஒரு கட்சிக்கு ஆதரவளித்து ஆட்சியமைக்க வழிகோலுவதும், கொள்கைகள், பிரச்சினைகளின் அடிப்படையில் அல்லாமல் பத விக்காகவும், பணத்துக்காகவும், வேறு பல சுயநல காரணங்களுக்காகவும் மொத்தமாக ஒரு கட்சியை விட்டுவிட்டு ஓடுவதும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயோ, மாதங்களிலேயோ பதவியை விட்டு விலகி, வேறு ஒரு கட்சியில் இணைந்து மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு பதவியைப் பிடிப்பதுமாகச் சட்டத்தை வளைத்து, நெளித்து ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஒரு கட்சிக்கோ, ஓர் ஆட்சி அமைவதற்கோ ஆதரவளித்துத் தேர்ந்தெடுத்த மக்களை ஏமாற்றும் அவமதிக்கும் செயல் இது! இவர்கள் பதவி விலகுவதால், இன்னோர் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு, மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இதற்குத் தண்டனையாக, அடுத்த 5 ஆண்டுகள் உள்ளாட்சி நிர்வாகங்கள் உள்ளிட்ட எந்தத் தேர்தலிலும் அவர்கள் நிற்க முடியாத வகையிலும், தேவையின்றி இடைத்தேர்தலைத் திணித்ததற்காக, அச் செலவுகளை ஈடுகட்டத் தண்டம் கட்டும் வகையிலும் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும். மேலும், முக்கிய தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியம் என்றும் இப் பொதுக் குழு வலியுறுத்துகிறது.
முன்மொழிதல்: புதுச்சேரி மாவட்டச் செயலாளர் தி.இராசா
தீர்மானம் எண் 10 :
அயோத்தி ராமன் கோயில் நன்கொடை முறைகேட்டு வழக்கை
சி.பி.அய் விசாரிக்க வேண்டும்!
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் அரசியல் முதலீடாக, பாபர் மசூதியை இடித்து, அயோத்தியில் அதே இடத்தில் கட்டப்பட்ட ராமன் கோயில் உண்டியல் வசூலில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலில் இது குறித்துப் பேச மறுத்தவர்கள், பின்னர் உ.பி. அரசின் மூலமே ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளனர். இது போதாது. நடந்திருக்கும் முறைகேட்டில் உள்ள பெரும் தொடர்புகளை மூடி மறைக்கும் ஆபத்து இருப்பதாக எழும் சந்தேகத்தைப் போக்கும்வகையில், இவ் வழக்கு சி.பி.அய் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். எந்த நிர்பந்தங்களுக்கும் ஆட்படாமல் வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்று இப் பொதுக் குழு வலியுறுத்துகிறது.
முன்மொழிதல்: பேரா.பூ.சி.இளங்கோவன்
தீர்மானம் எண் 11 :
பொருளாதார ரீதியிலான (EWS) இடஒதுக்கீட்டு மோசடி முற்றாக
ரத்து செய்யப்பட வேண்டும்!
இந்திய அரசியலமைப்பின் அடிக்கட்டுமானங்க ளுக்கு மாறாக, இடஒதுக்கீட்டுக்குப் பொருளாதார அளவுகோலைத் திணித்து, அதிலும் உயர்ஜாதியினருக்கு மட்டும் பயன்பெற வழிவகுத்து உருவாக்கப்பட்டதே, 10% பொருளாதாரத்தில் நலிந்த அரிய வகை ஏழைகளுக்கான இடபிள்யூஎஸ். (EWS) என்பதாகும். 50%க்கு மேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்ற தங்கள் தீர்ப்பையே தளர்த்திக் கொண்டு இதற்கு மட்டும் விதிவிலக்கு கொடுத்தது நீதிமன்றம். உயர்ஜாதியினரின் வழக்கமான தகுதி – திறமை என்ற கூப்பாடுகளை விடுத்து, தங்களுக்கான இடஒதுக்கீட்டில் மட்டும் மிகக் குறைந்த மதிப்பெண்களே போதும் என்பதை ஏற்றுக் கொண்டனர்.
இதன் அடுத்த கட்டமாக, தங்களின் பொருளாதார நிலையையும், வருமானத்தையும் குறைத்தும், மறைத்தும் பல உயர்ஜாதியினர் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். தேர்வுகளில் போட்டியிட்டுத் தேர்ச்சி பெற்றிருப்பது அம்பலமாகியுள்ளது. அத் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு, உரிய விசாரணை நடைபெற வேண்டும் என்பதுடன், இத்தகைய மோசடிகளுக்குச் சந்தேகமில்லாமல் வழிவகுக்கும் பொருளாதார ரீதியி லான இடஒதுக்கீடு என்பதே ரத்து செய்யப்பட வேண்டும்.
பொருளாதார அளவுகோல் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது என்பதையும் இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.
முன்மொழிதல்: வீ.கே.ஆர்.பெரியார் செல்வி
தீர்மானம் எண் 12 :
ஜாதிவாரிக் கணக்கெடுப்பைக் குறையின்றி முழுமையாகச் செய்க!
மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஜாதி வாரிக் கணக்கெடுப்பாக அமைக்க வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கை வேறு வழியின்றி ஒன்றிய பா.ஜ.க. அரசால் ஏற்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காகப் பீகார் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க. இதை ஒப்புக் கொண்டாலும், அதை முழுமையானதாக நடத்தாமல் குளறுபடி செய்வதற்கு முயல்கிறதோ என்ற சந்தேகம் எல்லா மட்டத்திலும் எழுகிறது. ஒடுக்கப்பட்டோரான பட்டியல் ஜாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST) குறித்த விவரங்கள் முழுமையாக எடுக்கப்படுதல் போலவே, பிற்படுத்தப்பட்டோர் குறித்த முழுமையான விவரங்களும் எடுக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளிலும் இடஒதுக்கீட்டுக்கு
அளவிடற்குரிய தரவு (Quantifiable Data) இருக்கிறதா என்று கேட்டு, அதனடிப்படையில் இடஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க மறுக்கும் சூழலில், ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மிகவும் அவசியமானதாகும். மாநிலங்கள் எடுக்கும் சமூகநீதி சர்வேக்கள் மற்ற வகையில் அரசுகள் தகவல் பெற உதவலாமே தவிர, இடஒதுக்கீட்டுக்குப் பயன்படாது. எனவே, இதில் குழப்பங்களை ஏற்படுத்தாமல், நீதிமன்றம் என்னென்ன விவரங்கள் கேட்கிறதோ அதன் அடிப்படை யில் தெளிவான, முழு மையான விவரங்கள் திரட்டப்பட்டு, உரிய காலத்தில் வெளி யிடப்பட வேண்டும் என்றும் இப் பொதுக் குழு வலியுறுத்துகிறது.
முன்மொழிதல்: மதுரை மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம்
தீர்மானம் எண் 13 :
கீழடி அகழாய்வு அறிக்கையில் தேவையற்ற திருத்தம் செய்யக் கூடாது!
திராவிட நாகரிகத் தொட்டிலான கீழடியில் மேற்கொள்ளப்பட்ட முதல் இரண்டு அகழாய்வுகளின் முடிவுகளை, அதன் அகழாய்வாளர் அமர்நாத் இராம கிருஷ்ணா, உரிய தரவுகளுடன் ஒன்றிய அரசின் அகழாய்வுத் துறைக்குச் சமர்ப்பித்து, பல ஆண்டுகள் கழித்தும், அதை வெளியிடாமல் வைத்திருந்தனர். தொடர் வலியுறுத்தலுக்குப் பிறகு, அதில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், அதன் காலத்தைக் குறைத்து மதிப்பிட்டுத் தர வேண்டும் என்றும் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. அதற்கு ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா மறுப்பு தெரிவித்த நிலையில், அகழாய்வுக்குத் தொடர்பற்ற வேறொரு குழுவை அமைத்து, தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முனைந்துள்ளது. திராவிட நாகரிகத்தின் காலத்தைக் குறைத்துக் காட்டுவதும், அதனுடன் கற்பனைக் கதை களைக் கலந்து சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று திரிப்பதும், கீழடி நாகரிகத்தின் தொன்மைச் சிறப்பை மறைக்க முயல்வதும் திராவிடர் வரலாற்றின் மீதான ஆரியத்தின் பண்பாட்டுப் படையெடுப்புகளே! இவற்றை ஒருபோதும் மானமுள்ள தமிழர்களால், திரா விடர்களால் ஏற்க முடியாது. உரிய அறிவியல் சான்றுகளோடு அமைந்துள்ள கீழடி அக ழாய்வு அறிக்கையைத் திருத்தங்களின்றி உடனடியாக வெளியிட வேண்டும். வர லாற்றைத் திரிக்க முயன்றால், தமிழ்நாடு போராட்டக் களம் காண வேண்டியிருக்கும் என்றும் இப் பொதுக் குழு எச்சரிக்கிறது.
முன்மொழிதல்: கடலூர் மாவட்டத் தலைவர் தண்டபாணி
தீர்மானம் எண் 14 :
நெய்வேலியில் தனியார் மயத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைப் படிப்படியாகத் தனியார் மயமாக்கும் நடவடிக்கையைக் கண்டித்தும், ஒன்றிய அரசு விற்க முடிவு செய்துள்ள 3% பங்குகளைத் தமிழ்நாடு அரசே முழுமையாக வாங்கிட வலியுறுத்தியும் நெய்வேலியில், வரும் ஜூலை 7 செவ்வாய்க்கிழமையன்று காலையில், தமிழர் தலைவர் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
முன்மொழிதல்: மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி
தீர்மானம் எண் 15 :
பிரச்சாரம்! பிரச்சாரம்!! பிரச்சாரம்!!!
(அ) இந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமூகநீதிப் போராளி ஜோதிபாபூலே அவர்களின் 200 ஆம் ஆண்டு விழாவையும், சாவித்திரிபாய் பூலே அவர்களின் 195 ஆம் ஆண்டு பிறந்த நாளையும் திராவிடர் கழ கத்தின் சார்பில் “சமூகநீதி மாநாடு” ஆக நடத்தி, அனைத்து இந்திய அளவில் சமூக நீதித் தலைவர்களை ஒருங்கிணைக்கும் மாபெரும் விழாவாகத் தஞ்சையில் இவ்வாண்டு நவம்பரில் நடத்துவது என்று முடிவு செய்யப்படுகிறது
(ஆ) வைக்கம் தெருக்களில் ஒடுக்கப் பட்டோரை அனுமதிக்க மறுத்த ஸநாத னத்தை எதிர்த்துப் பெரியார் நடத்திய போராட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சுயமரியாதை இயக்கம் நடத்திய கோயில் நுழைவுப் போராட்டங்களின் தொடக்கம் திருவண்ணாமலையில் நடந்ததாகும். 1927-ஆம் ஆண்டு நடைபெற்ற இக் கோயில் நுழைவுப் போராட்டத்தின் நூற்றாண்டு விழா இவ்வாண்டு தொடங்குகிறது. அதனையொட்டி, அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் என்ற நிலையை எல்லா கோயில்க ளுக்கும் விரிவுபடுத்தவும், கோயில்களில் இருந்த தீண்டாமை நீக்கப்பட்டதை எடுத்து விளக்கவும் பிரச்சாரங்களைப் பல வகையில் திட்டமிட்டு நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது..
(இ) சிந்துவெளி நாகரிகத்தைக் கண்டு உலகுக்குச் சொன்னதன் மூலம், திராவிட நாகரிகத்தின் பரப்பும், வரலாறும் எத்தகையது என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் விளக்கக் காரணமான சர்.ஜான் மார்ஷலின் 150-ஆம் ஆண்டையொட்டி, சிந்துவெளி நாகரிகம் அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 20 அன்று தமிழ்நாடு முழுவதும் “திராவிடப் பண்பாட்டுப் பாதுகாப்பு நாளாக” நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
முன்மொழிதல்: வழக்குரைஞர் பா.மணியம்மை
தீர்மானம் எண் 16 :
இரு சக்கர வாகனப் பரப்புரை பயணம்!
‘நீட்’ திணிப்பையும், சமூகநீதியை ஒழிக்கும் பொருளாதார இடஒதுக்கீட்டையும் (EWS) ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணியின் சார்பில் இரு சக்கர வாகனப் பரப்புரைகளை ஜூலை இறுதி வாரத்தில், ஏழு வெவ்வேறு மய்யங்களில் இருந்து தொடங்கி நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
முன்மொழிதல்: மாநில தகவல் தொழில்நுட்பக் குழு வி.சி.வில்வம்
தீர்மானம் எண் 17 :
சமூக ஊடகப் பயிற்சிப் பட்டறை
சமூக ஊடகங்களே இன்றைய கருத்து ருவாக்கக் களங்களாக இருப்பதுடன், இளைஞர்களின் நேரத்தைப் பெரிதும் கொலை செய்யும் ஊடகமாக இருக்கும் சூழலில், உண்மைச் செய்திகளைப் புரிந்துகொள்ளவும், சமூக ஊடகங்களைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தவும், உரிய எச்சரிக்கைகளுடன் அவற்றை அணுகவும் இளைஞர்களைப் பயிற்றுவிக்கும் வகையில் நாடெங்கும் 100 பயிற்சிப் பட்டறைகளை இன்றைய 15 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள் (பாலின பேதமற்று) அனைவருக்கும் உடனடியாகத் தொடங்கி நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
முன்மொழிதல்: ஓசூர் வனவேந்தன்
தீர்மானம் எண் 18:
ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் சட்டத்தை விரைவாகக் கொண்டுவருக!
தமிழ்நாட்டில் ஜாதி மறுப்புக் காதல் திருமணம் செய்வோர் ஆணவப் படு கொலைகளுக்கு உள்ளாகும் கொடுமை கவலையளிக்கும் வகையில் அண்மைக் காலத்தில் அதிகரித்திருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 8 ஆணவப் படுகொலைகள் நடைபெற்றுள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் கூட மயிலாடுதுறையில் இளம் வயதில் இத்தகைய கொடுமை நடந்து விசாரணையில் உள்ளது. ஆணவப் படுகொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்பது நெடுநாள் கோரிக்கையும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலும் ஆகும். அதனை வலியுறுத்தி, கடந்த 2025 அக்டோபர் 4 ஆம் நாள் செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றி வழங்கியபோது, அதனை அடுத்த 13 நாட்களில் செயல்வடிவமாக்கி, ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைகளை வழங்க நீதியரசர் கே.என்.பாஷா தலைமையில் ஆணையத்தை அமைத்து அப்போதைய முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தர விட்டார். அந்தக் குழுவின் பணிகளை விரைந்து முடித்து, ஆணவக் கொலைகள் நடக்காமல், காதலர்களைப் பாதுகாக்கவும், மிரட்டுதல், விரட்டுதல், தாக்குதல், கொலை செய்தல் உள்ளிட்டவற்றுக்குக் கடும் தண்டனைகளை வழங்கும் அளவிலும், காவல்துறையின் நுண்ணறிவுப் படை மூலம் முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தக்க வழிமுறைகளுடன் கூடிய சட்டம் விரைந்து நிறைவேற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசைத் திராவிடர் கழகப் பொதுக் குழு வலியுறுத்துகிறது.
முன்மொழிதல்: கழகத் தலைவர் தலைவர்
தீர்மானம் எண் 19:
புதிய அரசியல் சூழலில்
இயக்கத்தின் நிலைப்பாடு!
அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட திராவிடர் கழகம், தேர்தலில் நின்று, பதவிகளைப் பெற்று இயங்கும், ஓர் அரசியல் கட்சி அல்ல.
மாறாக, தேர்தலில் நிற்காவிட்டாலும்கூட, தேர்தலில் மக்களுக்கு வழிகாட்டும் இயக்கம்.
காலங்காலமாக, ஜாதி, வருணாசிரம முறையாலும், சமூகநீதி மறுக்கப்பட்டதாலும், மூடநம்பிக்கைகளாலும், மண்ணுக்குரிய நமது மக்களின் பிறப்புரிமைகளை மறுத்தும், பண்பாட்டுப் படையெடுப்புமூலம், எப்படியோ கைப்பற்றிய ஆட்சிகளை அமைப்பதன்மூலமும் நம் மக்களுக்கு உண்மை சமத்துவ உணர்ச்சியும், பகுத்தறிவும் ஏற்படாமல் வைக்கப்பட்டிருந்தனர். ஜனநாயக வாய்ப்புகள் வந்த பின்னும் ஜாதி வெறி, மதவெறி, பதவி வெறி காரணமாக, பிறவி இழிவு உரிமைப் பறிப்பினை மறந்தும், சுயமரியாதை உணர்ச்சி மரத்துப் போயும் இருந்த நம் மக்களைத் தட்டியெழுப்பி, அவர்களை உரிமை பெற்ற மக்களாக்கிட தேர்தல் முதலிய எல்லா வகையான வாய்ப்பு களையும் பயன்படுத்தி, மக்களுக்கு அறிவு கொளுத்தும் ஒரு தனித்தன்மையான இயக்கம்.

ஆட்சிகள் மக்களது சமத்துவத்தையும், இழந்த உரிமைகளையும் மீட்டெடுக்கக் கூடிய ஆட்சிகளாக அமையவேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்திடும் ஓர் இயக்கம்.
தேர்தலில் திராவிடர் கழகத்தின் ஆதரவு பெற்றவர்கள் சிற்சில கட்டங்களில் தோல்விகளைச் சந்தித்திருந்தாலும், அந்தத் தோல்விகளையே தந்தை பெரியார் கொள்கையின் வெற்றியாக மாற்றிக் காட்டிடும் மாற்றத்தையும் பெற்று, கழகத்தின் பணி தொடர்ந்திடும்.
தேர்தல் தோல்விகளுக்கும் – கொள்கைத் தோல்விகளுக்கும் பெருத்த மாறுபாடு உண்டு என்பதைப் புரிய வைத்து, தனது லட்சியப் பணியைத் தொடர வழிகாட்டியவர் தந்தை பெரியார் அவர்கள்.
தி.மு.க. கூட்டணியை, தி.மு.க.வின் கொள்கைத் தாய்க் கழகம் என்பதாலும், அதன் ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சரித்திர சாதனைகளுக்காகவும் நாம் ஆத ரித்துப் பிரச்சாரம் செய்தும், மீண்டும் தி.மு.க.வுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பைத் தமிழ்நாட்டு வாக்காளர்கள் தராமல், அதன் பெரும் சாதனைகளைப் புறந்தள்ளி, சில வேதனைகளையோ அல்லது மாற்றம் என்பதற்காகவோ திரு.ஜோசப் விஜய் அவர்க ளது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்தனர்.
அதேநேரத்தில், அக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையுடன் (Absolute Majority) ஆட்சி அமைக்கும் வாய்ப்பினை வழங்காமல் 108 இடங்களையே தந்து தீர்ப்பளித்தனர்.
குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரால், மறைமுகமாக தமிழ்நாடு வன்மையாக எதிர்த்துவரும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் ஆட்சி என்ற மதவாத ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்ற ஒரு காரணம் கூறி, தி.மு.க. கூட்டணியிலிருந்த சில கட்சிகள் ஆதரவு தந்து, அதன்மூலம் விஜய் அவர்களது கட்சி அறுதிப் பெரும்பான்மை அடைந்து, ஓர் ஆட்சியை அமைக்கும் சூழல் ஏற்பட்டது. தி.மு.க.விற்கு தனித்த எதிர்க்கட்சியாக அமர்ந்திடும் வாய்ப்பினை மக்கள் தந்தனர்.
பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் பெரியாரைப் பழித்த சில ஆரியக் கூலிகளுக்கும் பாடம் கற்பிக்கும் வகையில் அறவே ஒதுக்கியும் மக்கள் தீர்ப்பளித்தனர்.
இந்நிலையில், நமது இயக்கமாம் திரா விடர் கழகத்தின் நிலைப்பாடு எப்படி அமைய வேண்டும் என்பதை ஆழமாகச் சிந்தித்தால், பெரியார் தந்த புத்திதான், நமக்குக் கலங்கரை வெளிச்சமாகும்!
தேர்தல் அரசியல் கட்சிகள் வழமையாக, ‘‘எங்களுக்கு நிரந்தர எதிரிகளும் இல்லை; நிரந்தர நண்பர்களும் கிடையாது’’ என்று கூறுவதுண்டு.
ஆனால், நமது நிலையோ, அதற்கு நேர் எதிரானது.
‘நம் இயக்கத்திற்கு நிரந்தர கொள்கை எதிரிகளும் உண்டு; நிரந்தர கொள்கை உறவு களும் உண்டு’ என்பது உறுதி செய்யப்பட்ட உண்மையாகும்.
புதிதாக அமைந்துள்ள முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களது தலைமையில் அமைந்துள்ள ஆட்சிக்குத் தந்தை பெரியார் ஒரு கொள்கைத் தலைவர் என்று பிரகட னப்படுத்தப்படுகிறது.
அது செயல்பாடுகளிலும், கொள்கை நிலைப்பாட்டிலும் எந்த அளவுக்கு நடை முறையில் வருகிறது என்பதைப் பொருத்தும், எப்போதும் எந்த ஆட்சியாக வந்தாலும், அவர்களிடம் கொள்கை ரீதியாக ஆதரவு காட்ட வேண்டியவற்றை ஆதரிக்கவோ, எதிர்க்க வேண்டியவற்றை எதிர்க்கவோ, தயவு தாட்சயண்யமின்றி சுட்டிக்காட்டவோ தயங்காத ஓர் இயக்கம் இது!
தி.மு.க.வுடன் திராவிடர் கழகத்திற்கு உள்ள உறவு, ‘தாய் – பிள்ளை உறவு!’ அந்த உறவு தொடர்ந்து இருக்கும். அதே நேரத்தில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் யாராயினும், நமக்கு எப்போதும் உள்ள கொள்கைப் பார்வையே தொடரும்.
நட்பில் சமரசம் உண்டு.
கொள்கையில் சமரசம் இல்லை!
பிரச்சாரமும், போராட்டமும் திரா விடர் கழகத்துடன் பிரிக்க முடியாத இரட்டையர்கள் என்ற முறையில் வெறும் போராட்டத்திற்காக எந்தப் போராட்டமும் நடத்தமாட்டோம். கொள்கைப் பாதுகாப்பிற்குப் போராட்டம் நடத்திட தயங்கமாட்டோம் –அது மாநில அரசானாலும், ஒன்றிய அரசானாலும்!
நமது கொள்கைப் பயணம் வழக்கம்போல, தொய்வின்றித் தொடரும்.
சந்தர்ப்பவாத அரசியலையோ, சதுர்கச்சேரி அரசியலையோ திராவிடர் கழகம் ஒருபோதும் ஏற்காது!
இலக்கை அடையும் வரை என்றும் ஓயமாட்டோம்; அதற்கு சாயக்கூடாத இடத்தில் சாயவும் மாட்டோம்!
மேற்கண்ட தீர்மானங்கள் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறை வேற்றப்பட்டன.
