தூத்துக்குடி, ஜூலை 4- திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், இணையவழி மூலம் வாங்கிய ரூ.3000 கடனுக்கு கூடுதலாக பணம் கட்டச்சொல்லி வடமாநிலக் கும்பல் அந்த இளைஞரின் படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து மிரட்டி யதால் இளைஞர் தூக் கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி யுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள காயல்பட்டினம்- கீழ லெட்சுமி புரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சகாயராஜ் என்பவரது மகன் சாமுவேல்ராஜ் (வயது 20). இவர் சில நாள்களுக்கு முன் இணையவழியில் தனியார் லோன் ஆப் மூலம் ரூ.3000 கடன் பெற்றுள்ளார்.
தொடர்ந்து கடன் கொடுத்த நிறுவனத்தி லிருந்து வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் சாமுவேல் ராஜை கைப்பேசியில் தொடர்பு கொண்டு அதிக பணம் கேட்டு மிரட்டியதாகவும் அதற்கு சாமுவேல்ராஜ் மறுப்பு கூறியதுடன் கூடுதல் பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த வடமாநில கும்பல் சாமு வேல்ராஜின் நிழற்படத்தை ஆபாச படத்துடன் மார்பிங் செய்து அதில் கடன் பிராடு என பதிவிட்டு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த மார்பிங் செய்யப்பட்ட படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடு வதாக மிரட்டியுள்ளனர். இதனால் சாமுவேல்ராஜ் மிகுந்த மனவேதனையுடன் இருந்தார். இந்தநிலையில் சாமுவேல்ராஜ் 2.7.2026 அன்று இரவு வீட்டிலிருந்து காணாமல் போய்விட்டார்.
தொடர்ந்து அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் கொம்புத்துறை காட்டுப்பகுதியில் உடை மரத்தில் சாமுவேல்ராஜ் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
இணையதள லோன் ஆப் (Loan App) மூலம் மிரட்டல்களை எதிர்கொண்டால், நீங்கள் பயப்படாமல் சட்டப்பூர்வமாக புகார் அளிப்பதே ஆகும்.
சைபர் குற்றங்களுக் கான ஒன்றிய அரசின் அவசர உதவி எண்ணான 1930அய் உடனடியாகத் தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யுங்கள். ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ சைபர் குற்றப் புகார் இணையதளமான National Cyber Crime Reporting Portal என்ற முகவரியில் ஆன்லைன் மூலமாகப் புகார் அளிக்கலாம். ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் RBI Sachet Portal இணையதளத்தில் முறைகேடான கடன் செயலிகள் குறித்து நேரடியாகப் புகார் அளிக்க முடியும். உங்கள் பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட சைபர் க்ரைம் பிரிவிலோ எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கலாம்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழ்நாடு சுகாதார சேவை உதவி மய்யம் – 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மய்யம் – 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
