விராலிமலை தொகுதி காலியாக அறிவிப்பு சட்டப் பேரவைத் தலைவருக்கு எதிராக அ.தி.மு.க. வழக்கு!

சென்னை, ஜூலை 4- சட்டப்பேரவைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார்.

தற்போது அவர் பதவியை விட்டு விலகி தவெக-வில் இணைந்துள்ளார். இந்நிலையில், அவரது பதவி விலகலை ஏற்றுக்கொண்டு விராலிமலை தொகுதி காலியாக உள்ளது என அறிவி்த்த பேரவைத் தலைவரின் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி, அதிமுக கொறடாவான அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், ‘சி.விஜயபாஸ்கர் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனு நிலுவையில் உள்ளது.

அந்த நிலையில் அவரது பதவி விலகலை பேரவைத் தலைவர் ஏற்றது சட்டவிரோதம் என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும். பேரவைத் தலைவரின் இந்த முடிவு அரசியல் சாசன விதிகளுக்கும், இயற்கை விதிகளுக்கும் புறம்பானது.

எனவே, இந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை விராலிமலை தொகுதி காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ள விவகாரத்தில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

-ரிக்‌ஷாக்களை முடக்கும் ‘ப்ளூடூத்’

சீன செயலிகளால் வந்த வினை

ஒன்றிய அரசு  அதிரடி நடவடிக்கை!

புதுடில்லி, ஜூலை 4- வட மாநிலங்களில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இ-ரிக்‌ஷாக்களின் இயக்கத்தை, சீன செயலிகள் மூலம் அடையாளம் அறிய இயலா நபர்கள் ‘ப்ளூடூத்’ வாயிலாகக் கட்டுப்படுத்தி அத்துமீறலில் ஈடுபட்டு வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. வேடிக்கைக்காகத் தொடங்கப்பட்ட இந்த விஷமத்தனம், தற்போது போக்குவரத்து நெரிசலையும், வாழ்வாதாரப் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து ஒன்றிய அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

டிஸ்சார்ஜ்’ சுவிட்ச்…
தடம் மாறும் தொழில்நுட்பம்!

டில்லி, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இ-ரிக்‌ஷாக்களின் பயன்பாடு மிக அதிகம். இதில் பயன்படுத்தப்படும் சீன தயாரிப்பிலான குறைந்த விலை லித்தியம் பேட்டரிகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை எனக் கூறப்படுகிறது.

இதனைச் சாதகமாக்கிக் கொண்ட சில நபர்கள், ‘பிஏடி-பிஎம்எஸ்’ (BAT-BMS) மற்றும் ‘எபோச் லி-அய்யன்’ (Epoch Li-ion) ஆகிய சீன செயலிகளைப் பயன்படுத்தி, 10 முதல் 15 மீட்டர் தூரத்தில் இருந்தபடியே இ-ரிக்‌ஷாக்களின் பேட்டரியை ப்ளூடூத் மூலம் இயக்கியுள்ளனர். பேட்டரியில் உள்ள ‘டிஸ்சார்ஜ் சுவிட்ச்’ (Discharge Switch) மற்றும் ‘சார்ஜ் சுவிட்ச்’ (Charge Switch) ஆகிய ஆப்ஷன்களை ஆஃப் செய்து, ஓடிக்கொண்டிருக்கும் இ-ரிக்‌ஷாக்ளை திடீர் திடீரென முடக்கியுள்ளனர்.

வேடிக்கை விளையாட்டு…
விபரீதமான வாழ்வாதாரம்!

சாலையில் வேகமாகச் செல்லும் வாகனம் திடீரென நிற்பதால் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், கடுமையான போக்குவரத்து நெரிசலும் உண்டாகிறது.

ஓட்டுநர்களின் குமுறல்!

“நாங்கள் பெரும்பாலானோர் இ-ரிக்‌ஷாகளை வாடகைக்கு எடுத்துதான் ஓட்டுகிறோம். வழியில் வண்டியை யாரோ ப்ளூடூத் மூலம் ஆஃப் செய்துவிடுவதால் சவாரி செல்வது பாதிக்கப்படுகிறது. போதிய வருமானம் இல்லாததால் வண்டி உரிமையாளருக்கு வாடகை கூட கொடுக்க முடியாமல் தவிக்கிறோம்.” என்று ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஒன்றிய அரசின் உத்தரவு

இதுதொடர்பாக டில்லி போக்குவரத்துத் துறை அமைச்சகம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்த ஒன்றிய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), சர்ச்சைக்குரிய BAT-BMS மற்றும் Epoch Li-ion ஆகிய இரண்டு சீன செயலிகளையும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து (Google Play Store) உடனடியாக நீக்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி மனித வாழ்வை எளிதாக்க வேண்டும்; ஆனால், அதுவே சாமானியர்களின் வயிற்றிலடிக்கும் ஆயுதமாக மாறும்போது, இதுபோன்ற கடுமையான தடைகள் அவசியமாகின்றன என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

 

தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

சென்னை, ஜூலை 4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், சேலம், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், திருவண்ணாமலை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் தனியார் பேருந்து நிறுவனங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நகர, புறநகர் பேருந்துகளில் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தியுள்ளன.

முன்பு ரூ.10 ஆக இருந்த கட்டணம், ரூ.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் உத்தரவின்றி பயணிகள் கட்டணத்தை உயர்த்துவது சட்டவிரோதமாகும்.

அதேநேரம் இந்த கட்டண உயர்வுக்கு எதிராக போக்குவரத்துத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது அதிர்ச்சியளிக்கிறது.

மக்களின் நலனை கருத்தில் கொண்டு துறை அதிகாரிகள் தனியார் பேருந்து நிறுவனங்களின் கட்டண உயர்வை திரும்பப் பெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *