மனிதர்கள் கூடி வாழுகின்ற சமூக அமைப்பில் குற்றச் சம்பவங்கள் நடப்பதென்பது தவிர்க்கப்பட முடியாதவையே! மனிதர்கள் அனைவருமே குற்றச் செயல்களைச் செய்வதும் இல்லை. எனினும், நாட்டில் பலவிதக் குற்றச் செயல்கள் நடக்கத்தான் செய்கின்றன. அவற்றில் ஈடுபடுவோரைக் கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் காவல் துறையினராவர். அந்தத் துறையினர் நுண்ணறிவோடு, அயர்விலாக் கடமை உணர்வோடு பணியாற்றும்போது குற்றச் செயல்கள் தடுக்கப்படுமென்பதும் உண்மையேயாகும்.
தயக்கம் கொள்வதில்லை
அப்படிப் பொறுப்புமிக்க காவல் துறையினரில் சிலர் மதச் சாயங்களைப் பூசிக் கொள்கிறார்கள். மத அடையாளங்களோடு தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் அந்தச் சிலர் எவ்விதத் தயக்கமும் கொள்வதில்லை. சட்ட விதிகளுக்கு மாறாகக் காவல் நிலையங்களை ஆயுத பூசை கொண்டாடுகின்ற மட நிலையங்களாகக் கூட ஆக்கிக் களிக்கின்றார்கள்.
இவை போன்றதொரு அத்து மீறிய செயல் அண்மையில் ஒரு காவல் நிலையத்தில் நடந்துள்ளது. சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டியில்தான் அக் காவல் நிலையம் அமைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த தேர்தலின்போது இக் காவல் நிலையத்தின் ஆய்வாளராக இருந்த லட்சுமி, வேலூருக்குப் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். 3 துணை ஆய்வாளர்கள், 20 காவலர்கள் இருந்துள்ளனர். இக் காவல் நிலையத்தில்தான் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, ஆடு பலி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பிரியாணி விருந்தையும் நடத்தியுள்ளனர்.
வரிசை கட்டிய விபத்துகள் – குற்றங்கள்
எவற்றுக்காக இவை நடத்தப்பட்டன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமா? சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்தக் காவல் நிலையத்திற்கு உரிய பகுதியில் சாலை விபத்துகள் அதிகம் நடந்து வந்துள்ளதாம். கொலை, கொள்ளை, வழிப்பறிகளும் தொடர்ச்சியாக நடந்துள்ளன. அந்த தீவட்டிப்பட்டிக் காவல் நிலையத்திற்குச் ‘சனியன்’, ‘பீடை’ பிடித்துவிட்டதால்தான் இப்படி நடக்கின்றதென்று அக் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர்கள் முடிவெடுத்து விட்டனர்.
சிறப்பு பூஜை நடத்தி ஆட்டைக் கொன்றனர்
விபத்துகள், குற்றங்கள் நடப்பதைத் தடுப்பதற்கும், தங்களுக்கு ஏற்படுகின்ற பணிச் சுமைகளிலிருந்து விடுபட்டு விடலாமென்று கருதியும், காவல் நிலையத்தைப் பிடித்து ஆட்டி வைக்கின்ற ‘பீடை’, ‘சனியன்’களை விரட்டி அடித்து ஒழித்து விடலாமென்றுதான் இந்தப் பூஜையை நடத்தியுள்ளனர். அதிகாலை 4 மணிக்கு (23.6.2026) நடந்த பூஜையின்போது காவல் நிலைய வாசலில் ஆடு வெட்டிப் பலி கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது வெட்டுப்பட்ட ஆட்டிலிருந்துப் பெருகி வந்த இரத்தத்தை ஒரு பாத்திரத்தில் பிடித்து அதை காவல் நிலையத்தின் 4 திசைகளிலும் தெளித்தனராம். ஆட்டு இறைச்சியை அருகில் இருந்த ஒரு ஓட்டலில் கொடுத்து, பிரியாணி சமைக்கச் செய்து, அதையும் சாப்பிட்டுச் சுவைத்தனராம்.
வழிமுறைகள் இல்லையா?
குறிப்பிட்ட ஒரு பகுதியில் விபத்துகள் அதிகம் நடக்கும்போது அவற்றைத் தடுப்பதற்கு உரிய வழிமுறைகளுக்குப் பஞ்சமா என்ன? வாகனங்களை ஓட்டிக் கொண்டு செல்லும் வாகன ஓட்டிகளுக்குத் தடுமாற்றம் ஏற்படாதவாறு ஊர்களுக்குப் பிரிந்து செல்வதற்கு உரிய வழிகாட்டிப் பலகைகளை வைக்கலாம். ‘விபத்துப் பகுதி’ என்று அறிவிப்புச் செய்து, எச்சரிக்கைப் பலகைகளை வைக்கலாம். அப் பகுதியில் கண்காணிப்புப் படக் கருவிகளை வைத்து அதன் மூலம் காவல் நிலையத்தில் இருந்தவாறே போக்குவரத்து நெரிசல்களைத் தெரிந்துகொண்டு விபத்துத் தவிர்த்த சீரான போக்குவரத்திற்கு வழி செய்யலாம். போக்குவரத்துக் காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். போக்குவரத்து வாகனச் சுற்றுக் காவலை அதிகப்படுத்த வேண்டும். அவர்கள் விழிப்போடு பணியாற்றுவது எப்படி என்று அறிவுரை வழங்கலாம். இன்னும் பல வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன.
குற்றங்களைத் தடுப்பதற்கும், தொடர்ந்து நடக்காது இருப்பதற்கும் எத்தகைய நடவடிக்கைகளைத் தொடரலாம் என்பதற்குக் காவல் துறையினருக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை. அத் துறையினருக்கென்று நவீன வசதிகள் பெருகியுள்ளன. அவற்றைக் கையாளுகின்ற தனித் திறமையும் தமிழ்நாடு காவல்துறையினரிடம் நிரம்ப உண்டு. உலக அளவிலும் கூட தனிச்சிறப்பும், தனித்துவமும் பெற்றவர்கள் தமிழ்நாட்டுக் காவல் துறையினர் என்பதும்கூட உண்மையான ஒன்றே!
இரத்தத்தைத் தெளிப்பதால் பயன் என்ன?
அப்படிப்பட்ட வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றபோது பூஜையும், காவல் நிலைய வாசலில் ஆட்டைப் பலியிடுவதும், இரத்தத் துளிகளைத் தெளித்து வழிபாடு நடத்துவதும் எந்த வகையில் பயன்படும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அனைவருக்கும் பொதுவான ஓர் இடத்தில் மூட நம்பிக்கைக்கு இடம் கொடுப்பது சரியா?
அரசியலமைப்புச் சட்டத்தை மறக்கலாமா?
சட்டத்தை மதித்து, அதனை மீறக் கூடாதவர்கள் என்பதால் காவல் துறையினருக்குப் பொதுமக்களிடம் தனி மரியாதை இருக்கின்றது. இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவில் உள்ளது என்ன? நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், அது வலியுறுத்துகின்ற முக்கியக் கடமை என்ன? சிந்திக்க வேண்டாமா? அரசியலமைப்புச் சட்டம் மூடநம்பிக்கைகளை வளர்க்கச் சொல்லுகின்றனவா? களையச் சொல்லுகின்றதா?
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவ்வப்போது எடுத்துக் காட்டுவது போன்று, அரசியலமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவு – “அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் – மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்தினை வளர்த்தெடுப்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படைக் கடமை” என்பதை வலியுறுத்திக் கூறும்போது சட்டத்தின் காவலர்களே விதிமுறைகளை மீறலாமா?
தீவட்டிப்பட்டிக் காவல் நிலையத்தைச் சார்ந்தவர்கள் பொறுப்பினை அலட்சியப்படுத்தி உள்ளனர். பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளனர். இதனால் கடும் கண்டனம் பல தரப்பினராலும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இதுகுறித்துப் பெரிதும் பகிரப்பட்டுள்ளது. இதனால் காவல் நிலையத் துணை ஆய்வாளர்கள் சேகர், மோகன்ராஜ் ஆகியோரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் விசாரணையும் மேற்கொண்டுள்ளார்.
அக் காவல் துறையினர் இனிமேலாவது இவைபோன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்துவிட்டு – அறிவு ஆசான் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்தைப் பற்றிச் சிந்திப்பார்களாக!
