சாலை வேம்பு சுப்பையனின் கொள்கைப் பிரச்சாரம்! மாணவர் கழகத் தோழர்கள் சந்தித்து நலம் விசாரித்து வியப்படைந்தனர்

4 Min Read

20.6.2026 அன்று மேட்டுப் பாளையத்தில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் முடிந்த பின்பு மேட்டுப் பாளையம் மாவட்டக் காப்பாளர், தள்ளாத வயதிலும் தளராத கொள்கையாளர், பெரியார் பெருந்தொண்டர், அய்யா சாலைவேம்பு சுப்பையன் அவர்களை.. இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.இளமாறன் (மாநில இணைச்செயலாளர், திராவிட மாணவர் கழகம்), தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர்), மு.வீரமணி (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), கா.சு.அரங்கசாமி  (மேட்டுப்பாளையம் மாவட்ட செயலாளர்), தேக்கம்பட்டி சிவகுமார் போன்றோர் சாலைவேம்பு என்ற கிராமத்தில் இருந்த அவரது வீட்டில் சந்தித்து அவருக்குப் பொன்னாடை அணிவிதோம்.

அது வெறும் கடை அல்ல; அந்தக் கிராமத்தின் பகுத்தறிவுக் கருவூலம்.

அந்த வயது முதிர்ந்த தந்தை பெரியாரின் கொள்கை யாளரைப் பார்த்தவுடன் இரு கைகளையும் உயர்த்தி வணக்கம் வைத்தோம். உடனே அவர் ஒரு கையை நீட்டி, “இரு கைகளையும் தூக்காதீங்க; அது தீண்டாமை. ஒரு கையைப் பயன்படுத்துங்கள்” என்று கூறி கைகொடுத்தார் – பின் மகிழ்ச்சியான உணர்வுப் பூர்வமான உரையாடல் தொடர்ந்தது.

கட்டுரை, ஞாயிறு மலர்

“கடவுள் இல்லை – கடவுள் இல்லவே இல்லை” என்று தன் வேட்டியில் கருப்புப் பட்டைக் குப் பதிலாக கடவுள் மறுப்பை பதிய வைத்திருந்ததைப் பார்த்து உடல் சிலிர்த்துப் போனது.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்களுக்கு கைப்பேசியில் இணைப்புப் பெற்றுப் பேசக் கொடுத்தோம். “நான் நல்லா இருக்கேன். உங்களுக்குத்தான் முடியாமல் இருந்து இப்போது நலமாகியிருக்கீங்க போல… ‘விடுதலை’யில் பார்த்தேன். உடம்பைப் பார்த்துக்கோங்க” என்று அன்போடு பேசினார். பின்பு அவரது துணைவியார் சாவித்திரி அம்மாவைப் பற்றியும் கவிஞர் நலம் விசாரித்தார்.

கட்டுரை, ஞாயிறு மலர்

“உண்மை” இதழை எடுத்துக் கொடுத்து, “அதில் 19ஆம் பக்கத்தைப் பாருங்கள்” என்றார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவரைப் பற்றிக் குறிப்பிட்டும், அவரது கடை, வீடு, ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்பு நடந்த கலவரத்தை பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். இருந்தும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பிரச் சாரத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார் பெரியார் பெருந்தொண்டர் சாலைவேம்பு சுப்பய்யன்.

அந்த வகையில் சாலை வேம்பு சுப்பையன் அந்தக் கிராமத்தில் செய்த சமூகப் புரட்சி குறிப்பிடத்தக்கது. தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தேநீர் கடையில் அமர்ந்து குடிக்க முடியாத, இரட்டைக் குவளை முறை இருந்த அந்த ஊரில் அதை மாற்றிக் காட்டியவர் இந்தப் பெரியாரின் பெருந்தொண்டர்.

கட்டுரை, ஞாயிறு மலர்

“அமர்ந்து டீ குடித்தால்தான் டீ கொடுப்பேன்” என்பாராம். அப்போதும் அங்கு வந்து அமர்ந்து டீ குடிக்க மக்கள் தயங்கியபோது, அச்சத் தால் அதற்கு யாரும் தயாராக இல்லாத போது, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ‘சரக்கு’ வாங்கிக் கொடுத்து அவரை அழைத்து வந்து கடையில் அமர வைத்திருக்கிறார் என்பதை அறிந்து வியந்தோம். அப்போது சமூகத்தின் நிலையையும், அதை உடைத்துக் காட்டிய கொள்கை உணர்வையும் நினைத்து உறைந்து போனோம்.

கோவில்களில் காலையில் சாமிப் பாடல் கள் ஒலிப்பதை நாம் கேட்டிருப்போம். ஆனால் அந்த ஊரில் அய்யாவின் கடை யில் தந்தை பெரியார், திராவிடர் கழகம், பகுத்தறிவுப் பாடல்கள் மற்றும் தமிழ் ஈழ விடுதலைப் பாடல்கள் தினமும் ஒலிக்க வைக்கப்பட்டதை அந்த ஊரின் இளைஞர்கள் மகிழ்ச்சியாக கூறினர்.

ஊர் திருவிழா காலங்களில் கருப்புச் சட்டையை அணிந்து, “கடவுள் இல்லை” என்று பதியப் பட்ட வேட்டியை கட்டிக் கொண்டு ஒற்றை ஆளாக ஊர் முழுவதும் சுற்றி வருவாராம். “என்னை அடித்துக் கொன்றாலும் கவலை இல்லை; கொள்கைக்காகச் செத்தேன் என்பது பெருமை” என்பாராம். அந்த வீரம் கருஞ்சட்டைத் தோழர்களுக்கே உரிய தனிச்சிறப் பாகும்.

கட்டுரை, ஞாயிறு மலர்

இப்படி அந்தக் குறுகிய நேரத்தில் இன்னும் எத்தனையோ நிகழ்வுகளை அறிந்தோம். மாநில திராவிட மாணவர் கழகச் செயலாளர் இரா. செந்தூரபாண்டியன், துணைச் செயலாளர் தேவ.நர்மதா, இணைச் செயலாளர் இளமாறன் ஆகிய நாங்கள் மூவரும் அடுத்த மாணவர் சந்திப் புக் கூட்டத்திற்காக கோபி செல்ல வேண்டியிருந்ததால், மனமின்றி அந்தப் பெரியார் பெருந்தொண்டரும், 84 வயது மாணவருமான சாலைவேம்பு சுப்பய்யன் அய்யாவிடம் இருந்து விடை பெற மனமில்லாமல் விடைபெற்றோம்.

“மீண்டும் மாணவர் சந்திப்புக்கு வருவோம் அய்யா; அப்போது வந்து பார்க்கிறோம்” என்றோம். “வாங்க… வாங்க… நல்லா பண்ணுங்க” என்று அவர் உற்சாகப்படுத்தினார். அவரது வாழ்விணையர் சாவித்திரி அம்மா அவர்கள் கடையில் இருந்து கடலை மிட்டாயும் வாழைப் பழங்களையும் கொடுத் தார்கள். மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண் டோம்.

விடைபெறும் போது அறியாமல் மீண்டும் இரு கைகளையும் உயர்த்தி “நன்றி அய்யா, போயிட்டு வரோம்” என்றோம். அவர் உடனே ஒரு கையை நீட்டினார். நாங்களும் கைகொடுத்து விடைபெற்றோம். இனி எல்லோருக்கும் கை மட்டுமே கொடுப்போம் என்ற சுயமரியாதை உணர்வோடு…!

– மு.இளமாறன், மாணவர் கழக இணைச் செயலாளர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *