மகேந்திரகிரி, ஜூலை 3- திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரியில் அதிக எடை ராக்கெட்டுக்கான என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மய்யத்தில் அதிக எடை கொண்ட ராக்கெட்டுகளுக்கான செமி கிரையோஜினிக் என்ஜின் தயாரிக்கப்பட்டு வருகிறது. திரவ ஆக்சிஜன் மற்றும் இஸ்ரோஜின் எரிபொருளில் இயங்கும் இந்த என்ஜினின் இக்னிஷன் சோதனை ஏற்கெனவே இரண்டு முறை நடத்தப்பட்ட நிலையில், தற்போது 3ஆவது முறையாக 5 வினாடிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்டமாக சோதனை நேரத்தை சிறிது சிறிதாக அதிகரித்து பல்வேறு கட்ட சோதனைகளை நடத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதன்மைக் கல்வி அலுவலர்கள்
பணியிடமாற்றம் அரசாணை வெளியீடு
சென்னை, ஜூலை 3- தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலராக ர.பாலமுரளி, திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக அறிவழகன், திருச்சிராப்பள்ளி முதன்மைக் கல்வி அலுவலராக உஷா, கோயமுத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கிருஷ்ணபிரியா, சேலம் முதன்மைக் கல்வி அலுவலராக எல்லப்பன், தொடக்கக்கல்வி இயக்ககத்தின் துணை இயக்குநராக (நிர்வாகம்) மகேஸ்வரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், செங்கல்பட்டு மாவட்டக் கல்வி அலுவலராக இருந்த (இடைநிலை) மகாலட்சுமிக்கு கடலூர் முதன்மைக் கல்வி அலுவலராகவும், வில்லிவாக்கம் மாவட்டக் கல்வி அலுவலராக (இடைநிலை) இருந்த முருகனுக்கு தேனி முதன்மைக் கல்வி அலுவலராகவும், பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலராக (இடைநிலை) இருந்த செல்வகுமாருக்கு திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலராகவும் பதவி உயர்வு வழங்கபட்டுள்ளது. அதேபோல், தொடக்கக்கல்வி இயக்ககத்தின் உதவி இயக்குநராக இருந்த ரவிச்சந்திரனுக்கு தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் துணை இயக்குநராகப் பதவி உயர்வு வழங்கபட்டுள்ளது.
