திருச்சி, ஜூலை 3 திருச்சி மாவட்டத்தில் 9,795 ஆசிரியர்கள் சிறப்பு டெட் தேர்வு எழுதவுள்ளனர். அரசுப் பள்ளிகளில் கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களில் 55 வயதைக் கடந்தவர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டத்தில் முதல்நாளான நாளை (4ம் தேதி) 9 மய்யங்களில் நடைபெறும் முதல் தாள் தேர்வினை 2,794 பட்டதாரி ஆசிரியர்களும், நாளை மறுநாள் (5 ஆம் தேதி) 25 மய்யங்களில் நடைபெறும் இரண்டாம் தாள் தேர்வினை 7,001 இடைநிலை ஆசிரியர்களும் என மொத்தம் 9,795 ஆசிரியர்கள் தேர்வு எழுதவுள்ளனர். இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முன்னேற்பாட்டுப் பணி களை பள்ளிக் கல்வித் துறையினர் மேற்கொண்டு வரு கின்றனர். இத்தேர்வையொட்டி 34 முதன்மை தேர்வு மய்ய கண்காணிப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், தேர்வறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் என 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் கிடப்பில் உள்ள பாலப்பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
திருச்சி, ஜூலை 3 திருச்சி மாநகரப் பகுதிகளில் கிடப்பில் உள்ள பாலம், சாலைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கு மாறு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை தலைமை நிர்வாக அறங்காவலர் பெ. அய்யாரப்பன், அமைச்சர் சீ. ரமேஷுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி யிருப்பதாவது: திருச்சி சிந்தாமணி ஓடத்துறை முதல் கரூர் சாலை வரையிலான (காவேரி நகர்) உயர்மட்டபாலம், திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் முதல் புத்தூர் நான்கு சாலை வரையிலான மேம்பாலம் அமைக்கும் திட்டங்கள் நிலுவையிலேயே உள்ளன.
இதேபோல, திருச்சி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை ரவுண்டானா முதல் சோமரசம்பேட்டை கண்ணாம்புகாரன் பட்டி வரை மாற்று சாலை (உய்யகொண்டான் கரைவழிச் சாலை) அமைக்கும் திட்டமும் நிலுவையில் உள்ளது. நொச்சியம்- அத்தாணி பிரிவு முதல் சென்னை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் புறவழிச்சாலை, திருச்சி பஞ் சப்பூர், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அந்தநல்லூர் பகுதியில் இணையும் சாலை பணிகள் முடிக்கப்படாமல் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. மேற்கண்ட திட்டப் பணிகளை ஆய்வு
செய்து, விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தெருவோர வியாபாரிகளிடம் காவல்துறையினர் கையூட்டு பெறுவதோ, இடையூறு செய்வதோ கூடாது தரைக்கடை வியாபாரிகள் வலியுறுத்தல்
திருச்சி, ஜூலை 3 தெருவோர வியாபாரிகளிடம் காவல்துறையினர் கையூட்டு பெறுவதோ, இடையூறு செய்வதோ கூடாது என தெருவோர தரைக்கடை சிறு கடை வியாபாரிகள் (ஏஅய்டியுசி) பேரவை வலியுறுத்தியுள்ளது.
தெருவோர தரைக்கடை சிறு கடை வியாபாரிகள் (ஏஅய்டியுசி) மேற்கு பகுதி பேரவை கூட்டம் உறையூர் திருச்சி மாவட்ட கைத்தறி நெசவாளர் திருமண மண்டபத் தில் அண்மையில் நடைபெற் றது. கூட்டத்துக்கு நகர விற்பனை பிரதிநிதி எம். சுமதி தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட ஏஐடியுசி பொதுச் செயலர் க. சுரேஷ் கொடியேற்றி சிறப்புரை நிகழ்த்தினார். இதில், 11 பேர் கொண்ட பகுதி குழு தேர்வு செய்யப்பட்டது. கூட்டத்தில், தெருவோர தரைக் கடை, சிறு கடை நடத்துவோருக்கு திருச்சி மாநகராட்சியால் வழங்க வேண்டிய அடையாள அட்டையை கணக்கெடுப்பு நடத்தி விரைந்து வழங்க வேண்டும். மாநகராட்சியால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே ரசீதுடன் தெருவோர தரைக்கடை சிறுகடை வியாபாரிகளிடம் மாநகராட்சி நிர்வாகம் வசூலிக்க வேண்டும்.
சட்டப்படி தெருவோர வியாபாரிகளிடம் காவல்துறையினர் கையூட்டு பெறுவதோ, இடையூறு செய்வதோ கூடாது. இது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகளிடம் புகாரளிப்பது, தனித்தனியாக முகாம்கள் நடத்தி வங்கி கடனுதவி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, நிர்வாகி சசிவர்ணம் வரவேற்றார். திரளான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
