காஞ்சிபுரம், ஜூலை 03- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள காஞ்சிபுரம் வந்தார். கட்சி நிர்வாகிகள் சந்திப்பு ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வீரபாண்டியன் கூறியதாவது:-
இந்தியா முழுவதும் அடுத்த மாதம் 6-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை கட்சி சார்பில் அந்தந்த பகுதி நிர்வாகிகள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம். இந்த பயணத்தின்போது சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள உள்ளூர் பிரச்சினைகளை கோரிக்கைகளாக முன்வைத்து 10 நாட்கள் நடைப்பயணம் நடத்தப்படும். அகிம்சையின் குறியீடு காந்தியார். தேசத்திற்கு காந்தியின் பெயரை சூட்ட வேண்டும் என்ற நிலையும் இருந்தது. அவரது பெயரை எடுத்து விட்டு 125 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்துக்கு விபி ஜி ராம் ஜி என்ற பெயரை ஏன் வைத்தார்கள் என்று தெரியவில்லை. மீண்டும் மகாத்மா காந்தியின் பெயரையே அந்த திட்டத்துக்கு வைக்க வேண்டும்.
100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தை 125 நாட்கள் திட்டமாக மாற்றியிருக்கிறது ஒன்றிய அரசு. நாங்கள் சொல்வது 200 நாள் வேலைத்திட்டமாக மாற்ற வேண்டும் என்பதே ஆகும். நாள்தோறும் ஊதியம் ரூ.336 என்பதை மாற்றி ரூ.700 ஆக்கிட வேண்டும். இந்த திட்டம் ஏழைகள் முன்னேறுவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டமாகும். புதிதாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். நிதிச்சுமை குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதை ஒன்றிய அரசு தாமதிக்காமல் கொடுக்க வேண்டும்.
கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்தவும், நெசவாளர்களின் கடன்களை முழுமையாக ரத்து செய்யவும் வேண்டும். பரந்தூரில் புதிய விமான நிலையத்தை அமைப்பது அந்த பகுதி மக்களின் கருத்துக்கு எதிரானது. எனவே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை அரசு கைவிட வேண்டும். தூய்மை பணியாளர்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகலை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க. ஆளும் டில்லியில்
ரூ.700 கோடி மருத்துவ ஊழல்
புதுடில்லி, ஜூலை 3 டில்லியில் பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது. முதலமைச்சராக ரேகா குப்தா உள்ளார்.
இந்நிலையில், டில்லியில் அரசு மருத் துவமனைகளுக்கு மருந்துகள், மருத் துவ உபகரணங்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் வாங்கியதில் பெரும் முறை கேடுகள் அரங்கேறியுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த ஊழலால் அரசுக்கு ஏற்பட்டுள்ள துல்லியமான நிதி இழப்பு எவ்வளவு என்பது குறித்து இன்னும் இறுதி முடிவுக்கு வரவில்லை. எனினும் சுமார் ரூ. 650 கோடி முதல் ரூ. 700 கோடி மதிப்பிலான நிதி இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளன. எனினும் இந்த மருத்துவ ஊழல் ரூ.1,000 கோடியை தாண்டும் என ஊழல் தடுப்புப் பிரிவு உண்மையயை ஒப்புக்கொண் டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பெரும் ஊழல் வழக்கு தொடர்பாக மருத்துவர் வத்சலா அகர்வால் (முன் னாள் சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல்), நீரஜ் சோப்ரா (மத்திய கொள்முதல் முகமையின் முன்னாள் கணக்குத் துணைத் தலைவர்) என இரண்டு மூத்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரையும் ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி மாவட்ட நீதிமன்றம் உத்தர விட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
