சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் எனது நினைப்பும்! – (1)

4 Min Read

 சில எண்ண ஓட்டங்கள்: 

45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் எனது நினைப்பும்! – (1)

அரசியல்

நமது வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளின் போது நமது எண்ண ஓட்டங்களும், நிலையும் – நினைப்பும் எப்படியெல்லாம் நம்மை வாட்டின; பாடாய்படுத்தின என்பது ஒரு 45 ஆண்டுகள் ஓடி விட்ட பிறகாவது பொதுவில் பகிர்ந்து கொண்டால் மனம் லேசாகும் – நமது பாரம் குறைவதோடு, மனமும் லேசாகி மேலும் பல கடும் சுமைகளைச் சுமக்க இடம் கிடைக்கு மல்லவா? அதனால் நமது – பல தரப்பட்ட – வாழ் வியல் வாசக நேயர்களிடம் பகிர்ந்து கொள்வதை ஒரு வாய்ப்பாகவே கருதி எழுதுகிறேன்.

காரணம் – நம் இயக்கமும், அதன் செயல் பாடுகளும் இரட்டை நிலைப்பாடு உடையவை அல்ல. திறந்த புத்தகம், தெளிவுள்ள பாதை – அவதூறு பாறைகளால் அடிக்கல் நாட்டப்பட்ட தனிப்பாதை!

அன்னையார்  – மறைந்தார் என்ற செய்தி தந்த அதிர்ச்சியிலிருந்து என்னால் எளிதில் மீள முடியவில்லை – முன்பாவது, அதாவது அய்யா என்ற இமயம் சாய்ந்த பிறகு “எல்லாவற்றையும் கவனித்து நம்மை வழி நடத்த நம் அன்னையாக இவர் இருக்கிறார்; அவர் அய்யா அவர்களால் பக்குவப்பட்டு பதமானவர்; அவரது தலைமையின் ஆளுமையை 1957இல் அரசமைப்புச்  சட்ட எரிப்புப் போரில் அய்யாவும் ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்களும் பெருந் தண்டனை பெற்று, வெஞ்சிறையில் வாடிவதங்கி சிலர் பலியான நிலையிலும் அவர் அந்த சூழ்நிலைகளை எப்படி எதிர் கொண்டார்; இயக்கத்தை எப்படி நடத்தினார்” என்பதை நான் அருகில் இருந்து புரிந்ததினால் – தெம்போடும் அம்மாவுக்குத் துணை நின்ற பணியே எம் பணியாக இருந்தது!

அத்தலைமை இடுகின்ற கட்டளையைச் செய்வது தான் நமது பணி; அது நமக்குப் பழக்கப்பட்ட பணிதான்; அன்னையாருக்கு நாம் ஓர் ஏவுகணையாக – இயக்கச் செயல்பாடுகளுக்கு இடையூறு செய்பவர்களைத் தக்க வகையில் அடையாளம் கண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் – தளர்ந்த உடல் நிலையுடன் உள்ள அவருடன் அவர் பெறாத பிள்ளையாகவே – அவர் ஆணை களை செயல்படுத்தும் முதல் தொண்டனாகவே நாம் இருந்தோம்.

இந்த இரண்டாம் நிலையில் (Secondary Role) நமக்குப் பொறுப்பு அதிகம் இல்லை; சொன்னதை செய்வதும், செய்வதை நாணயத்தோடும், நேர்மையோடும் – நம்மீது அய்யா  1957இல் நம்பிக்கையை  வைத்து கைதாகிச் சென்றபோது, அருகில் இருந்த என்னை நோக்கி – “நீங்கள் எப்போதும் அம்மாவுடன் அருகில் இருந்து பணி யாற்றுங்கள்”  – என்று கூறியதை கட்டளையாகக் கருதி, சட்டக் கல்லூரிக்குக்கூட இரண்டாம் தர  முக்கியத்துவத்தைத் தந்து – தேர்வில்கூட நான் தோற்றுப் போன முதல் கசப்பான அனுபவத்தைப் பெற்றதைவிட – அம்மாவின் ஆளுமைத் திறமை யையும், அன்பின், அனுபவத்தின் பரிமாணத்தை யும் உணர்ந்து அவர்களிடம் உற்ற பிள்ளையாக, ஒரு தொண்டனாகவே மாறி விட்டதால் – அய்யா மறைவிலிருந்து கழகப் பணியாற்ற பெரிதும் தயக்கமில்லாத மன நிலை தானே வந்து – “பெரியார் பணி முடிப்போம்” என்ற அவரது அழைப்பையே நம் கழகத்தவருக்கு ஆணை யாக்கி அணி வகுத்து பணி முடிக்கத் தூண்டியது.

ஆனால் அம்மா மறைந்துவிட்ட பிறகு அதிலும் ஆளுமை அனுபவம் அற்ற – சொன்னதைச் செய்வதே கட்டுப்பாடு என்று கருதி, தலைமைத்துவ பொறுப்பு முடிவுகளை எதிர்பார்த்து செயல்பட்ட நிலைமை மாறி  – இனி எப்படி பிரச்சினைகளையும், எதிரிகளையும், துரோக சிந்தையாளர்களின் தொல்லையையும் சமாளிக்கப் போகிறோம் என்ற மலைப்பைத் தந்த நிலை.  நம்மை அன்னை அவர்கள் நம்பியதற்குரிய நியாயத்தை உலகுக் காட்டியாக வேண்டிய தனிப் பொறுப்பல்லவா நம் தலைமீது –

இந்தச் சிறு குருவி அந்தப் பெரும் பனங்காயைச் சுமந்து இலக்கை அடைய முடியுமா என்று நினைத்த போதெல்லாம் – தனித்துப் போக, இருளுக்குள் என்னை சிறைப்படுத்திக் கொண்டு – யாருக்கும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் மனதில் அழுதேன் – நானே தேற்றிக் கொண்டேன்.

மற்ற சிலர் நினைத்ததைப்போல நான் அதனை எதிர்பார்க்கவும் இல்லை – இயக்க வரலாற்றில் எனக்குக் கிடைத்த வாய்ப்புகளோ, ஒப்படைத்த பொறுப்புகளோ விரும்பி, வருந்தி, திட்டமிட்டு பெற்றவைகளே அல்ல – 

எதிர்பாராது கிடைத்து வியப்படையச் செய்து, வினையாற்றிடும் பக்குவத்தை எனக்கு பயிற்சிக் களமாகத் தந்தவைதான்! சிக்கல்கள் நிறைந்த பொறுப்பின் சுமையின் பாரம் அழுத்தியது.

இழிந்த குற்றச்சாற்று சேற்றை வாரி இயக்கத்தின் துரோகப் படலத் தொல்லையாளர்கள் தூற்றுதல் பாணத்தை வீசியபோதெல்லாம் – நான் அய்யா எனக்குச் சொன்ன ஓர் ஆறுதல் அறிவுரையை நினைத்து நினைத்து ஆறுதலும் அமைதியும் கொண்டு, அடாதவர்களை அலட்சியப்படுத்தி, அய்யா வழியில் அம்மாவின் நம்பிக்கை என்ற உற்சாகத்தினால் எனது கடும் பயணத்தைத் துவக் கினேன் – அப்படி என்ன அய்யா சொல்லியிருப்பார் இவரிடம் என்பது தானே உங்கள் கேள்வி – அதனை நாளை பார்ப்போம்!

(வளரும்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *