
கழகக் கொள்கை உறவுகளே, வணக்கம்!
உங்கள் எல்லோரையும் சேலத்தில் 4 ஆம் தேதி சந்திக்க மிக்க ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆம், அறப்போராட்டக் கள வீரர்கள் – இளைஞர்கள் பட்டியல் வேண்டுமென்று கேட்டவுடன், பொறுப்பாளர்கள் சுறுசுறுப்புத் தேனீக்களாக மாறிவிட்டார்கள். பட்டியல்கள் குவிந்துகொண்டே இருக்கின்றன. சேலம் பொதுக்குழுவுக்கு ஏற்பாடுகளோ விரைந்து சிறப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. எதிர்பார்த்ததைவிட ஏராளாமான பேர் வரத் தயாராக இருக்கிறார்கள் என்ற செய்தி ஒரு பக்கத்திலே இருந்தாலும், நாங்கள் எதிர்பார்த்ததைவிட ஏராளமான இளைஞர்கள் கிளர்ச்சியில் ஈடுபடத் தயாராக இருக்கிறார்கள் என்பது உற்சாக வெள்ளமாக எங்களுக்குள் பெருக்கியிருக்கிறது.
அறிவாசான் தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் தங்களுக்குப் பிறகும் மிகப்பெரிய அளவுக்கு இந்த இயக்கம் நிலை நாட்டப்படும் என்று நம்பிக்கையுடன் இருந்தார்கள். அந்த நம்பிக்கையை நாளும் நாம் நியாயப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
69 ஆண்டுகளுக்கு முன்பு… இன்றைய இளை ஞர்கள் பலர் பிறக்காத காலம். ஏன், வயதானவர்கள் சிலர்கூட பிறக்காத அந்த காலகட்டத்தில்தான், ’ஜாதியை ஒழிக்க சட்டத் திருத்தம் வேண்டும்; அதைச் செய்வதற்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்கிறோம்; அந்த அவகாசத்தைப் பயன்படுத்திக்கொண்டு நீங்கள் செய்தால், அரசியலமைப்புச் சட்டத்தை எரிக்க மாட்டோம். ஆனால், நீங்கள் அதற்குள்ளே வேறு வகையாக நடந்துகொண்டால், நாங்கள் கட்டாயம் அரசியலமைப்புச் சட்டத்தை எரிப்போம்’ என்று தந்தை பெரியார் அவர்கள் மிகப்பெரிய ஓர் அறிவிப்பைக் கொடுத்தார்கள்.
69 ஆண்டுகளுக்கு முன்னாலே… 1957 இல்
உடனடியாக அன்றைய ஆதிக்க அரசு, என்ன செய்தது என்று சொன்னால், மிரட்டிப்பார்த்தது! அதுமட்டுமல்ல, நம்மை மிரட்டிப்பார்ப்பதற்காக, ‘‘அப்படி நீங்கள் சட்டத்தை எரித்தால் என்ன தண்டனை என்பதற்கு இதுவரை சட்டமில்லை என்றாலும், புதிய அவசரச் சட்டத்தைக் கொண்டு வருவோம். மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை உச்சபட்சம்; 1,000 ரூபாய் அபராதம் என்று அந்த சட்டம் இருக்கும்’’ என்று வந்த நேரத்தி லேயும், கழகத் தோழர்கள் பட்டியலை உற்சாகத்தோடு கொடுத்துக்கொண்டிருந்தனர். இப்படி போட்டால் தோழர்கள் அஞ்சி போராட்டத்துக்கு வரமாட்டார்கள் என்பது டில்லியின் எதிர்பார்ப்பு. ஆனால், பெரியார் எப்படிப்பட்டவர்? அஞ்சாத சிங்கம்! அவ்வளவு முதியவராக இருந்த அவர், ஒரே நாளிலே, அந்த அடக்குமுறைச் சட்டம் வருகிறது என்று தெரிந்தவுடனே, முன்னாலே நிற்கக்கூடிய ஓர் இளைஞராகவே மாறிவிட்டார்! ‘வயதில் அறிவில் முதியார்! வாய்மைப் போருக்கு என்றும் இளையார்!’ என்று காட்டக்கூடிய வண்ணத்திலே அய்யா அவர்கள் கொடுத்த அறிவிப்பு என்ன தெரியுமா நண்பர்களே?
8.11.1957 அதாவது 69 ஆண்டுகளுக்கு முன்னால், எப்படிப்பட்ட தலைவரை வழிகாட்டியாகக் கொண்டிருக்கிறோம்? அதனால்தான் ‘தமிழ்நாடு பெரியார் மண்!’ என்பதில் பெருமைப்படுகிறது! பெரியார் அறிக்கை விடுகிறார். ‘‘இளைஞர்களே! தோழர்களே! வாலிபர்களே’’ என்று தொடங்கி, ‘விடுதலை’யில் அவர் கைப்பட எழுதுகிறார்கள்.
‘‘தோழர்களே! நான், மூன்று ஆண்டு களுக்கோ, பத்து ஆண்டுகளுக்கோ, நாடு கடத்தலுக்கோ, தூக்குக்கோ மற்றும் பிரிட்டிஷ்காரன் காங்கிரஸ் கிளர்ச்சியின் போது கையாண்ட எந்த விதமான கொடிய தீவிரமான அடக்குமுறைகளை நம் மீதும், கழகத்தின் மீதும் பிரயோகித்தாலும் கூட அவைகளுக்கு பயப்பட்டு என் லட்சியத்தையோ திட்டத்தையோ மாற்றிக் கொள்ளப் போவதில்லை! கழகத் தோழர்களே! தீவிர இலட்சியவாதிகளே! நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்து விட வேண்டியதில்லை; பயந்து விடவும் மாட்டீர்கள். சட்டத்தை பார்த்துப் பயந்துவிட்டதாக பேர் வாங்காதீர்கள்! ஆகவே இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டு தீர்மானத்தை நிறைவேற்ற பெயர் கொடுங்கள்!”
என்று ஒரு வேண்டுகோள் (8.11.1957) விடுத்தார்.
10,000 பேர் கொளுத்தினார்கள். 3,000 பேரைத்தான் கைது செய்ய முடிந்தது அன்றைய ஆட்சியாளர்களால். இது வரலாறு. ஒருநாள், இருநாள் அல்ல தோழர்களே! மூன்றாண்டு கடுங்காவல்! நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த பெண்கள் சிறைக்குச் சென்றார்கள்! அதே போல் குடும்பத்தில் வேறு எந்தவித வசதியும் இல்லாதவர்கள்கூட அன்றாட வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல், பெரியார் கட்டளையை ஏற்றார்கள். சிறைச்சாலைக்குப் போனார்கள்.
ஆம், அதே பெரியார் மறையவில்லை…. இன்றைக்கும் வாழுகிறார் என்பது வெறும் வாய்ப்பேச்சு மட்டுமல்ல. அடுத்தடுத்த பிரச்சி னைகள் வந்துகொண்டேயிருக்கும் என்ற இந்தக் காலகட்டத்திலே, அறப்போர் கிளர்ச்சிகள் தேவைப்படுகின்றன என்று அறிக்கை ஒன்றை விட்டேன். எப்போதும் தயார் நிலையில் 1000 இளைஞர்களைத் தாருங்கள்; பட்டியலைத் தயாரித்துத் தாருங்கள் என்று கேட்ட நேரத்திலே பம்பரமெனச் சுழன்றார்கள். தேனீகளாய் ஓடினார்கள்; சுறுசுறுப்புக் காட்டினார்கள்; எங்களையே வியப்புக் குறியில் தள்ளிவிட்டார்கள் களத்திலே! பட்டியல்கள் குவிந்துகொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டமும் போட்டிப் போட்டுக்கொண்டு தந்து கொண்டிருக்கின்றன. எனவே தான் பெரியாருடைய அந்தப் படை. கட்டுப்பாடு மிகுந்த அந்த இராணுவப்படை தயாராகிறது என்பதை நேரிலே காணும்போது, பொதுக்குழுவுக்கு முன்னாலேயே தனித்த உற்சாகத்தை நாங்கள் பெற்றிருக்கிறோம்! எங்களுக்கு இப்போது வயது வெகுவாகக் குறைந்து விட்டது! உங்களைப் பார்க்கும் போது இன்னும் குறையும். மற்றவர்கள் எங்கெங்கோ ஓடிக்கொண்டிருக்கிற போது, நாம் களத்துக்குத் தயாராவோம்.
இதுதான் கழகத்தின் கட்டளை!
கிளம்பிவிட்டீர்களா?
சந்திப்போமா?
வாருங்கள் சேலத்திற்கு!
