பெரியார் வீட்டுத் திருமணம்!
திராவிட இயக்க நூல்கள் குறித்தும், திராவிட இயக்கம் பற்றிய நூல்கள் குறித்தும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டுரையில் நாம் மறுபடியும் திராவிட இயக்க வரலாற்றை நோக்கித் திரும்புகிறோம். நான் முதலில் சொன்னதைப் போல வரலாறு குறித்து ஏராளமான நூல்கள் வந்திருக் கின்றன. குறிப்பிடத்தக்க, சில நூல்களைப் பற்றித்தான் நாம் பார்க்கிறோம்.
திராவிட இயக்கத்தின் வரலாறு எங்கே தொடங்குகிறது? `திராவிடம்’ என்கிற சொல், கால்டுவெல்லுக்குப் பிறகு பெருவழக்காயிற்று. அதனைத் தொடர்ந்து 19-ஆம் நூற்றாண்டின் மத்தியிலேயே திராவிட இயக்க உணர்வுகள் காலூன்றின. 1912-ஆம் ஆண்டு திராவிடர் சங்கத்தை நடேசனார் தொடங்கும்போதே திராவிட இயக்கம் இந்த மண்ணுக்கு வந்துவிட்டது. இருந் தாலும், இன்றைக்கும் திராவிட இயக்கத்தினுடைய வரலாறு எங்கே தொடங்குகிறது என்றால், நீதிக்கட்சியினுடைய தொடக்கத்திலே என்றுதான் பலபேர் கருதுகிற ஒரு நிலை இருக்கிறது.
திராவிட இயக்கத்தின் மூல ஆவணம்
அந்த நீதிக்கட்சி, அதாவது `தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ 1916-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போது ஓர் அறிக்கையை அது வெளியிட்டது. எப்படி? 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில் கார்ல் மார்க்சும் ஏங்கல்சும் `தி கம்யூனிஸ்ட் மேனிஃ பெஸ்டோ’ (The Communist Manifesto) என்று பொதுவுடைமை அறிக்கை ஒன்றை வெளியிட் டார்களோ, அதுபோல நீதிக்கட்சி, `பார்ப்பனர் அல்லாதவர்களுக்கான அறிக்கை’ (The Non-Brahmin Manifesto) என்ற ஓர் அறிக் கையை வெளியிடுகிறது. அதுதான், திராவிட இயக் கத்தினுடைய `மூல ஆவணம்’ என்று நாம் சொல்லலாம்.
அங்கிருந்துதான் நம் இயக்கத்தின் வரலாறு தொடங்குகிறது. எனவே, நீதிக்கட்சி வரலாற்றைச் சரியாகப் படித்தால் திராவிட இயத்தினுடைய தொடக்கக்கால வரலாற்றை அறிகிறோம் என்று பொருள். அதனைத் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர்கள் இரண்டு தொகுதிகளாக `நீதிக் கட்சி வரலாறு’ என்னும் நூலாகத் தந்திருக்கிறார்.
இதழால்… தமிழால்… நீதி!
இந்த நூல் 1916-ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த நிலையை விளக்கி, 1916 ஆம் ஆண்டு நீதிக்கட்சி தொடங்கப்பட்டபோது நிலவிய நிலையையும் விளக்குகிறது. அதனுடைய பெயர் உண்மையிலேயே தென்னிந்திய நல உரிமை சங்கம் என்று இருந்தாலும், அவர்கள் நடத்திய இதழின் பெயர் ‘ஜஸ்டிஸ்’ (Justice) என்பதால் ஜஸ்டிஸ் கட்சி, தமிழில் நீதிக்கட்சி என்று ஆயிற்று. அப்போது வெளியிடப்பட்ட அந்த `பார்ப்பனர் அல்லாதவர் களின் அறிக்கை’ அனைத்தும், ஆவணங்களாக அந்த நூலில் தரப்பட்டி ருக்கின்றன
1920-ஆம் ஆண்டு இறுதியிலேதான் நீதிக்கட்சி, `சென்னை ராஜ்ஜியம்’ என அழைக்கப்பட்ட `மெட்ராஸ் பிரசிடென்சி’யில் ஆட்சிக்கு வந்தது. அப்படிப் பார்த்தால் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு நாம் இருக்கிறோம். அந்த நீதிக் கட்சியினுடைய ஆட்சி தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு அமைச்சரவையிலும் நம் மக்களுக்காகச் செய்யப்பட்ட நன்மைகள் அனைத்தையும் பட்டிய லிட்டு, திருநாவுக்கரசு அவர்கள் தருகிறார்கள்.
சாதனைகளின் பட்டியல்
யார் யார் முதலமைச்சராக இருந்தார்கள்? முதல் ஆறு மாதம் மட்டும் கடலூர் சுப்பராய ரெட்டியார் இருந்தார். பிறகு பனகல் அரசர்தான் ஏறத்தாழ அய்ந்து ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார். அதற்குப் பிறகு ஒரு சரிவு, 1926-ஆம் ஆண்டுத் தேர்தலில் ஏற்பட்டது. பின்னர் மறுபடியும் பொப்பிலி அரசர் என்று சொல்லப்படுகிற ரெங்காராவ் என் பவர் தலைமையில் 1936 -ஆம் ஆண்டு வரையில் நீதிக் கட்சி ஆட்சி தொடர்ந்தது. நீதிக்கட்சியின் அனைத்து ஆட்சியிலும் நடந்த எல்லாவிதமான அரசியல் நிகழ்வுகளையும், ஒவ்வொரு அமைச்சர வையிலும் செய்யப்பட்ட சாதனைகளையும் இந்தப் புத்தகம் விரிவாகவும், அதே நேரத்தில் படிப்பதற்கு எளிமையாகவும் தருகிறது.
இந்த நீதிக்கட்சி வரலாறு நூலில், நாம் வியப் படைகிற அளவுக்குப் பல செய்திகள் இருக்கின்றன. நான் முன்பே குறிப்பிட்டது போல பெண்களுக்கு வாக்குரிமை தந்த இயக்கம் நீதிக் கட்சிதான். தாழ்த் தப்பட்ட மக்கள் பேருந்துகளிலேயே ஏறக்கூடாது என்ற நிலையில் அதற்கு எதிராக ஆணையிட்டது நீதிக்கட்சிதான்.
அதாவது, அன்றைக்கு சவுந்தர பாண்டியனார், ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக இருக்கிற போது இப்படி யாராவது எந்தப் பேருந்திலாவது தாழ்த்தப்பட்டவர்கள் ஏறக்கூடாது என்று சொன் னால், அந்தப் பேருந்தினுடைய உரிமம் நீக்கப்படும் என்கிற அளவுக்குக் கடுமையாக எச்சரித்தார். இவ் வாறு ஒரு சமத்துவத்தைக் கொண்டு வர முயற்சித்த இயக்கம் நீதிக்கட்சியுடைய இயக்கம்தான்.
ஆணையிட்டவர் தலைமையில், மாலையிட்டவர்கள்!
அது மட்டுமா… தமிழை, பல்கலைக்கழகங்களில் பாட மொழி ஆக்கிற்று. அறநிலையத்துறை தேவஸ் தானம் போர்டு என்பது நீதிக்கட்சி ஆட்சியிலேதான் உருவாயிற்று. இப்படிப் பல்வேறு செய்திகள்…. எல்லாவற்றையும் தாண்டி, முத்தையா முதலியார் அவர்கள் அமைச்சராக இருக்கிறபோது தான் `கம்யூனல் ஜி.ஓ’ என்று சொல்லப்படுகிற `இட ஒதுக்கீட்டு ஆணை’, தமிழ்நாட்டில் முதன்முதலாக வந்தது. 1928-ஆம் ஆண்டிலிருந்து அது நடை முறைக்கு வந்தது.
அதனால்தான் எத்தனையோ திருமணங்களை நடத்தி வைத்திருக்கிற அய்யா பெரியார் அவர்கள், தன் வீட்டுத் திருமணத்தை (ஈ.வெ.கி.சம்பத் – சுலோச்சனா சம்பத் ஆகியோரின் திருமணம்) முத்தையா முதலியாரைக் கொண்டு, அவரைத் தலைமை ஏற்க வைத்து நடத்தினார் என்பன போன்று ஆயிரம் ஆயிரம் செய்திகளை அடக்கி யிருக்கிற, நாம் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல் ‘நீதிக்கட்சி வரலாறு’. இது பொது மக்கள் படிக்க வேண்டிய நூல். திராவிட இயக்கத் தினருக்கோ இது பாடநூல்!
– நன்றி: ‘முரசொலி’